Tuesday, June 21, 2016

பிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்

பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகிய பிரான்சிஸ் இட்டிகோரா  தமிழில் வாசிக்க கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

பெருத்த மழையின் பின்னணியில் இருக்கும் காற்று , நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.  அது போல, நீண்ட உலக வரலாற்றின் பக்கங்களில் பலரின் பங்களிப்புகளும் இருப்புகளும், மறைக்கப்பட்டும், மாற்றப்பட்டும், மறந்தும் போயிருக்கின்றன. ஆனபோதும் அவ்வாறானவர்களின் சிலரது வாழ்க்கையை, மக்கள் கதைகள் மூலமும், பழக்க வழக்கங்களின் மூலமும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவற்றை நகர்த்தி கொண்டுதான் இருக்கின்றனர்.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த, பிரான்சிஸ் இட்டிகோரா எனும் மிளகு வியாபாரியின் கதை, கேரள மாநிலத்தின் குன்னங்குளத்து வியாபார பண்பாட்டின் வரலாற்றில் இருந்து உருவாகிறது.அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வாழும் , கோரா பாட்டனின் வழித்தோன்றலாகிய  இட்டிகோரா என்பவனுக்கும்,  கொச்சினின் 'தி ஸ்கூல்'(தி ஆர்ட் ஆப் லவ் மேக்கிங் ) எனும் நிறுவனத்திற்கும் இடையே நடைபெறும் மின்னஞ்சலின்  வழியாக, பிரான்சிஸ் இட்டிகோராவின் வரலாறு நம் கண்முன்னே விரிகிறது.

நிகழ்காலத்தில் நிகழும் இட்டிகோராவின் சம்பவங்களும், அவன் மூலம் சொல்லப்படும் பிரான்சிஸ் இட்டிகோராவின் வரலாறும் தண்டவாளத்தில் செல்லும் ரயிலைப்போல விறுவிறுவென கதையை முன்னெடுத்துச் செல்கின்றன.  

நாவலின் ஆரம்பம் வன்முறையான காமமும்,   கனிபால் எனப்படும் நரபோஜிகளைப்  பற்றியும்(மனித மாமிசம் உண்பவர்கள்) , ஒன்றிணைத்து இருப்பதால் , ஒருவித அருவருப்பும் தயக்கமும் அதனுடன் கூடிய எதிர்பார்ப்பையும் வாசகனின் மனதில் ஏற்படுத்துகிறது.

1456 இல் கேரள குன்னங்குளத்தில் பிறந்த பிரான்சிஸ் இட்டிகோரா,  பல மொழிவித்தகராகவும் , கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவராகவும் அறியப்படுகிறார். நாவலின் ஒரு இடத்தில் பூஜ்யத்திற்கும் அனந்தத்திற்கும் (infinity) அவர் கொடுக்கும் விளக்கம் ஆச்சர்யமூட்டுகிறது.  தன் சொந்த நாட்டில் விளைந்த மிளகைக்கொண்டு அவர் பல நாடுகளில்  நடத்திய கடல் வணிகம் , குறிப்பாக இத்தாலியில் அவருக்கிருந்த அரசியல் உறவு  பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. 

வெறும் வணிகம் மட்டுமே வாழ்க்கை என்றில்லாமல் , தன் இடம் சார்ந்த  மக்களை வறுமையிலும் , சமூக ஒடுக்கமுறையிலும் இருந்து  மேலெடுத்து வர பிரான்சிஸ்  இட்டிகோரா மேற்கொண்ட வழிமுறைகள் ஒரு சிறந்த வியாபாரி என்ற  நிலையை கடந்து ஒரு நல்ல தலைவனின் இயல்பை காட்டுவதாய்  இருக்கிறது.  அமைதியாய்  ஒரு சமுதாய புரட்சியை,  தன் தொழில் மூலம் செய்தார் என்றும் சொல்லலாம்.

இந்நாவலாசிரியர் , பிரான்சிஸ் இட்டிகோராவின் வரலாற்றை, ஹைபேசியன் சொசைட்டி , பெர்மாட்ஸ் லாஸ்ட் தியரம், கேரள ஸ்கூல் ஆப் மதமடிக்ஸ் மற்றும்  ஐரோப்பியன் மதமேட்டிக்ஸ் தொடர்பு , வாடிகன் போப் ரகசிய உறவு, பால் எர்தோஷ் (ஹங்கேரியன் கணிதவியலாளர் ), La Fornarina பெயிண்டிங்  என்று  பல தளங்களில் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் கோர்த்து சென்றுள்ளார். 

குறிப்பாக ஹைப்பேஷியா என்ற பெண்ணைப் பற்றிய சிறுகதை. இச்சமூகம் தனிப்பட்டவர்களின் நம்பிக்கைகளை எவ்வாறு அலட்சியப்படுத்தி சித்ரவதை செய்தது , மூட நம்பிக்கைகளை சாடுபவர்களை எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தியது  என்பதை பதைபதைப்புடன் சொல்கிறது.  அதுவும் பெண் என்ற பட்சத்தில், அவளுடைய உடலை பலி வாங்க துடிப்பது கொடுமையின் உச்சகட்டம்.

பிரான்சிஸ் இட்டிகோராவின் இறப்பின் உண்மையை திரித்து அல்லது ஏற்று கொள்ள மறுத்து  அவரை குன்னங்குளத்து மக்கள் தெய்வமாய் நினைப்பது , அவர் செய்த நற்செயல்களின் பலன்தான் போலும்.

பதினெட்டாம் கூட்டத்தாரை பற்றி கதைமாந்தர்கள் அறிந்து கொள்ள செல்லும் இடங்கள் ஒருவித மர்ம முடிச்சுக்களை சுட்டிக் காட்டிக்கொண்டே   இருக்கின்றன. 

பதினெட்டாம் கூட்டத்தாரின் வேதநூல் எனப்படும் நூலில் குறிப்பிட்டு  உள்ளது போல  கோராவுக்கு கொடுப்பது எனும் வழக்கம் இன்றும் உள்ளதா எனத்  தெரியவில்லை.  ஆனால் அவ்வழக்கத்தை இந்நாவலின் வழியே படிக்கும் போது  திடுக் திடுக் என்றிருக்கிறது . அதுவும் சூஸன்னா எனும் கதாபாத்திரம் சொல்லி கேட்கும்போது  திகில் கலந்த அருவருப்பு ஏற்படுகிறது.  வயதுக்கு வந்த  பெண்ணை தனி அறையில்  அடைத்து , என்றோ இறந்து போன இட்டிகோராவுடன்  உடலுறவு கொள்வது என்பது  ஒருவித அச்சத்தை நம்முள் படரவிடச் செய்கிறது. 

கோராவுக்கு கொடுப்பது எனும் வழக்கம் இன்றும் சில கிருஸ்துவ குடும்பங்களில் நடைமுறையில் இருக்கலாம் என்று நினைக்கும் போது மனதின் அடியில் ஒரு கிலி உருவாகிறது.

கோராப்பூட்டு எனும் பழக்கம் , இய்யால கோதை எனும் பெண்மணி ,  கொக்கோ டி மெர்க்கு  விதை போன்றவை இந்நாவலுக்கு மேலும் மெருகேற்றி செல்கின்றன. கோராப்பாட்டன் வழி எனப்படும் குன்னங்குளத்து  கடைத்தெரு வழி உண்மையிலேயே இருக்குமானால் கண்டிப்பாக ஒரு தடவை சென்று   பார்க்க  வேண்டும் என ஆவல் மேலிடுகிறது.

நிகழ்காலத்தில்  வாழ்ந்து கொண்டிருக்கும் இட்டிகோராவின் வாழ்வு, பல ஒடுக்கப்பட்ட உதாசீனப்படுத்தப்பட்ட நாடோடி  மக்களின் அடையாளமாகவே உள்ளது. மனித உடலை சுட்டு சாப்பிடும் இடங்கள் , வித்தியாசமான வழிபாட்டு முறைகள்  நம்மை வேறு உலகத்திற்குள் கொண்டு செல்கிறது.  

இரண்டாம் உலகப்போரின் போது சதாமுக்கும் டொனால்டு ராம்ஸபெல்ட்க்கும் நடந்த உரையாடல் , உலக சினிமா என்று இவற்றையும் தொட்டு செல்கிறார் நாவலாசிரியர். பிரான்சிஸ் இட்டிகோராவின் கணிதம் சார்ந்த பங்களிப்பை பற்றி தி ஸ்கூல் இல் நடக்கும் கலந்துரையாடல், நமக்கு உலக யதார்த்தத்தை சொல்லி தருகிறது.

என்னதான்  ஒருவனை பல தலைமுறைகளாக ரகசிய தெய்வமாய் நினைத்திருந்தாலும்,  அவனுடைய வாரிசு  என்றொருவன் வரும்போது அவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, யதார்த்த சூழலில்  இச்சமுதாயம்  கண்டிப்பாய் கொடுத்தே தீரும் என்பதை நாவலின் கடைசி பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம். 

பிரான்சிஸ் இட்டிகோராவை வாசித்த பின், சில கிருஸ்துவ நண்பர்களை  கடந்து போகும் வேளையில்  , இவர்கள் பதினெட்டாம் கூட்டாளியை சேர்ந்தவர்களோ  என்ற சந்தேகமும்  குறுகுறுப்பும்  வந்து போகிறது.