Tuesday, May 26, 2009

மீனாட்சி அக்கா ....

என் பேரு அபிராமி.எங்க அம்மாவும் அப்பாவும் என்னய அபிராமின்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா எனக்கு எங்க மீனாட்சி அக்கா கூப்பிடுறதுதான் பிடிக்கும்."அபிக்குட்டி" ,"அபிசெல்லம்" ன்னு அடிக்கடி கொஞ்சுவா.எங்க அக்கா ,உயரமா கொஞ்சம் ஒல்லியா ,ரொம்ப அழகா இருப்பா.பல்லெல்லாம் அடுக்கிவச்ச மாதிரி இருக்கும்.எப்பவும் பாவாடை சட்டைதான் போடுவா.ஏதாவது விசேஷத்துக்கு போனா மட்டும் மஞ்ச தாவணியும் , சிவப்பு பூப்போட்ட பாவாடையும் சட்டையும் போடுவா.அவளுக்கு என்னைய விட பலமடங்கு முடி.இடுப்புக்கு கீழ்தான் தொங்கும்.அவ கண்ணு ரெண்டும் பெரிசா மீனு மாதிரி இருக்கும்.அவ கண்ணுக்காகத்தான் "மீனாட்சி" னு பேர் வச்சேன்னு அப்பா ,வீட்டுக்கு வர்றவங்ககிட்டஎல்லாம் சொல்லுவாரு.

எனக்கு எங்க அக்காவ ரொம்ப பிடிக்கும்தான்.ஆனா சிலநேரம் அவளோட சண்டை போடத்தான் ரொம்ப பிடிக்கும்.இப்படித்தான் ஒரு நாளு,எங்க வீட்டு பக்கமா இருக்குர வேப்பமரத்துல ஊஞ்சல் கட்டி ஆடிக்கிட்டு இருந்தோம்.என்னைய வச்சு கொஞ்ச நேரம்தான் ஆட்டினா.அப்பறம் அவளே ரொம்ப நேரம் விளையாடினா. எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.அப்பாகிட்ட சொல்றேன்னு அவகிட்ட டூ விட்டுட்டு அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சுட்டேன்.எங்க இருந்து வந்ததுனே தெரியல, ஒரு வெள்ள கலர் கோவில்மாடு என் முன்னால ஓடி வந்துட்டு இருந்துச்சு.எனக்கு பயம் பயமா வந்துடுச்சு.”ஓ” னு அழுதிட்டேன்.எங்க அக்காதான் ஊஞ்சல்ல இருந்து குதிச்சு ஓடிவந்து, என்னைய தூக்கிட்டு வளைஞ்சு வளைஞ்சு ஓடி வீட்டுக்கு வந்துட்டா.

வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம்தான் தெரிஞ்சது அவ உள்ளங்கையிலயும்,கால் மொட்டிலயும் சிராய்ப்பு.பாவம் ஊஞ்சல்ல இருந்து கீழ விழுந்துட்டால அதான்.உடனே அவள கட்டிக்கிட்டேன்.எனக்கு எங்க அக்கானா ரொம்ப பிடிக்கும்.சில நாள்லாம், என்னய தொட்டில போட்டு தாலாட்டியிருக்கா.என் வெயிட்டு தாங்காம ரெண்டு நாள்லேயெ அம்மாவோட சேல கிழிஞ்சிடும். அதனால அம்மாகிட்ட திட்டு எல்லாம் வாங்கிருக்கா. நீங்களே சொல்லுங்க,யாராவது ரெண்டாப்பு படிக்கிர புள்ளய தொட்டில்ல போட்டு ஆட்டுவாங்களா?.ஆனா,எனக்கு பிடிக்கும்னு என்ன போட்டு ஆட்டுவா.அவ நல்லவ.

எங்க அப்பா படுக்குற ஈஸி சேருல படுத்துக்குறதுன்னா,அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.அதுலயும் பச்ச கலர் துணிதான் சேருல கட்டியிருக்கனும்னு, அப்பாகிட்ட அடம் பிடிச்சு ரெண்டு உறை வாங்கிட்டா.வாரத்துக்கு ஒருதடவை ,அத துவைச்சும் மாத்திடுவா.அவ ஈஸி சேருல படுத்துருக்கும் போது, நான் போனேனா என்னைய அதுல படுக்க வச்சிட்டு,கீழே உட்கார்ந்துகிட்டு,நிறைய கத சொல்லுவா.எனக்காக,பக்கத்து வீட்டு ரமேஷோட பாலமித்திரா, அம்புலிமாமால்லாம் படிச்சு கத சொல்லிருக்கா.

கடைக்கெல்லாம் போனா,எனக்கு பிடிச்ச தேன்மிட்டாயெல்லாம் வாங்கித்தருவா.எனக்கு காது குத்துன அன்னிக்கு என்னய ஃபுல்லா தூக்கி வச்சுகிட்டே திரிஞ்சா.நான் ஸ்கூலுக்கு போகும் போது,சைடு வகிடெடுத்து,அழகா படிய சீவி,பச்ச கலர் ரிப்பன் கட்டிவிட்டு,ஏதாவது ஒரு பூ வச்சு விடுவா.

ஒருதடவை,எங்க அப்பா அவரோட ஃப்ரண்ட்ஸோட ராமேஸ்வரம் போனாரு.என்னையும் கூப்பிட்டு போயிருந்தாரு.பெரிய பிள்ளைங்கரதால, அக்காவ வரவேணாமுனுட்டாரு.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால, ராமேஸ்வரத்துல இருந்து வரும்போது,எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி பாசிமணி வாங்கிட்டு வந்தேன்.அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.உடனே போட்டுகிட்டா.எனக்கும் போட்டுவிட்டா.

தீபாவளிக்கு முத நாளு,எங்க அம்மா இட்லிக்கு,உரல்ல மாவு அரச்சிகிட்டு இருந்தாங்க.அவ சும்மா இருக்கலாமுல்ல, உடனே அம்மாகிட்ட போயி,”குடும்மா.நான் அரைக்கிறேன்” னு ,பாதிலேயெ எங்கூட விளையாடாம போயிட்டா.கோவம் கோவமா வந்துச்சு.கொஞ்ச நேரம் கழிச்சு, அவ அரைக்கிறத நிறுத்திட்டு,ரெண்டு கையையும் இடப்பக்கமா நெஞ்சுல வச்சுகிட்டு, குனியவும் நிமிரவும் செய்தா.அவ கண்ணெல்லாம் கலங்கிருந்துச்சு. எனக்கு பயமா போயிடுச்சு.அவ பக்கத்துல போயி நின்னுகிட்டேன்.அவ உடனே எங்கிட்ட அம்மாவ கூப்பிட சொன்னா.நானும் ,எங்க அம்மாகிட்ட ஓடிப்போயி சொன்னேன்.என் கையில இருந்த பால்கோவாவெல்லாம் கீழ விழுந்துடுச்சு தெரியுமா!

அப்பறம்,எங்க அம்மாவும் அப்பாவும்.என்னய புஷ்பாக்கா வீட்டுல விட்டுட்டு,வெள்ள கலர் அம்பாஸிடருல அக்காவ கூப்பிட்டுகிட்டு போனாங்க.எனக்கு தூக்கமே வரல .எங்க அக்காவ பாக்கணும் போல இருந்துச்சு.பாவம் அவளுக்கு வலிச்சிருக்கும்ல.

அடுத்த நாள்.எங்க அப்பா மட்டும் வந்து,அம்மா பீரோக்குள்ள இருந்து, எனக்கு டிரஸ்ஸும்,மேரி பிஸ்கட்டும்,புது செப்பு சாமானும் வாங்கி கொடுத்துட்டு, புஷ்பாகா வீட்டுலயே விட்டுட்டு போயிட்டாரு.எனக்கு கஷ்டமா இருந்துச்சு.

ரெண்டு நாள் கழிச்சு, எங்க அப்பா மட்டும் சில ஆளுகள கூப்பிட்டு வந்தாரு.அவங்கெல்லாம் எங்க வீட்டு முன்னாடி கொட்டக போட்டுகிட்டு இருந்தாங்க.எங்க அழகம்மா பாட்டி,பசுபதி சித்தப்பா,கலா சித்தி, முத்தையா பெரியப்பா,ராக்காயி பெரியம்மா, பூமி மாமா.புவாயி அத்த,கயலு, சொர்ணா,நாகலிங்கம் எல்லாரும் வந்திருந்தாங்க.ஆனா யாருமே முன்னமாதிரி என்கிட்ட சிரிச்சு பேசவேயில்ல.என்ன தூக்கி கொஞ்சவும் இல்ல.கயலு மட்டும் என்கிட்ட வந்து கண்ணாம்பொத்தி விளையாடலாமான்னு கேட்டா.நான் “மாட்டேன். வரலை” னு சொல்லிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு,எங்க வீட்டுக்கு ஒரு கருப்பு கலர் வேனு வந்துச்சு.அதுல இருந்து ,எங்க அம்மா தலைய விரிச்சு போட்டுகிட்டு,நெஞ்சுல அடிச்சிக்கிட்டு ,அழுதுகிட்டே கீழ இறங்குனாங்க.எங்க பெரியம்மா போயி எங்க அம்மாவ பிடிச்சுக்கிட்டாங்க.அப்பறம் எங்க சித்தி,சித்தப்பால்லாம் போயி,வேனுக்குள்ள இருந்து எங்க மீனாட்சி அக்காவ தூக்கிட்டு வந்தாங்க.பிறகு,வெள்ளை துணிபோட்ட சேருல உட்கார வச்சாங்க.

“ஏன் அக்கா நடந்து வரமாட்டேங்குறா??ஏன் யாரையும் பார்க்க மாட்டேங்குறா??ரொம்ப தூங்கிட்டாலோ??”. நான் அவ கைய பிடிச்சு “அக்கா..என்ன ஆச்சு” னு கேட்டேன்.உடனே எங்க சித்தி லூசு என்னய கட்டிபிடிச்சுக்கிட்டு அழ ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா எனக்கு அழுகையே வரல.நிறைய பேர் வந்து எங்க அக்காவுக்கு ரோஜாப்பூ மாலையெல்லாம் போட்டாங்க.அவளுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா??.

அப்புறம் சொர்ணா எங்கிட்ட வந்து “அபி,இப்பவே உங்க அக்காவ நல்லா பாத்துக்க.அப்பறம் பாக்க முடியாதுன்னு” சொன்னா.எனக்கு உடனே கோவம் வந்துடுச்சு.அவ கைய நல்லா நறுக்குன்னு கிள்ளி வச்சிட்டு,ஓடிப்போயி எங்க அக்காவ கட்டிக்கிட்டேன்.அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு,அவளுக்கு பிடிச்ச கலர் பாயிலேயே தூக்கிகிட்டு போயிட்டாங்க.

சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்க்கவே முடியல.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Tuesday, May 19, 2009

ரசனைக்காரியிடம் சில கேள்விகள்..


இப்பதிவை எழுத அழைத்தவர் தேவன்மயம்.


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ராஜேஸ்வரியா? ரசனைக்காரியா?
முதல் பெயர், அம்மா அப்பா வைத்தது.அப்பெயருக்கான பின்புலம்,நிறைய பேருக்கு உள்ளது போல ஜாதகம்தான்.
இரண்டாவது பெயர்,எனக்கு நானே வைத்துக்கொண்டது.ரசனை என்பது அனைவருக்கும் பொதுவானது.எதை,எங்கே,எப்படி என்ற நிலைப்பாடு மட்டுமே மற்றவரிடமிருந்து வேறுபடுத்தும்.
போர்முனையில் போட்டோகிராபியும்,பசிமயக்கத்தில் குக்கரியும் அவரவர் கொண்டுள்ள மனநிலைப்பாட்டில்,ரசனையை பிரதிபலிக்கும்.அந்நிலைப்பாட்டிற்கான ,எனக்கானதொரு பக்குவநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால்,”ரசனைக்காரி” என்று பெயர் உருவாக காரணம் ஆயிற்று.
இரண்டு பெயர்களுமே எனக்கு பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுகையினுடைய மூலம், பொதுவாக அனுதாபத்தை ஏற்படுத்தவும்,இயலாமையின் வெளிப்பாடாகவும் இருக்கும்.அனுதாப அழுகை என்பது அழுக்கேறிப்போன,அருவருப்பான பசபசப்பு.இயலாமையின் அழுகை,ஏற்றுக்கொள்ளப்பட்டு மருந்திடப்படவேண்டியவை.கடைசியாக நான் மனம் வருந்தியது நேற்று.(மே 18ஆம் தேதி,2009ஆம் ஆண்டு ,தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
அம்மா கையால சமைத்த உணவு எல்லாமே.குறிப்பாக மீன்குழம்பும் மட்டன் கோலா உருண்டையும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒருவருடனான நட்பு,நம்மில் பல பரிமாணங்களை உணர்த்தவும் ,வெளிப்படுத்தவும் உதவும். ஆதலால் நட்பில் நான் கொஞ்சம் நிதானிதான்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?அருவியில்தான்.அதில் மருத்துவ குணமும் உண்டு.கடலில் குளித்துவிட்டு வந்தால் மறுபடியும் குளிக்கவேண்டி இருக்கும்.ஆனால் அருவியில் அவ்வாறூ கிடையாது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள் + உடை அணிந்திருக்கும் விதம் + அவருடைய வார்த்தைகள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயம்- புது விசயங்களை கற்றுக்கொண்டிருப்பது.
பிடிக்காத விசயம்- நிறைய விசயங்களை தெரிந்துகொள்ளாமலிருப்பது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
மன்னிக்கவும்.இன்னும் திருமணம் ஆகவில்லை.


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் அப்பா,அம்மா மற்றும் என் தோழி கார்த்திகா.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெண்மையான புன்னகை.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இந்த கேள்விகளை மட்டுமே ....


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கையில் அடக்க முடியா காற்றின் வண்ணம்.அதனால் மட்டுமே, வார்த்தைகள் ,எல்லைகளற்று இருக்கும்.

14.பிடித்த மணம்?
அன்பினால் உதிர்க்கும் சொற்களின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இவரின் கவிதைகள் மனத்தில் எப்பொழுதும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இவருடைய “இரவிலும் உதிக்கும் வானவில்லே” கவிதை மிகவும் அற்புதமாய் இருக்கும். அவர் நட்புடன் ஜமால் .

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அவருடைய அனைத்து இடுக்கைகளும் ஏதாவது ஒரு செய்தி சொல்லும். குறிப்பாக சொல்ல்வேண்டுமென்றால்,கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும் இந்த இடுக்கையை சென்று பாருங்களேன்.

17. பிடித்த விளையாட்டு?
நிறைய பேருடன் சேர்ந்து விளையாடும் எல்லாவிளையாட்டுமே. குறிப்பாக கோ-கோ ரொம்ப பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
உலகின் மெய்ப்பொருள் காணவிரும்புவதால், கண்ணாடி (மனத்திரை) அணியும் பழக்கமில்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
யதார்த்தமற்ற படங்கள் தவிர்த்து, மற்ற அனைத்தும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க

21.பிடித்த பருவ காலம் எது?
அனைத்துப்பருவங்களுமே ரசிப்புக்குரியதுதான்.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்”.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாட்டேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மனிதர்களின் மனங்கள்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
உண்டு.(மனிதர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை கண்டிப்பாய் இருக்கும்.அதை கண்டுபிடிப்பதில்தான் அவனுடைய வாழ்வின் ஏற்ற தாழ்வு இருக்கிறது)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எதையும் ஏற்றுக்கொள்ள என்னை பக்குவப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்குள்ளே இருக்கும் கடவுளோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி சென்று வரும் வான்வெளி மற்றும் பால்வீதி.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப இருக்கிறது கூட நல்லா இருக்கே.

31.மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ஏதும் செய்ய முடியாதே..சரி பாதில்ல அவங்க.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனுபவத்தின் மூலமும்,ஆதலால் உருவாகக்கூடிய செயல்கள் மூலமும் உனக்காக நீ எழுதும் வரலாறு.

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நபர் நண்பர் நட்புடன் ஜமால்.

Tuesday, May 12, 2009

மறுபடியும் மழைவரும்...


மழைத்தூரல்கள் பூமியை நனைத்துக்கொண்டிருந்தன.ஆதவன் தன் ஆடையை பறிகொடுத்துவிட்டு,மலைமுகடுக்குள் ஒழிந்துகொண்டிருந்தான்.அவனுடன் போர்தொடுத்து ஓய்ந்ததுபோல்,கார் மேகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் சலனமற்று பயணித்துக்கொண்டிருந்தாள் ஜானகி.ஜன்னலில் பட்டு தெறித்த நீர்த்துளிகள் அவளது ஆடையை மட்டும் பதப்படுத்தியிருந்தது.துர்கா,அவளது மூன்றரைவயதுச் செல்வம்,நித்திரைக்கு தன்னையிழந்து,தாயின் மடியில் சுருண்டு படுத்திருந்தாள்.

மேலூரைத்தாண்டி பேருந்து சென்றுகொண்டிருந்தது.”இதோ இன்னும் ஒரு மணி நேரத்தில் வீடு வந்துவிடும்.அப்பாவிடம் என்ன சொல்வேன்? எல்லாம் முடிந்துவிட்டதென்றா? இல்லை...இவை எல்லாம் உங்களால்தானப்பா என்றா?” ஜானகியின் எண்ணங்கள் உருபோட்டுக்கொண்டிருந்தன.மீளாத்துயரத்தில் இருப்பதாய் அவளது கண்கள் அர்த்தம் புகுத்திக்கொண்டிருந்தன.

துர்காவின் தலையை கோதிவிட்டபடியே வெளியே பார்த்தாள்.மழை இன்னும் சிறு நூலாக கோடுபோட்டுக்கொண்டிருந்தது.

அப்பா பஸ்ஸ்டாண்டிற்கு வந்திருப்பார்..அங்கேயே சொல்லிவிடுவதா?இல்லை வீட்டிற்கு போய்விட்டு மெதுவாக சொல்வதா?” முடிவு எடுக்கமுடியாமல் கணகளை மூடி ,தலையை பின்னே சாய்த்து,பெருமூச்சு விட்டாள் ஜானகி.அவளுடைய அசைவில் துர்கா விழித்துக்கொண்டாள்.

அம்மா..தாத்தா வீடு வந்துடுச்சா?”

இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடும்.நீ தூங்காத முழிச்சுக்கோ..”

ம் ம்.மா நான் ஜன்னல் கிட்ட உட்காரட்டா?”

சரி வா” -இருக்கையில் அமர்ந்தபடியே,அவளை தூக்கி மடியில் அமர்த்தி,சற்று நகர்ந்து அமர்ந்து துர்காவை சன்னலோரமாய் உட்காரவைத்தாள் ஜானகி.

ஜன்னல் கம்பிகளில் பட்டுத்தெறித்த நீர் துர்காவை குதுகலப்படுத்திக்கொண்டிருந்தது.

மாட்டுத்தாவணி வந்துருச்சு.இறங்குரவங்க இறங்கிக்கங்க..”-கண்டக்டரின் குரல் ஜானகியையும் சென்றடைந்தது.மேலிருந்த சூட்கேசையும்,பேக்கையும் எடுத்து கீழே வைத்தாள்.தன் கைப்பையையும் பேக்கையும் ஒருகையில் மாட்டிக்கொண்டு,ஒரு கையில் சூட்கேசையும் மறுகையில் துர்காவையும் பிடித்தபடியே கடைசியாக இறங்கினாள்.


சென்றமுறை மதுரை வந்த ஞாபகம் மனதினுள் சுழன்றது.துர்காவை P.K.G சேர்க்க வேண்டும் என்று கூறி ,அப்பாவிடம் 5000 ரூபாய் வாங்கிச்சென்று,அந்த மாத்தில் மளிகை சாமான்,பால்,கேஸ் என்று சமாளித்தது ,அவளது மனத்தில் மறுபடியும் ரணத்தை பதித்தது.

இந்த தடவை என்ன சொல்ல போகிறேன்? கடவுளே.ஏன் என்னை சோதிக்கிற?”மனதிற்குள் முணுமுணுத்தபடியே பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தாள் ஜானகி.

எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தயாராக நின்றுகொண்டிருந்தார் பரசுராம்.

வாம்மா ஜானு..நல்லாயிருக்கியா?”

ம்.இருகேன்பா..”-தன் குரலில் சுருதி குறைந்துவிட்டதோ என்று அவளுக்கே சந்தேகமாயிருந்த்து.

ஏய் ..துர்காகுட்டி ..இங்க வாங்க..தாத்தாகிட்ட வாங்க
ஓடிசென்று தாத்தாவின் கைகளை பற்றிகொண்டாள் துர்கா.

ஜானு.ஏம்மா ஒருமாதிரி இருக்க?”

வீட்டுல போயி சொல்றேன்ப்பா

மூவரையும் ஏற்றிக்கொண்ட ஆட்டோ மங்களம் இல்லத்தை நோக்கி விரைந்தது.

வாடி ஜானு..இன்னைக்கு வரேன்னு நேத்துதான் போன் பண்ணி சொல்லுர..என்னடி ஆச்சு?”-ஜானகியின் தாய் மங்களம்.

மங்களம்,முதல்ல அவ குளிச்சிட்டு சாப்பிடட்டும்.பிறகு பேசிக்கலாம்என்று அதட்டியபடி ஜானுவை நோக்கிபோம்மா.போயி குளிச்சிட்டு வா!” என்றார் பரசு.

துர்காவிற்கு இட்லி ஊட்டிவிட்டு,சுட்டி டிவி சேனலை அவளுக்கு வைத்துவிட்டு,ஜானுவை நோக்கி,”இப்ப சொல்லுடி ..என்ன பிரச்சனை?”-என்றாள் மங்களம்.

அம்மா..நான் அவரை டைவர்ஸ் பண்ண போறேன்”-இதயத்திலிருந்த மவுனத்தை,தலை குனிந்தபடியே சிறிதாய் கலைத்தாள் ஜானகி.

அடி பாதகத்தி..இப்படி ஒரு விசயத்த சொல்லவா அங்க இருந்து ,நீயும் ஒன் மகளும் கிளம்பி வந்தீங்க

ஆமாமா..நான் அப்பப்ப உங்ககிட்ட பணம் கேட்டு தொந்தரவு பண்றதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.எனக்கு பிடிக்கல

அதுக்காக..இதுதான் முடிவா?போ.ஒரு வேலைக்கு போ..நீ சம்பாதிச்சு,உம் பிள்ளையையும் உன் புருசனையும் காப்பாத்து..அது பொம்பளை.அதவிட்டுட்டு டைவர்ஸ் அப்படி இப்படின்னு பேசாத

அம்மாவின் குதர்க்கமான பேச்சில் கூட தன்னுடைய நன்மை இழையோடுவதை கவனிக்க தவறவில்லை ஜானகி.

இல்லம்மா..இனி அவரோட சேர்ந்துவாழ முடியாதுஎன்று தன் புருசனுடைய குடிப்பழக்கத்திலிருந்து,வாடிக்கையாகிவிட்டிருந்தஅந்தமாதிரியான தொடர்புகள் வரைக்கும் கொட்டி தீர்த்த ஜானகியின் கண்களில் தீயின்றி நீரில்லை.

பரசுராம் எதுவும் பேச திராணியற்று அமர்ந்திருந்தார்.”சிறிது குடிப்பழக்கம்தான் .போகப்போக சரியாகி விடும்,எப்படியும் தன் மகள் சரி படுத்திவிடுவாள்என்ற நம்பிக்கையில்,விருப்பமே இல்லாத ஜானுவை கட்டாயப்படுத்தி,தன் பால்ய சினேகிதனின் மகனுக்கு,விவாகம் செய்துவைத்தார்.அது இப்படி முடியும் என்று அவர் சிறிதும் நினைக்கவில்லை.

இதுவரை அதட்டி பேசிக்கொண்டிருந்த மங்களம்,சற்று அருகில் வந்து,”ஜானு..பொம்பளைங்க,ஆம்பிள துணை இல்லாம வாழ்றது கஷ்டம்மா..வாழ்வோ தாழ்வோ அவரோட நீ இருந்தா உனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும்மாஎன்றாள்

அம்மா..நான் அதெல்லாம் யோசிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா?நிலைமை ரொம்ப மோசம்மா..அவரோட செயலகள் ஒண்ணொண்ணும் கீழ்த்தரமா இருக்கு.எனக்கு துர்காவோட வாழ்க்கைய நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.இதைவிட்டா எனக்கு வேறு வழி தெரியலம்மா

நாட்கள் உருண்டன.ஞாயிறும் திங்களும் ஜானகியையும் தீண்டின.
அம்மா..நான் ஸ்கூலுக்கு போயிட்டு வர்ரேன்..துர்காவை பார்த்துக்கோங்க..” என்றபடி வெளியே வந்து,செருப்பை மாட்டிக்கொண்டு வாசலைக்கடந்தாள் ஜானகி.

சரிம்மாஎன்று அவளின் நிலையை நினைத்து யாரும் அறியா வண்ணம் கண்களில் நீரை வார்த்தாள் மங்களம்.

தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராய் வேலை செய்யப்போவதை நினைத்து,பெருமிதம் கலந்த சந்தோசம் ஒருபுறம், மறுபுறம்..ம்ஹீம். அதை எப்பவுமே வெளியே சொல்லமாட்டாள் ஜானகி.

பள்ளி அருகில் வந்ததும்,அந்த வீட்டை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.கண்கள் யாரையோ தேடின.ஏக்கத்தின் சுவடுகளை உள்ளே மறைத்து
பள்ளியினுள் சென்றாள்.கடிகார முட்கள் செவ்வனே தன் வேலையை செய்தன.

மாலை இருட்டிக்கொண்டு வந்தது.வானவெளியில் முகில்கள் படையெடுத்துச் சென்று கொண்டிருந்தன.சிறு சாரல்துளிகள் மண்வாசனையை ஏற்படுத்த தயாராயின.மாணவர்களோடு கலந்து வெளியே வந்து கொண்டிருந்த ஜானகி,பள்ளிகூட வாசலில் நின்று மறுபடியும் அந்த வீட்டை நோக்கினாள்.இப்பொழுது நிழலாடியது அவ்வீட்டில்.

காலம் யாருக்கும் வஞ்சகமில்லாது மாற்றத்தை கொடுத்திருக்கிறதே?நீ கூட எப்படி மாறி விட்டாய்!..மழையை வேடிக்கை காண்பிக்க கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு..அட  அது உன் மனைவியா.. அழகாயிருக்காளே!”

அந்நிழல்களை பார்த்து,தானே மனதுக்குள் பேசிக்கொண்டாள்.சாரலின் வேகம் இப்பொழுது அதிகரித்திருந்தது.நீர்த்துளிகள் இப்பொழுது அவளது ஆடையை மட்டுமல்ல,மனதையும் நனைத்தது.வாசனை மண்ணிலிருந்தும்,அவளது நினைவிலிருந்தும் கசியத்தொடங்கின.