Saturday, February 28, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!

முதலில் இந்த பதிவை எழுத என்னை அழைத்தமைக்கு ,ராகவன் சாருக்கு நன்றிகள் பல.


இந்த தலைப்பில் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்த நேரத்தில் இருந்தே ,என் மனதில், நிறைய பேர் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு மடை திறந்த வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தனர்.நான் சிறு வயதில் பாடங்களில் படித்த,சுதந்திர போராட்டவீரர்,கவிஞர்,அறிஞர், விஞ்ஞானிகளில் இருந்து ,இன்று என் கண் முன்னே நடமாடிக்கொண்டிருக்கும் சாதனையாளர்கள் வரை ,அப்பப்பா ,எத்தனை பேர்!.

இதில் எந்த இருவரை பற்றி பதிவிடுவது? வரும் வாரத்தில் பெண்கள் தினம் வர இருப்பதால் ,சரி ,பெண்கள் இருவரை பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். என்னைக்கவர்ந்தவர்கள் என நான் குறிப்பிட போகும் இருவரில், முதலாமானவர் ,படிப்பறிவு இல்லாவிட்டாலும், தான் இருந்த இடத்திலேயே ,பலருக்கு நன்மை புரிய முடியும் என நிரூபித்தவர்.மற்றொருவர், சாதரண குடும்பத்தில் பிறந்து ,தன்னுடைய கல்வி அறிவால்,எல்லைகளற்று விரிந்து ,பல நாடுகளுக்கிடையே வணிகம் உயர காரணமாய் இருப்பவர்.

இந்த இருவருமே வாழ்வின் இரு விளிம்பில் இருந்து வெற்றி பெற்று கொண்டிருப்பவர்கள்.
சின்னபிள்ளை : தான் இருக்கும் சூழ்நிலைகளையும் ,வறுமையையும் காரணம் காட்டி ,முன்னேற்றமின்மைக்கு விளக்கம் தரும் சாதாரண மனிதர்களுக்கு மத்தியில் ,படிப்பறிவு இல்லாவிட்டாலும் ,தன்னுடைய கடின உழைப்பாலும், சேவை மனப்பான்மையாலும் ,இன்று பல குடும்பங்களுக்கு விடி வெள்ளியாய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர், மதுரைக்கு அருகே இருக்கும் அழகர்கோவிலுக்கு பக்கத்தில் அமைந்த புளிசேரி எனும் கிராமத்தை சேர்ந்தவர்,







அன்றாடம் கூலி வேலையும் ,விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை,சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார் (MGR விசிறி போல).அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது.ஆகவே இவரின் கூட இருந்தால் ,நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர்,இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார்.

பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு சாதாரண உறுப்பினராக சேர்ந்து ,இன்று அதனுடைய முக்கிய செயலராக விளங்கி கொண்டிருக்கிறார்."களஞ்சியம்" என்பது சிறுசேமிப்பை வலியுருத்தும் ஒரு சேவை அமைப்பு.
அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்களிடையே சேமிப்பின் மேன்மையை வலியுறுத்தி "களஞ்சியத்தை" விரிவுபடித்தியவர்.இதனால் பலனடைந்த குடும்பங்கள் பல.

"The Hindhu" பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் "ஆரம்பத்தில் பத்து பேரிடம் இருந்து தலா இருபது ரூபாய் பெறப்பட்டு,இப்பொழுது ,இந்தியா முழுவதும் சுமார் நான்கு லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது களஞ்சியம்.மொத்த சேமிப்பு தொகை நூறு கோடியை எட்டி இருக்கிறது" என்றார்.

இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு "ஸ்திரீ சக்தி" விருதும் தமிழக அரசு "பொற்கிழி விருதும்" வழங்கி கவுரவித்தது .பிரதமரிடம் (வாஜ்பாய்) விருது வாங்கும் பொழுது ,இந்தியப்பிரதமரே அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெருமை சின்னபிள்ளை அவர்களையே சாரும்.

கூடிய விரைவில், ஆப்பிரிக்கா,நெதர்லாந்து ,மெக்சிகோ போன்ற இடங்களுக்கு பயணம் மேற்க்கொண்டு எவ்வாறு "களஞ்சியம்" போன்ற அமைப்பின் மூலம் கிராம முன்னேற்றத்தை மேம்படுத்தலாம் என்று உணர்த்தபோகிறார்.அவருடைய பயணம் தொடரட்டும்

இந்திரா கிருஷ்ணமூர்த்தி நுயீ:
நுயீ,தற்சமயம், உலகின் நான்காவது மிகப்பெரிய "உணவு மற்றும் பானம்" நிறுவனமான "PepsiCo" வின் முதன்மை செயலதிகாரியாய் (CEO) இருக்கிறார்.சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ,தன்னுடைய கூறிய அறிவாலும் தன்னம்பிக்கையாலும் ,எல்லைகளற்று விரிந்து சேவை புரியும் இவர் ,தன்னுடைய பள்ளிவாழ்க்கையை ,"சித்தார்த்தா வானஸ்தாளியிலும் ,கல்லூரி வாழ்க்கையை(B.Sc Chemistry) MCC யிலும் ,செதுக்கினார்.பிறகு கொல்கத்தா IIM இல் PGDBA பயின்றார் .அதன்பின் நன்கு படிப்பவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் மூலமே "Yale School of Management"இல் முதுகலை நிர்வாகவியல் பயின்றார்.





இவ்வாறு அவருடைய கல்வி எனும் கிராப் உயர்ந்து கொண்டே போனது.பிறகு பிரபல நிறுவனங்களான "Motorola","BCG", மற்றும் "ABB" யில் பணிபுரிந்தார். 1994 ஆம் ஆண்டு ,பெப்சிகோ நிறுவன கிளை ஒன்றின் தலைவரானார்.பிறகு சீரிய உழைப்பால்,2001 ஆம் ஆண்டு முதன்மை நிர்வாக அதிகாரியானார் (CFO). 2006 ஆம் ஆண்டு ,PepsiCo நிறுவனத்தின் CEO வாக பதவி ஏற்றார்.PepsiCo வின் 42 ஆண்டு கால வரலாற்றில் ,ஒரு இந்தியப்பெண்மணி இவ்வளவு பெரிய பதவி வகித்தது அதுவே முதல் முறை.


அந்த பதவியில் இருந்து கொண்டே ,பல முக்கிய பொறுப்புகளையும் மேற்க்கொண்டார். வணிகத்திலும் பொருளாதாரத்திலும் மேன்மையை கொண்டு வந்த அவரை, Fortune எனும் ஆங்கில நாளிதழ் "2008 ஆம் ஆண்டின் தலைசிறந்த சக்திவாய்ந்த மூன்றாவது பெண்மணி" என்று கூறி கவுரவித்தது .

மேலும் அவர் 2008 ஆம் ஆண்டு ,USIBC(US-India BusinessCouncil) யின் முதன்மை அதிகாரியாக பதவி ஏற்றார்.USIBC என்பது அமெரிக்க இந்திய நாட்டுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்திற்கான நடுநலை அமைப்பு.

இவ்வாறு பல பதவிகளை ,திறம் பட வகித்து கொண்டிருக்கும் அவரை ஒபாமாவின் அரசியல் நிர்வாகத்தில் "திறன் நிர்வாக அதிகாரி(Potential Commerce Secretary) "யாக ,செயற்படுத்தும் முயற்சியும் நடந்தது .கென்யாவில் பிறந்து வெள்ளை நாடான அமெரிக்காவை ஆளும் ஒபாமாவை கொண்டாடும் அனைவரும் ,சென்னையில் பிறந்து ,உலகின் பல தொழில் நிறுவங்களை ஆளும் நம்முடைய நூயியை கண்டிப்பாக நினைத்து பார்க்க வேண்டும்.

கொசுறு: நூயீ அவர்கள் கல்லூரி வாழ்க்கையின் பொது எடுத்த புகைப்படம்.வலப்பக்கம் இருப்பவர்




இந்த பதிவின் தொடர்ச்சியை கவனிக்க  நட்போடு அபுஅஃப்ஸர்மற்றும் அன்புடன் அருணாவையும் அழைக்கிறேன் .

Friday, February 27, 2009

இதனால் சகலருக்கும் அறிவிப்பதென்னவென்றால் ..





ராகவன் சார் கொடுத்த பொறுப்பிற்காக ,"என்னை கவர்ந்தவர்கள் " என்ற பதிவிற்காக (ஜீவன் அண்ணா வேறு முந்திட்டாரு ) ,வேலை செய்து கொண்டிருப்பதால், இன்று ரசனைக்காரியின் புதிய பதிவு எதுவும் வெளிவராது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .ஆகவே இன்று அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பீராக !

Thursday, February 26, 2009

உந்துதலும் வெற்றியும் ...

நம்மில் அனைவருக்கும் பொதுவாக ஒரு ஆசை இருக்கும், ஏதாவது ஒரு சமயத்திலாவது வெற்றியாளனாக திகழ வேண்டும் என்று .தற்சமயம் உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் A.R. ரஹ்மான் , இந்த நிலையை அடைய எவ்வளவு போராடியிருப்பார் .
ஒருவரின் வெற்றி எனும் கோபுரத்தின் அடியில் பல வேதனைகளும் ,உண்மைகளும் ,அஸ்திவாரமாய் புதைந்து கிடக்கின்றன .
ஒருதடவை ,அறிஞர் சாகரடீசை நோக்கி ஒருவன் ,"ஐயா ,நான் செய்யும் வியாபாரத்தில் ,வெற்றி பெற நினைக்கிறேன் .அதன் ரகசியம் என்ன ?" என்று கேட்டான் .அதற்கு அவர் "சரி ,நாளை நீ இந்த ஊரில் இருக்கும் ஆற்றங்கரைக்கு வந்து விடு.அங்கே உனக்கு ,நான் அந்த ரகசியத்தை கூறுகிறேன்" என்றார்.

மறுநாளும் வந்தது.இருவரும் ஆற்றங்கரையில் சந்தித்தனர்.அறிஞர் எதுவும் பேசவில்லை,அமைதியாகவே இருந்தார்.உடனே அவன் அவரை நோக்கி,"ஐயா, அந்த ரகசியம் என்ன என்று கூறுகிறேன் என்று சொல்லியிருந்தீர்களே?" என்றான். "இதோ சொல்கிறேன்" என்று கூறி அவனை தூக்கி கொண்டு சென்று ,ஆற்றில் போட்டு அமுக்கினார். தண்ணீரின் உள்ளே அவன் தினறிக்கொண்டு இருந்தான்.

சில வினாடிகளுக்கு பிறகு, அவனுடைய தலையை மட்டும் மெல்ல உயர்த்தி "நீ தண்ணீருக்குள் இருக்கும் போது என்ன நினைத்தாய்? "என்றார்.
"சுவாசிக்க காற்று வேண்டும் என்ற சிந்தனையை தவிர வேறு ஏதும் நினைக்கவில்லை "என்றான். உடனே அவர் சிரித்துக்கொண்டே "இதுதான் வெற்றியின் ரகசியம்.தண்ணீரின் உள்ளே இருக்கும் போது காற்று வேண்டும் என்ற உந்துதல்(Motivation) தான் உன்னை போராட வைத்தது .அதே போல் ,நீ எந்த துறையில் வெற்றி பெற நினைக்கிறாயோ ,அதற்கான உந்துதலும், கடின உழைப்புமே ,உன்னை கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் " என்றார்.
நாமும் இதை உணர்வோம் ."High Motivation is the First Step Towards Victory"

Wednesday, February 25, 2009

Cast Away- ஓர் பார்வை




சென்ற வாரம் " cast away " என்ற ஆங்கில படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது .2000 இல் வெளிவந்த அந்த படத்தின் நாயகன் Tom Hanks(ரொம்ப சீக்கிரமா பாத்துட்டேன்னு நினைகிறேன் ) .சொல்ல போனால் ,சினிமா வரலாற்றில் ,ஒருத்தர் மட்டுமே நடித்த படம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் (எனக்கு தெரிந்தவரை).


ஒரு இரண்டு நாள் தனியா வீட்டுல இருந்தாலே ,எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடும் .ஆனால் கிட்ட தட்ட நான்கு வருடங்களாக ,நாயகன் (ரித்தீஷ் இல்லப்பா) தனி தீவில் வசிக்கிறான் எந்த ஒரு வசதியும் இல்லாமலேயே .

சரி கதை சொல்லுறேன் கேட்டுக்குங்க !


நாயகன் ஒரு கொரியர் ஆபிசில் வேலை செய்கிறான் .எப்பொழுதும் போலவே அவனுக்கு ஒரு அழகான காதலியும் உண்டு (அடுத்தவருடைய காதலிகள் என்றாலே அழகுதான் ).ஒருநாள் ,கொரியர் கொண்டு போகும் விமானத்தில் அவனும் பயணிக்கிறான் .திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகிறது . விமானம் பசிபிக் பெருங்கடலுக்குள் விழுந்து சிதறுகிறது .தமிழ் சினிமாவைப்போல ,நாயகன் மட்டும் உயிரோடு ஒரு தீவில் கரை ஒதுங்குகிறான் .

ஆள் அரவமற்ற அந்த தீவில் ,நான்கு வருடங்களாக எவ்வாறு உயிர் வாழ்கிறான் , எந்த எந்த யுக்திஎல்லாம் மேற்க்கொண்டு தப்பிக்கிறான் என்பதே கதை .
அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிப்பதாக இருக்கும் .


மேலும் அனைவருக்கும் நண்பர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை ,இயக்குனர் ஒரு பந்தின் (foot ball) மூலம் விளக்கியிருப்பார் . அதாவது ,நாயகன் கொரியரில் தன்னுடன் வந்த ஒரு பந்திற்கு ,"wilson" என்று பெயரிட்டு நண்பனாக பாவித்து ,தன்னுடைய சுக துக்கங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வான் .ஆனால் ,கடைசியில் ,அந்த பந்தை கூடவே கொண்டு வர முடியாத சூழல் ஏற்படும். ரொம்பவும் கஷ்டமா சீன் அது.(பல தத்துவங்கள் இருக்குப்பா அதுல..இதுவே நம்ம ஊருனா ஒரு சோக பாட்டு போட்டு ப்ளாஷ் பாக் எல்லாம் காண்பிப்பாங்க !) ஒரு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களே ஓடக்கூடிய ,இந்த படத்தை முடிந்தால் நீங்களும் பாருங்களேன்.











Tuesday, February 24, 2009

கவிதைகள்

நீயே ஒளி

பச்சையம் மறந்த இலை...,
பட்டுப்போகுமோ ....!
பச்சை தண்ணீர் பட்டு...,
பசுமையடையுமோ...!
மணித்துளிகள் இல்லாமல்...,
நாட்களா....?-உன் மனதின்
நம்பிக்கை துளிகள் இல்லாமல்...,
வாழ்நாட்களாக....?
கதிரின் ஒளிபொருட்டு...,
உன் நிழல்.....!

நீயே ஒளியனால்...? ??
நம்பிக்கை எனும் ...,
உளி கொண்டு ...,
உனை செதுக்கி .....,
ஒளியோடு வா தோழா......!-
நாளை நிழல் இல்லா
நிஜம் உன்னோடு....!


ஏனோ தெரியவில்லை
வரும் காலங்களில் ....,
வடுக்களாகும் என தெரிந்தும்
காயமாக்கி கொண்டிருக்கிறேன்
எனது நினைவுகளை..
உன் மனக்கண்ணாடியில்..!
எல்லைகலற்று விரிந்த நீ
ஏனோ என்னை கூண்டிலடைத்தாய் .....!
சொல்லி சொல்லி உணரா முடிவு
சொல்லாமல் உணர்த்த காத்துக்கொண்டிருக்கிறது..!
ஏனோ தெரியவில்லை...,
என்னை விட்டு நீ
விலகிக்கொண்டே இருக்கிறாய் ...!

மகிழ்ச்சியின் வேர் எங்கே இருக்கிறது ?

நேற்று எனது தோழிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.மிகவும் மகிழ்ச்சியாக நேரம் சென்றது.உரையாடலின் போதே நான் அவர்களிடம் "நாம் இவ்வாறு மகிழ்ச்சியாய் இருப்பதற்கு காரணம் என்ன என்று சொல்ல முடியுமா"என்று வினவினேன். பலரும் பல காரணங்கள் கூறினர்.ஒருவர் "ரொம்ப நாள் கழிச்சு இன்றுதான் ஒண்ணா நேரம் செலவழிசிருக்கோம் அதனால் தான்" என்றார்.

உடனே நான் அவரிடம் "நாம் சந்திக்க வருவதற்கு முன் உங்கள் மனதில் கஷ்டம் இருந்திருந்தால் இப்பொழுது இருப்பதை போல மகிழ்ச்சியாய் இருந்திருக்க முடியுமா"என்று கேட்டேன்.யோசிக்க ஆரம்பித்தார்.

சரி உங்களிடம் கேட்கிறேன் ,ஒரு மனிதன் சந்தோசமாய் இருப்பதற்கு என்ன காரணம்? மனிதனுடைய மகிழ்ச்சியின் வேர் எங்கே இருக்கிறது ? கண்டு பிடித்திருக்கிறீர்களா ?

மகிழ்ச்சி என்பது பலருக்கும் பல அர்த்தங்களை கொடுக்கிறது ,உதாரணத்திற்கு ஏழைக்கு பணம் என்றால் மகிழ்ச்சி,நோயாளிக்கு ஆரோகியம் மகிழ்ச்சி பண்டிதனுக்கு அறிவு மகிழ்ச்சி.இப்படி பல்வேறுபட்ட மகிழ்ச்சிகள் மனிதனுக்குள் உறைந்து கிடக்கின்றது .ஆனால் இவையெல்லாம் உண்மையா? நிரந்தரமா?கண்டிப்பாக இல்லை.

"மனதை ஒருவன் வைத்திருக்கும் நிலையை பொறுத்தே ,அவன் அடையும் சந்தோசம் இருக்கிறது" என்றார் ஆபிரகாம் லிங்கன் .இது எவ்வளவு பெரிய உண்மை என்று உணரும்போதுதான் ,அதன் ஆழம் புரியும்,அதைத்தான் "மனதை பக்குவப்படுத்துதல் " என்பர் .

பக்குவப்பட்ட மனிதனுக்கு ,எந்த ஒரு சூழ்நிலையையும் ஒன்றாகவே பாவிக்க தோன்றும்.ஆனால் இந்த பக்குவப்பட்ட மன நிலையை அடைய நிறைய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் .உதாரணத்திற்கு நாம் அன்றாடம் செய்யும் வேலை.

உங்களில் எத்தனை பேர் நீங்கள் செய்யும் வேலையை விரும்பி செய்கிறீர்கள் ?ஏதோ செய்கிறோம்,மாதம் மாதம் பணம் கிடைக்கிறது என்றிருந்தால் மனம் மகிழ்ச்சியில் திளைக்க முடியாது. நாம் செய்யும் வேலை ,நம்மை பக்குவப்படுத்தவே என்பதை உணர வேண்டும்.இந்த சூழலை நினைத்து பாருங்கள் .அதாவது இவ்வுலகில் உள்ள அனைவரின் வேலையையும் நீக்கி விடுங்கள் .அப்பொழுதுதான் இவ்வுலகம் எவ்வளவு மோசமானதாய் இருக்கும் என்று தெரிய வரும்.

மனம் எப்பொழுதும் ஓடும் நீரோடை போல இருக்க வேண்டும். சோம்பிதிரிந்தால் தேங்கி நின்று விடும்.
"சந்தோசத்தின் ரகசியம் எதையாவது (வேலை)செய்வது தான்" என்பது அறிஞர் ஜான் பரோஸ் அவர்களின் கூற்று .ஆகவே செய்யும் வேலையை விரும்பி மகிழ்ச்சியுடன் தொடருங்கள் அல்லது விரும்பிய வேலையை செய்ய பாருங்கள் .மகிழ்ச்சியின் வேர் உங்கள் கண்களுக்கு தென்படும் .

(lay-off டைம் ல இதை எழுதுறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு)

Friday, February 20, 2009

கவிதை சாரல்கள் ..



    உன்னால்

உலகுக்காக
சிரித்திருப்பேன்   
வெளியே...,                             
உனக்காக
மரித்திருப்பேன்
உள்ளே.....,
எனக்காக
அழுதிருப்பேன்
என்னுள்ளே....! 

உதிரும் சிறகுகளின்...,
உதிர்க்கமுடியாத..,
உணர்வின்
பசுமையை..,
உணர்கிறேன்...!
மின்னொளியில்...,
நிலவொளியின்
நிதர்சனம்
உணர்கிறேன்.....,
அமாவாசை இன்று....!
மரித்துக்கொண்டே
இருக்கின்றன உணர்வுகள்...,
சொட்டு நீர்
சுடு பாத்திரத்திலே
விழுவதைப்போல....! 




எழுதாத போதும்
வெள்ளைதான்....,
எழுதி அழித்தபோதும்
வெள்ளைதான்....,
கசங்குவது
காகிதமல்லவா.....!

Wednesday, February 18, 2009

ரான் முயேக்கின் சிற்பங்கள்

ரான் முயேக் லண்டனில் மிகச்சிறந்த புகைப்பட கலைஞராக விளங்கியவர்..ஆஸ்திரேலியாவில் ,மெல்போர்ன் நகரில் பொம்மை செய்யும் தொழிலை மேற்க்கொள்ளும் பெற்றோருக்கு 1958 ல் பிறந்தார் .கிட்டதட்ட இருபது வருடங்களாக புகைப்பட கலைஞராக ,சிறுவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,சில ஆங்கில படங்களிலும் பணியாற்றிய பின்,சிற்ப வேலை செய்ய முனைந்தார். அவரை பொறுத்தவரை புகைப்படம் என்பது ,மனிதனின் உண்மையான உருவத்தை சிதைப்பதாகும் என்று கருதினார் .. Fiberglass resinஎன்ற வேதிப்பொருள் மூலம் இத்தகைய சிற்பங்களை படைத்துள்ளார் அவருடைய சிற்பங்களின் சில இதோ உங்களுக்காக ..


















மனிதனின் மன வகைகள்

மனிதரில் பல வகை என்பது நாம் அறிந்ததே ....ஆனாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நாம் எந்த வகை, நம்முடைய குண நலன்கள் என்ன என்று தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறோம் ..சரி நீங்கள் எந்த வகை என்று ,கீழே உள்ளதை வாசித்து முடிவு செய்யுங்கள் ..

"முடிந்த செயலை நினைத்து வருந்திக்கொண்டு இருப்பவன் முழுமூடன் ..
முடிந்த செயலின் மூலம் அனுபவத்தை பெற்று கொள்பவன் புத்திசாலி...
முடிந்த செயலை முற்றிலும் மறக்க முடிந்தவன் அதிஷ்டசாலி ...
முடிந்த செயலின் முடிவை மாற்ற தகுந்தவன் பொறுமைசாலி ...
முடிவுக்கு தகுந்து தன்னை மாற்றிக்கொள்பவன் சாமர்த்தியசாலி ...
முடிந்ததை முழுவதுமாக ஏற்று கொள்பவன் தைரியசாலி ...."

Tuesday, February 17, 2009

கொசுவத்தி ஒன்னு


பால்வாடி பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்,,அதாங்க இந்த LKG UKG க்கு பதிலா படிக்கிறது .அங்க தாங்க நானும் பாண்டியும் படிச்சோம் .அங்கல்லாம் காலையில ஒன்பதுல இருந்து பத்துக்குள்ள போனா போதும் . ப்ரெயெர் பாடி முடிச்சுருந்தாலும் சரி ,ப்ரெயெர் பாடிக்கிட்டே இருந்தாலும் சரி ,லேட் கம்மர்னு வெளில நிக்கல்லாம் விடமாட்டாங்க

.பாண்டிக்கு அம்மா அப்பா இல்லாததனால அவன் பால்வாடிக்குள்ளயே இருக்கிற பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தான்.நானும் பாண்டியும் ரொம்ப திக் பிரெண்ட்ஸ் .ஒரே வரிசையில் தான் உட்காருவோம் .என்ன மாதிரியே அவனும் ரொம்ப நல்லா படிப்பான்.நாங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கிறதால ,எங்க நாகா டீச்சர் எங்களுக்கு மட்டும் ரெண்டுரவுண்டு மால்டோ தருவாங்க . .சூப்பரா இருக்கும் ..(அதுக்காகவே அடம் புடிக்காம ஸ்கூலுக்கு போய்டுவேன் )  

லஞ்சுக்கு சத்து மாவோ ,கீரைகுழம்பு சோறோ தருவாங்க ..லஞ்சு முடிஞ்சதுமேதான் நல்லா இருக்கும் ..ஒவ்வொருத்தரையா எந்துருச்சு ரைம்ஸ் பாட சொல்லுவாங்க..என் டேர்ன் எப்ப வரும்னு ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருப்பேன் .ஏனா என் குரல் நல்லா இருக்குன்னு பாண்டி சொல்லிருக்கான் .என்னோட பேவேரிட் பாட்டு என்னனு தெரியுமா ? இதோ.. 

  "குத்தடி குத்தடி ஜெயினக்கா
குனிஞ்சு குத்தடி ஜெயினக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி டோலக்கு
பையன் வரான் பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சில்லறைய மாத்திக்கோ 
சிலுக்கு பையில போட்டுக்கோ 
சிலுக்கு சிலுக்கு ஆட்டிக்கோ "

அப்பறம் நல்ல ஓடி ஆடி விளையாண்டதுக்கு அப்பறம் ரெண்டு மணிப்போல தூங்க சொல்லுவாங்க ..மூணு மணிப்போல எங்க அக்கா என்ன கூப்பிட வரும்போது ,ரெண்டு கைகளையும் பைசா ரொட்டி (குட்டி குட்டி பிஸ்கட் )வச்சு எங்க டீச்சர் அனுப்பி விடுவாங்க ..இப்படியே நல்லா போயிட்டு இருந்துதுங்க ..ஒருநாள் எங்க டீச்சர் எனக்கு புது ப்ளூ பாவடையும் வெள்ளை சட்டையும் கொடுத்து ,கலெக்டர் ஆபிஸ் போகப்போறதால நாளைக்கி வரும்போது நான் போட்டுட்டு வரணும்னு எங்க அக்காகிட்ட சொல்லி அனுப்பிச்சாங்க .. நானும் பக்கவா கிளம்பி போய் நின்னா ..அட பாண்டியா அது புது டவுசர் சட்டை போட்டு ..அப்பறம் ஜாலியா ஜீப்ல ஏறி கிளம்பினோம் .

 முதல் தடவையா ஜீப் ட்ராவல் ..கலெக்டர் ஆபிஸ் போனதுக்கு அப்பறமா ,உள்ள எதோ ஒரு ரூமுக்கு என்னையும் பாண்டியையும் கூப்பிட்டு போனாங்க ..எங்கள மாதிரியே அங்க நிறைய பசங்க ..கொஞ்ச நேரம் கலுச்சு ஒரு பெரிய அம்மா கிப்பி வச்சுக்கிட்டு ,நாங்க இருந்த ரூமுக்குள்ள நொலஞ்சாங்க ..எனக்கு அவங்கள எங்கேயோ பாத்த மாதிரி இருக்குதேனு
யோசிகிறதுக்குள்ள எனக்கு நியூட்ரின் சாக்லட் கொடுத்து என்னை தூக்கி வச்சுகிட்டாங்க ..அப்பறம் தான் எனக்கு ஞாபகம் வந்தது ..அவங்க எங்க வீட்ல ஒரு போட்டோல இருக்கிற ஒரு அம்மானு...  

 .சிறிது நேரத்திற்கு அப்பறம் மறுபடியும் ஜீப் ட்ராவல் டூ வீடு.ஜீப் விட்டு இறங்கினவுடனே பாண்டிக்கு ஒரு பை சொல்லிட்டு வீட்ல போய் எங்க அப்பாகிட்ட யாருப்பா அந்த அம்மானு கேட்டேன் ,போட்டோவ காண்பிச்சு ..அவங்கதான் நம்ம பிரதமர் இந்திரா காந்தினு சொன்னாரு,அப்படியானுட்டு விளையாடப்போயிட்டேன் .

அப்படியே எப்போவும் போல ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தேன் ..ஆனா ஒருநாள்
நானும் எங்க அக்காவும் போனப்ப பாண்டி யார்கூடயோ ,பெரிய பையெல்லாம் வச்சு நின்னுக்கிட்டு இருந்தான் ..என்னடா கிளாஸ்க்கு போகாம இங்க நிக்கிறேன்னு கேட்டேன் ..நான் வேற ஊருக்கு போறேன் .,டாட்டா அப்படின்னு சொல்லிக்கிட்டே அழுக ஆரம்பிச்சுட்டான் ..எனக்கும் அழுக அழுகையா வந்துடுச்சு ..போகாத பாண்டி ,போகாத பாண்டின்னு சொல்லி ,தரயில பொரண்டு அழுதேன் .எங்க டீச்சர்லாம் வந்து என்னைய தூக்கி விட்டாங்க .பாண்டி திரும்ப வந்துடுவான்னு சொன்னாங்க ..பாண்டியும் சொன்னான் ,நான் கண்டிப்பா வந்து உன்னை பார்பேன்னு ...ஆனா இன்னும் வரல .

நீங்க யாராவது பாண்டியா ????




..




Monday, February 16, 2009

என்ன கொடுமை சார் இது

அது ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் ...
சுதந்திர தின லீவிற்க்காக சொந்த ஊர் மதுரை சென்றிருந்தேன்.எவ்வளவுதான் சென்னையில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ,உறவுகளோடு சொந்த ஊரில் இருப்பதே ஒரு தனி சுகந்தாங்க ...! நேரத்திற்கு சுவையா அம்மா கையாள சாப்பிட்டு ,கோவில் குளம்னு சுத்திட்டு,லோக்கல் தியேட்டருக்கு போயி ,ஓடாத படத்த பாத்துட்டு ,............ம்ம்ம்ம் ...சரி விடுங்க ! சொல்ல வந்த விசயத்த விட்டுட்டு எங்கோ போயிட்டேன் ..லீவ் முடிஞ்சு சென்னை திரும்புறதுக்காக ,நிம்மதியா வரலாமுன்னு KPN ல AC கோச்ல பெர்த் புக் பண்ணியிருந்தேன்..அது என்னனு தெரியல, இங்கருந்து அங்க போகுரதுக்கும் சரி ,அங்க இருந்து இங்க வரதுக்கும் சரி , ரயிலில் டிக்கெட்டே கிடைக்க மாட்டேங்குது சாமி ...நான் புக் பண்ணுனா மட்டும் வெய்ட்டிங் லிஸ்ட்ல இருக்கா ..இல்ல என்னோட லாகின் நேமுக்கு மட்டும் டிக்கெட் தரமாட்டான்களோ என்னமோ தெரியல ..
எட்டரைக்கு பஸ் பெரியாரில் இருந்து கிளம்புச்சு ...கிளம்பும்போது நல்லா எலுமிச்சம்பழம்,பத்திலாம் வச்சு ,ஒரு பூசைய போட்டு தாம்ப்பா கிளப்புனாங்க ..வண்டில ஏறுனதுமே என்னோட பெர்த்ல போய் படுத்துக்கிட்டேன் ..ஒரு ரெண்டு நிமிஷம் போயிருக்கும் ,ஏதோ மிஸ் ஆகுற மாதிரியே இருந்தது ..எனக்கு மட்டும் இல்ல ..பஸ்ல இருந்த எல்லோருக்குமே ...என்னனு பாத்த பஸ்ல AC இல்ல ..இதுல இன்னொரு கொடுமை என்னன்னா கீழ இருக்கவங்களுக்காவது ஜன்னல் இருந்தது ..மேல பெர்த்ல முழுசா கண்ணாடி போட்டு மூடிவச்சுனுட்டானுங்க ..ஒரு அரைமணி நேரம் உள்ள உட்கார்ந்திருந்தோம் ,அடுத்த நாள் குளிக்கிற வேலை குறைஞ்சிருக்கும் . சரின்னு டிரைவர் அங்கிள் கிட்ட போய் ,அங்கிள் அங்கிள் AC வொர்க் ஆக மாட்டேன்குதுனு சொல்ல ,அது அப்படிதான்னு அவர் சொல்ல, அப்பறம் நாங்களே வண்டிய போலீஸ் நிலையத்திருக்கு விட்டோம்.வேற பஸ் அரேன்ச் பண்ணி தரச்சொல்லி கம்ப்ளைன் கொடுக்க ஆச்சு மணி 10 . ஆனா வண்டி இன்னும் மாட்டுதாவனியவே டச் பண்ணல ...இது சில பேர் வீட்டுக்கே போறோம்னு சொல்லி நடைய கட்டிடாங்க..என்னடா செய்யிறதுன்னு பேந்த பேந்த போலீஸ் ஸ்டேசன் வாசலிலே ஒரு மணிநேரமா வெயிட் பண்ணினோம் ..வந்ததுங்க ஒரு வண்டி (வேன் )..பழைய இய்யம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம் கணக்கா ! சரி ஜன்னல் இருக்கு ,காத்தாவது வரும்னு சொல்லி ஏறி உக்காந்து "போவோமா ஊர்கோலம்னு" கிளம்பினோம். மாட்டுத்தாவணி வந்து சேர மணி ஆச்சு 11.30....ஒன் போரவங்கல்லாம் போயிட்டு வாங்கன்னு டிரைவர் அங்கிள் சொன்னாரு..சரின்னு போயிட்டு வந்துட்டு வண்டில ஏறி உட்கார்ந்தா ,வண்டி கிளம்பவே இல்ல ..என்னனு விசாரிச்சா ,டிக்கெட்( புதுசாஆள் ) போட்டுட்டு தான் கிளப்புவங்கலாம்..சரி வண்டி கொஞ்சம் ப்ரியாத்தானே இருக்குன்னு வெயிட் பண்ணோம் . பண்ணோம் ....பண்ணோம் 12.15 வரை. அப்புறம் பொறுமை தாங்க முடியாம டிரைவர் அங்கிள் கிட்ட போய் கேட்டா ,போட்டாரு பாருங்க ஒரு குண்ட ! "வண்டி சென்னை போகதுன்னு" ..அடப்பாவிகளா AC பஸ்னு சொல்லி ஏமாத்தி , 450 ரூபாயை ஓட்ட வண்டிக்கு அழுது,எப்படியாவது அடுத்த நாள் வேலைக்கு போயீரலமுனு நெனச்சா ,இப்புடி கவுத்து விடுவாங்கன்னு நினைக்கவே இல்லேங்க,,காரணம் கேட்டா ,டிக்கெட் (ஆள் )ஏதும் புதுசா ஏறல ,அதான் என்றார் பாருங்க ...காதுக்குள்ள சொஈங் ......சத்தந்தாங்க கேட்டுச்சு ..."சரி நாங்க எப்படி போறது?" என்று கேட்டா, "வேற வண்டி புடிச்சு போங்கன்னு" சொல்லிடாரு ரொம்ப கூலா ...உங்க மேல கேஸ் போடுவோம் அது இதுனு சொல்லியும் ம்ம்ஹும்...எதும் நடக்கல ..
ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி இருந்ததாலே டிக்கெட் காசும் கிடைக்கல ..கையில அப்பா அம்மா ஆசிர்வாதம் பண்ணி கொடுத்த 200 ரூபாய்தான் இருந்தது. (நமகெல்லாம் டெபிட் கார்டு தானே ஸ்டைல் ) ஒரே குழப்பம் வீட்டுக்கே போய்டுவோமா அல்லது எதாவது பஸ்ல அடுச்சு புதுசு போய்டலாம்னு ..அப்புறம் தெய்வமா ஒரு டெம்போ வேன் டெலிவரிக்காக (TCS )சென்னை புறப்பட்டுச்சு ..அவங்ககிட்ட பேசி ,வண்டில ஏறி உட்கார்ந்தேன் ..சே எப்படிலாம் நிம்மதியா வரணும்னு நினைச்சு AC ல புக் பண்ணி இப்போ இப்படி டிராவல் பன்ன்றோமேனு நெனச்சுகிட்டே தூங்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாதுங்க .சரியா காலை 10 மணிக்கெல்லாம் சென்னை வந்துட்டேன்,, அப்பறம் என்ன நடந்திருக்குமுன்னு உங்களுக்கே தெரியுமே ..ஒரு ஹாப் டே லீவ் போட்டுட்டு நிம்மதியா தூங்கினேன் ..

Sunday, February 15, 2009

இவளின் ஓர் அறிமுகம் !

அனைவருக்கும் இந்த ரசனைக்காரியின் வணக்கங்கள்! ப்ளாகில் எழுவது என்பது இவளுக்கு புதிதல்ல ! ஆனால் ஒவ்வொரு தடவையும் எழுதும்போதும் ,ஒரு குழந்தை ஜனிக்கும் நேரத்தில் ,தாய் உணர்கின்ற பதட்டமும் எதிர்பார்ப்பும் என்னுள் ....!
ஒவ்வொரு மனிதனும் ,எவ்வளவு பெரிய துயரத்தில் இருந்தாலும் ,ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக எதோ ஒன்று அவன் மனதை இதமாய் வருடிச்செல்லும் .இனிமையை அவனுள் பிரசவிக்கும்.. ரயில் பயணத்தின் போது , பிச்சை எடுப்பவர் பாடும் பாடல்...
மழை நேரங்களில் ரோட்டோரக்கடையில் ஒதுங்கி குடிக்கும் தேநீர் ...
தூங்கச்செல்லும் வேளையில் கேட்கும் மெல்லிசை பாடல்கள்..
ஜாக்கிங் போகும்போது உணரும் அதிகாலை ,
அப்பப்பா! எத்தனை விஷயங்கள் இருக்கிறது நாம் ரசிப்பதற்கு!
வார இறுதி நாட்களில் அருகில் இருக்கும் பார்க்குகளுக்கு சென்று பாருங்கள் ....எத்தனை குழந்தைகள் மகிழ்ச்சியாக ஆட்டம் போட்டு விளையாடி சுற்றி இருப்பவர்களையும் சந்தோசப்படுத்தி.. .!

நான் எப்போதெல்லாம் கஷ்டமான மனநிலையில் இருப்பேனோ ,அப்போதெல்லாம் இசை கேட்க ,(குறிப்பாக இளையராஜா சாரின் இசையில் வந்த பாடல்கள் ) ஆரம்பித்து விடுவேன் ..மனம் தெளிவு பெற்று விடும் ..
நீங்களும் வாருங்கள் வாழ்வை ரசிப்போம்..
ரசனைகள் மாறுபடலாம் ....
ஆனால் ரசிப்புத்தன்மை குறையக்கூடாது ..
ஆகவேநம் வாழ்கையின் ஒவ்வொரு துளியையும் முடிந்தவரை ரசிப்போம்
அன்புடன் உங்கள் ரசனைக்காரி!