Wednesday, December 9, 2009

க.மு.....க.பி....

கி.மு..கி.பி.. தெரியும். அது என்ன க.மு..க.பி..என்று யோசித்து பதட்டப்பட வேண்டாம்.மேலே தொடர்ந்து படிங்க..புரியும்.

சென்ற வாரத்தில் ஒருநாள்,என் தோழிகளை சந்திக்க,நான் முன்பு தங்கியிருந்த விடுதிக்கு சென்றிருந்தேன்.மூன்று மாதங்களுக்கு முன்பு நான் வெளியே கிளம்பியதற்கும்,அன்று நான் விடுதிக்கு கிளம்பியதற்கும் வேறுபாடு இருக்கிறதே...அப்பப்பா வித்தியாசங்கள் 6 என்ன அறுபதையும் தொடும்.அதனாலதான் நிறைய பேருக்கு கல்யாணம்னா அலர்ஜியாகிடுது போல..
இப்போ தலைப்பு புரியும்னு நினைக்கிறேன்.இன்னும் புரியலைனா, உங்களுக்கு வெள்ளேந்தி மனசுதான் போங்க..

சரி விசயத்திற்கு வர்ரேன்.க.மு எல்லாம், ஒரு இடத்திற்கு கிளம்புகிறேன் என்றால், நான் என்னை மட்டுமே கவனித்து அழகு படுத்தி கொண்டு, ஒரு பில்டப் போட கிளம்புவேன்.இருக்கும் அறையை பற்றிய அக்கறை சிறிதும் இருக்காது.போட்டது போட்ட மாதிரியே கிடக்கும்.வெளியே போய்விட்டு வந்துதான் அறையை ஒழுங்குபடுத்துவேன்(அட..நம்புங்கப்பா!!)

ஆனா, இப்ப அப்படி இருக்க முடியுதா என்ன..ஜன்னல் சாத்தியாச்சா?,கேஸ் ஆஃப் பண்ணியாச்சா?,பைப் எல்லாம் சரியா பூட்டி இருக்கா?,காயப்போட்ட துணிய எடுத்தாச்சா..வெளில போயிட்டு வந்ததும் சாப்பிடுறதுக்கு செஞ்சாச்சா? ..இப்படி நிறைய..(இதெல்லாம் தங்கராசாக்கல்லாம் யோசிக்கமாட்டாங்க போல)

அந்தா இந்தான்னு யோசிச்சு ஒரு 11 மணி போல விடுதிக்கு கிளம்புனேன்.தங்கராசுக்கும் ஒரு மீட்டிங் இருந்ததால,மதியம் வெளிலேயே சாப்பிட்டுகிறதா சொல்லி, காலைல கிளம்பிட்டாப்புல.”ரொம்ப சந்தோசம் மதிய சமையல் செய்யவேண்டாம்” அப்படின்னு பஜ்ஜி மட்டும் செய்து எடுத்துக்கொண்டு, விடுதிக்குள் போய் காலை வைக்கிறேன் ஒரு போன்கால்.வேற யாரு தங்கராசுதான்.

“எங்கப்பா இருக்குற”

“இப்பதான் ஹாஸ்டலுக்குள்ள நுழையிறேன்.ஏங்க என்ன விசயம்?”

“ஒண்ணுமில்லை..சரி..நான் அப்புறம் கூப்புடுறேன்”

அடப்பாவிமக்கா..அப்புறம் கூப்புடுறேன்னு சொல்றதுக்கு ஒரு போன்காலா...
சரின்னு வார்டன் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு,என்னுடைய பழைய அறையை நோக்கி மெல்ல நகர்ந்தேன்.இந்த இடத்துல “ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..” பாட்ட நீங்க ஹம் பண்ணிக்கணும்..

அது என்னவோ தெரியல,என்ன மாயமோ தெரியல, ஃப்ரண்ட்ஸ்ஸ பார்த்தா மட்டும் அரட்டை அருவி மாதிரி கொட்டுது.இந்த “கடலை”,”மொக்கை” போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தங்களை எல்லாம் அன்றுதான்(ஹி ஹி அன்றும்னே வச்சுக்கோங்க)மெய்பித்தோம் ,அரட்டை மூலமாக.சிறிது நேரம் கழித்து, படம் ஏதாவது பார்க்கலாம் என்று முடிவு செய்து “மின்னலே” போட்டுவிட்டோம் லேப்டாப்பில்.


மறுபடியும் போன்.மறுபடியும் தங்கராசு.
“என்னங்க?”

“மீட்டிங் முடிஞ்சிடுச்சு ..நான் வந்துகிட்டே இருக்கேன்.உன்ன ஹாஸ்டல்ல வந்து பிக்கப் பண்ணிக்கரட்டா?”

“இல்ல..நான் அப்புறமா வர்ரேன் .நீங்க வீட்டுக்கு போயிடுங்க”

“சரி..வீட்டுல சாப்பாடு இருக்குல லஞ்சுக்கு?”

“அய்யோ .இல்லியே..வெளில சாப்பிட்டுகிறதா சொன்னீங்க”

“ப்ளான் மாறிடுச்சு.சரி நான் செய்து சாப்பிட்டுக்றேன்..நீ அங்க மறக்காம சாப்பிட்டுக்கோ...பை”

இதுக்கு அப்புறமும் படம் பார்க்க முடியுமா சொல்லுங்க..அவசர அவசரமாய் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானேன்.கண்டிப்பாக சாப்பிட்டுதான் போகணும்னு தோழிகள் கூற(பழி வாங்கனும்னா வேற வழியே தெரியல போல),வேறு வழி இன்றி சாப்பிட ஆரம்பித்தேன்.கடவுளே...போஸ்டருக்கு ஒட்டுற மாதிரி இருந்த வெண்டைக்காய் மோர்க்கொழம்பை ஒரு கவளம் கூட வாயில் வைக்க முடியவில்லை.கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்து ,அனைவருக்கும் ஒரு பை சொல்லிவிட்டு,விடுவிடு வென்று வீட்டிற்கு வந்தால் ..ஆஹா கம கம வென்று ஆம்லெட் வாசம்.தயிர் தாளித்து, ஆனியன் போட்டு ஆம்லெட் செய்து, சாப்பிட தயாராகிக்கொண்டிருந்தார் தங்கு.ஆயிரம் தான் சொல்லுங்க..வெளில எவ்வளவோ சாப்பிட்டாலும், வீட்டுல சாப்பிடுற சாதம் ஒரு தனி ருசிதான் போங்க(ஹி ஹி..நாம சமைக்காம இருந்தா!)

Sunday, December 6, 2009

டிசம்பர் 7- கொடிநாள்- ஒரு பார்வை...

டிசம்பர்-7 , கொடிநாள். இந்திய மக்களின் நலனுக்காக, நாட்டின் எல்லையில் காவல் புரியும், ஆயுதம் தாங்கிய முப்படை வீரர்களுக்குமான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கும் நாள்.

சுதந்திர இந்தியாவிலே, 1949 ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் 28 ஆம் தேதி, இந்திய தற்காப்பு பிரிவின் கீழ் , ஒரு கமிட்டி அமையப்பெற்றது. அக்கமிட்டியின் கொள்கைப்படி, நாட்டிற்கு சேவை புரியும் முப்படை வீரர்களுக்கு , அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பொருட்டும், அவர்களின் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் பொருட்டும், ஆண்டுதோறும் டிசம்பர் 7 ஆம் தேதி , பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இக்கொடிநாள் கொண்டாடப்படுகிறது.

கொடியின் வரலாற்றை நினைவில் நிறுத்தவும், முக்கியமாக நாட்டின் எல்லையை காக்கும் படை வீரர்களின் குடும்பங்களை, பாதுகாப்பது நம் கடமையும் பொறுப்பும் ஆகும், என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தவுமே, அவர்களிடம் இருந்து நிதி திரட்டும் முறை உருவாக்கப்பட்டது.

இந்நிதியில் இருந்து வரும் பணத்தை, போர்க்கள புனர்வாழ்விற்கும், படைவீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், ஓய்வுபெற்ற வீரர்களின் ஊதியத்திற்கும், உபயோகப்படுத்தப்படுகிறது.

நாடெங்கும் திரட்டப்படும் நிதியை, நிர்வகிக்கும் பொறுப்பு KSB(Kendriya Sainik Board) ஐ சார்ந்ததாகும். பல தொண்டு நிறுவனங்களும் , பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளனர். டிசம்பர் 7, நாமும் நிதியளிப்போம் நம்மை பாதுகாக்கும் நம் படை வீரர்களுக்காகவும் ,அவர்களின் குடும்பங்களுக்காகவும்.(மறக்காம கொடிய வாங்கிக்கோங்க...)