Saturday, January 30, 2010

உறவுகளாலான உணர்வுகள்..

உறவுகள் என்றென்றும் நம்மை உணர்வுகளோடு உலாவரச்செய்பவை. அவ்வுணர்வுகளின் சாயமோ உறவுகளின் நிலை பொருட்டு மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. சில உறவுகள் நமக்கு மகிழ்ச்சியை தரும்.சில உறவுகள் வேதனையை தரும். சில உறவுகள் நம்மை தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும். சில உறவுகளை தேடிச்சென்றாலும், நம் கை வசப்படாமல் நழுவிச்செல்லும்.


பதினொன்றாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில், ”முதியோர் இல்லத்தின் மனநிலை” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். ஆறு பேர் அடங்கிய குழு எங்களுடையது, ஒரு ஆசிரியர் உள்பட. மதுரையில் உள்ள பல்வேறு முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு சென்று , அவர்களிடம் தனித்தனியாக பேசி , அவர்களுடைய நிலையையும் அதற்கான காரணங்களையும் அறிந்து கொண்டு, அவற்றிற்கான தீர்வை, நம்முடைய பார்வையில் கொடுத்து, அவ்வறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். பல பாட்டிகளிடமும், தாத்தாக்களிடமும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளிலும், உறவுகளைப்பற்றிய ஏக்கங்களும், சூழ்நிலையை நினைத்த நொந்த வலிகளுமே விரவிக்கிடந்தன. உறவுகள் கைவிடப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு பல காரணங்களால் அவர்கள் வந்திருந்தாலும், அடிப்படை காரணங்கள் அன்பை பெறுதலில் உள்ள சிக்கல்களும், புரிந்துகொள்ளலில் உள்ள தவறுகளுமே.. அன்பிற்கு ஏங்காதவர் யாரும் உண்டோ?

கல்லூரியில் தங்கி படிக்கும் காலகட்டத்தில் , வாரம் ஒருமுறை வீட்டிலிருந்து கடிதம் வந்துவிடும். வார்டன் அவர்கள் தான் அதை தருவார். அதையும் பிரித்துதான் தருவார். அவர் கையிலிருந்து வாங்கியதும் அடையும் சந்தோசம் மிகப்பெரியது. கிறுக்கல் எழுத்துக்களில், சில எழுத்துப்பிழைகளோடு அப்பா எழுதியிருக்கும் வார்த்தைகளில், நலவிசாரிப்பும், படிப்பின் அவசியம் பற்றியுமான வாசனை இழையோடும். மடல் வர தாமதமாகி , தொலைபேசியில் அழைக்க முடியாத சூழலில் இருக்கும் நாட்கள் வலியானவை. தொலைவில் இருந்தாலும், வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் அருகில் வைத்திருந்தது அப்பாவிடம் இருந்து வந்த அம்மடல்கள்.


ஆனால் இப்பொழுது கடிதங்களுக்கு பதிலாக சிலநிமிட பேச்சுக்களிலே நலவிசாரிப்புகள் முடிந்துவிடுகின்றன. அன்று அப்பா அனுப்பிய கடிதங்களை இன்று நுகர்ந்துபார்க்கிறேன். அவருடைய எழுத்துக்களில் ஊறியிருக்கும் அன்புச்சிதறல்களை உணரமுடிந்த என்னால், இன்று பேசி வைத்த தொலைபேசியின் வயர்களில் உணரமுடியவில்லை.

சிறு வயதில்,பொரிகடலை வாங்கித்தருவார் என்பதற்காகவே , எனது தந்தையின் கால்களை அமுக்கி விட்டிருக்கிறேன்.அன்று அவருடைய கால்வலியை நான் உணர்ந்துகொண்டதில்லை.
ஆனால் இப்பொழுது உணர்கிறேன், ஒருவித வலி கலந்த அன்புடன்.

பல குடும்பங்களில் ,உறவுகளில் விரிசல் ஏற்பட்டு,பல வருடங்கள் பேசாமல் இருந்து , பிறகு ஒன்று சேர்ந்த கதை கண்டிப்பாக இருக்கும். அக்கதையின் களம் பெரும்பாலும் திருமணவீடோ அல்லது இறந்த வீடோவாகத்தான் இருக்கும். அச்சூழலில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.எனது தந்தையும், அவரது அக்காவும்(எனது அத்தை),கிட்டதட்ட 12 வருடங்களாக பேசாமல் இருந்தார்கள். பிறகு சில வருடங்களுக்குப் பிறகு, இரு குடும்பமும் எனது அண்ணனின் திருமணத்தில் ஒன்று சேர்ந்தனர். அன்று கொண்டாடிய மகிழ்ச்சியை மறக்கவே முடியாது.

உறவுகள் என்றுமே அற்புதமானவை. நம்மை மகிழ்ச்சிப்படுத்துபவை (கையாளும்முறை பொறுத்து). விரும்பிய உறவுகள் அருகில் இருக்கும்போது யானைபலம் நம்முள்.உடுக்க,உண்ண, உறைய நேரம் ஒதுக்குவதுபோல உறவுகளுக்கும் நாம் நேரம் ஒதுக்கவேண்டும். அரையாண்டு மற்றும் முழுஆண்டு விடுமுறை நாட்களில்,சில நாட்களிலாவது குழந்தைகளை உறவுகளின் ஊடே வளரவிட வேண்டும். நமக்கு பிறகு அச்சங்கிலியை பிடிக்க போவது அவர்கள்தானே....