Thursday, April 30, 2009

பருத்திப்பாலும் பணியாரமும்...

மாற்றமே உலக தத்துவம் - கண்ணதாசனின் வைர வரிகள்,நம் காலத்தின் கொடை.

அடுக்குமாடிகளின் ஆவேச வளர்ச்சியால்,அமைதியாக,சவப்பெட்டிக்குள் செல்வதற்கான நாட்களை தினந்தோறும் எண்ணிக்கொண்டிருக்கின்றன ,விளைநிலங்களும்,எழில் கொஞ்சும் பூஞ்சோலைகளும் ...

வீட்டை சுற்றிலும் வேம்பும் புன்னையும் படர்ந்திருக்க,அவற்றில் கொச்சை கயிற்றை கட்டி,மரப்பலகையை வாகாக வைத்து,காற்றிலே ஊஞ்சலாடிய காலம் போய்,கருவறைக்குள்ளே குழந்தை அசைவதைப் போல,வீட்டிற்க்குள்ளே கம்பியால் ஆன ஊஞ்சல் இன்று.. ஊஞ்சலுக்கு கூட கடிவாளம் கட்டியது காலத்தின் மாற்றம்.

புதிதாய் கறந்த பாலில்,சுக்கு, மல்லி, வெல்லம் தட்டி போட்டு,காலையில் பருகும் காபியில் கூட உடல் நலத்தை பேணிய காலம் எங்கே...கானல் நீராய் போனதுதான் மிச்சம்.

பெண்களுக்கு தாலி கட்டாத கணவனாகவும்,ஆண்களுக்கு முழுநேர காதலியாகவும்,விளங்கிக்கொண்டிருக்கும் கணிணியில்,நம் பாரம்பரிய வாழ்வு அடகு வைக்கப்பட்டு விட்டது.மீட்டெடுக்கும் நாளும் அடுத்த தலைமுறையை சாராது.நம்மாலானது,பழமையை மறக்காமல் ,அந்நினைவுகளை அசைபோடுவதுதான் என்றாகிவிட்டது.அதில் நானும் விதிவிலக்கல்ல.

நான் எப்பொழுது மதுரை சென்றாலும்,ஒரு விசயத்தை மறக்காமல் செய்துவிடுவேன்.அது, முருகனை தரிசிக்க என்று கூறி திருப்பரங்குன்றம் செல்வதுதான்.ஆனால் உண்மையான காரணம் பருத்திப்பாலும் பணியாரமும் தான்.

மாலை 5 மணிக்கு மேல்,அக்கோவில் வீதியில்,  அங்கொன்றும் இங்கொன்றுமாய்,பருத்திப்பால் கடையும் ,பணியாரகடையும் களைகட்டும்.சென்னையில் பீசாவும் கெண்டக்கி சிக்கனும்(ஒரு பில்டப்புதான்),உண்டு பழுப்பேறி போன நாவிற்கு,இதமாய் அமையும் பருத்திப்பாலை ,இரண்டு தம்ளர் வாங்கி பருகினால்தான் என் மதுரை பயணம் பூர்த்தியடையும்.

சரவணபவனில் ,28 ரூபாய்க்கு ஆசையாய் வாங்கிய பணியாரத்தட்டில் இருக்கும்,
மூன்று பணியாரங்களை பார்த்துவிட்டு ,ஏற்படும் கோபம்,அவ்வீதியில்,வேலாயி பாட்டிகடையில் ரூபாய்க்கு இரண்டு வாங்கும்போது தணிந்துவிடும்.

நான் சிறுவயதாய் இருந்தபொழுது,எங்கள் வீட்டின் அருகே,ஒரு பெரிய தோப்பு இருந்தது.அந்நாட்களில்,என் அப்பாவுடன் அந்த தோப்பிற்கு சென்று குளிப்பது வழக்கம்.என் அப்பா மோட்டர் போட்டுவிட்டு குளித்துவிட்டு வரும்வரை,தோப்பு முழுதும் எனது ராஜாங்கம்தான்.வேப்பங்குச்சியில் பல்துலக்கிகொண்டே,சறுக்கலில் ஏறி விளையாடுவதும்,ஊஞ்சல் அந்து விழும் அளவிற்கு ஆடுவதும்,தட்டானையும் பட்டாம்பூச்சியையும் தேடி அலைந்ததுமாய்,இதமானதொரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது அந்த தோப்பு.கிணற்றிலே,நான் நீச்சல் பழகுவதற்கான அடிநாதமாய் விளங்கியதும் அவ்விடம்தான்.

ஆனால் ,இன்று அந்த இடத்தில் அக்குளிர்சோலை இருந்ததிற்கான சுவடே இல்லை.இளநீரும்,மாங்காயும்,அவரையும், கத்தரியும் கொடுக்கும் அவ்வட்சய பாத்திரம்,ரியல் எஸ்டேட்காரர்களால் சூறையாடப்பட்டுவிட்டது.என் விளையாட்டு திடலும்,பட்டாம்பூச்சியும் களவாடப்பட்டது.

நாள்முழுதும் ஏசி குளிரில் விறைத்துக்கொண்டிருக்கும் எத்தனைபேருக்கு,தோப்பு மூலிகை நிழல் புரியும்.காசு கொடுத்து நோயை வாங்கிகொண்டிருக்கும் எத்தனை பேருக்கு இயறகை உணவுகள் தெரியும்.

இதெற்க்கெல்லாம் காரணம் யார்? நாம் ..நாம் மட்டும்தான்.சிறுகுடலை வெட்டி எறிந்துவிட்டு,எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்பது போலல்லவா இருக்கின்றோம்.மரங்களின் புனிதமும்,இயற்கையின் முக்கியத்துவமும்,பணத்தின் முன் அடிபட்டுக்கொண்டிருக்கிறதே..

இந்நிலை தொடர்ந்தால்,பருத்திபால் குடிக்க மதுரை செல்லும் என்னைப்போல,ஆக்ஸிசன் நுகர எங்கேயாவது செல்ல வேண்டியிருக்கும் அடுத்த தலைமுறை.
 


Sunday, April 19, 2009

வாய்மொழிதலெனும் சக்தி..


ஆத்திகர்களின் ஆதாம் ஏவால் ஆகட்டும்,நாத்திகர்களின் மனித குரங்காகட்டும்,இருநிலை உயிர்களுமே தத்தம் உணர்வுகளை பறைசாற்றிக் கொள்ள,உபயோகித்த பல்வேறு உபகரணங்களில் இன்று வரை,குறைவிலா குன்றொளியாய் திகழ்ந்து வரும் “ஒலி” எனும் ஆற்றல், “பேச்சு”,”உரையாடல்” என்ற மூலப்பூச்சுக்களை அணிந்து,பரிணாமம் அடைந்திருக்கிறது.

மனிதன் கூட்டமாய் வாழத்தொடங்கிய கால கட்டத்தில்,”சைகை” மொழிபாஷைகள்,அவனுடையதேவைகளையும்,உள்ளக்கிடக்கைகளையும்,
வெளிக்கொணரும் வடிகாலாய் அமைந்திருந்தன.

சிந்து சமவெளி நாகரிகத்தின் உச்சகட்டத்தில், ஒலியின் வடிவம் உருப்பெறத்தொடங்கியது.தங்களது வாழ்வு முறைகளை பறைசாற்றும் வண்ணம்,குகைகளிலும்,கற்பாறைகளிலும் வரிவடிவங்கள்,சித்திரவடிவங்கள் போன்றவற்றை செதுக்கினான்.

படர்ந்து கிளைபிரித்து,பல்வேறு இடங்களில்,தனித்தனி குழுக்களாய் வாழத்தொடங்கினான்.அச்சமயமே,தமக்கான,தத்தம் குழுக்களுக்கான ஒலி பாஷைகள் உருவாக்கப்பட்டது.அவ்வாறான குழு பாஷைகள்,பின்னாட்களில்,
அவரவருக்கான மொழியாய் மாறியது.

இன்று ,அன்றாட நடைமுறைச்செய்தியாகிக் கொண்டிருக்கும் மொழியுணர்வின் பின்புலம் அன்று விதைக்கப்பட்டதுதான்.

பிறப்பின் நோக்கமான பிறப்புவித்தல் முறையே அரங்கேறிகொண்டிருந்த காரணத்தினாலும்,ஆதலால் குழுக்களுக்குள் ஏற்பட்ட இட நெருக்கடியாலும்,தனது தேவைகளை விசாலப்படுத்திக் கொண்ட காரணத்தினாலும்,நாகரிக வளர்ச்சியாக மற்ற இடங்களுக்கும், மற்ற குழுக்களுக்கும் இடம் பெறத்துவங்கினான்.

இவ்வாறாக, பல பாஷைகள் கலக்க தொடங்கின.ஆனபோதும்,தனது பாஷை பேசுபவரிடம் மட்டும் அவனுக்கு அதிக பிடிப்பு ஏற்பட்டது.காரணம் ஒன்றுதான் - அது ”வசதி”(Comfortableness).நம் உணர்வுகளை அப்படியே புரிந்து கொள்ளும் ஆற்றல் ,90% அதே மொழி பேசுபவரால் மட்டுமே உணரமுடியும்.

உதாரணத்திற்கு ஒரு நிகழ்வை கூறுகிறேன்.”யாரடி நீ மோகினி” திரைப்படத்தை முதலில் தெலுங்கில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.தமிழில் ரகுவரன் செய்த பாத்திரத்தை,அங்கே மற்றொருவர் செய்திருந்தார்.பெயர் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் அவர் பல தமிழ்படங்களில் சிறந்த வில்லனாய் நடித்திருந்தவர்(”சாமி” பட வில்லன்). அவரை வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட என்னால்,அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை முழுதாய் புரிந்து கொள்ள இயலவில்லை.தமிழில் பார்த்த பிறகே அதை நான் உணர்ந்தேன்.

ஆக உணர்வுகளை முறையாக புரியவைக்கவும்,புரிந்துகொள்ளவும் உருவாக்கப்பட்ட,வார்த்தைகளின்கலவையானமொழிஎனும்ஒலியின்சக்தி,
இன்று,பெரும்பாலும் பிறரைவசைபாடுவதற்கும்,புறங்கூறுதலுக்கும்,
ஏமாற்றுவதற்கும் அளப்பரிய உதவி செய்து கொண்டிருக்கிறது.

படைக்கப்பட்டதற்கான பயனை மறந்து ,நாவினால் சுட்ட வடுவாகி பாழுங்கிணற்றடியில் நின்று கொண்டிருக்கிறது அவரவர் பாஷை.

மாறுவோம் நாம்.நம்முடைய மொழி வன்னொலி எழுப்ப அல்ல..இன்னொலியை அலைவரிசையாக்க..நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..அன்பு நெறியை வலியுறுத்த..சமூகத்திற்கும்,வரும் சந்ததியருக்கும் நம்மால் முடிந்த உதவி இதுவாகட்டும்.

”அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்”.
Wednesday, April 15, 2009

திரும்ப நான் கல்லூரி சென்றால்..

இந்த தலைப்பிற்கு,தொடர் பதிவிட அழைத்தமைக்கு தேவன் சாருக்கு முதலில் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

கல்லூரி-இந்த வார்த்தை, கல்லூரி படிப்பை முடித்தவருக்கு கிளர்ச்சியையும்,கல்லூரி செல்ல வாய்ப்பில்லாதவருக்கு ஒருவித ஏக்கத்தையும்,கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவருக்கு துள்ளலையும் தரும் ஒரு மந்திரச்சொல்.

பொங்கல்,தீபாவளிக்கு மட்டுமல்லாமல்,வாரத்தில் ஏழு நாளும் வண்ண வண்ண ஆடைகளை புனைந்து,நித்தமும் வாழ்வை திருவிழாவாக்கி கொண்டிருப்பது ,கல்லூரி காலம்.

பாடம் ஒவ்வொன்றிற்கும்,ஒவ்வொரு நோட்டு போட்டு,புத்தக பொதி சுமந்த கழுதைகளிலிருந்து,பட்டாம் பூச்சியாய், “அனைத்தும் அறிவே” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் பொருட்டு,ஒரு சில புத்தகங்களை மட்டும் மார்பில் அணைத்தும்,சட்டையை ட்க் இன் செய்வது போல நோட்டுக்களை டக் இன் செய்தும் பரிணாம வளர்ச்சி கண்டது கல்லூரி.

பள்ளிகளில் கிணற்று தவளையாய் இருந்த நட்பு வட்டம்,பல வண்டிகள் மாறி சென்று படித்து,பல புதிய முகங்களை வாழ்வில் அடையாள்ப்படுத்தி,நட்பு விட்டத்தை அதிகப்படுத்தியது கல்லூரி காலம்.நண்பர்களாய்,இன்றும் நம்முடன் வந்து கொண்டிருப்பவர்களில் ,அதிக சதவிகிதமும் கல்லூரி தந்த வரம்.

தேவையில்லாத தயக்கங்களை வெளியேற்றி,பல திறமைகளை வெளிக்கொணரவும்,உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பளித்த காலம்.

பாடத்தில் பெயிலானால்,காதை பிடித்து திருகாமல்,காசு கொடுத்து மறுபடியும் எழுத சொல்லும் தந்தையையும்,ஹோம் வொர்க் செய்யாததிற்கு ,முட்டி போட சொல்லாத ஆசிரியர்களையும் உள்ளடக்கிய காலம்.

தெளிவாய் அணுகுபவருக்கு,ஏணிப்படிகளாகவும்,நெறிபடுத்தப்படாத எண்ணம் உடையவருக்கு சறுக்கு மரமாகவும் .அமைவது கல்லூரி வாழ்வு.

கடல் போல்,நவரசம் கலந்த அனைத்து உணர்வுகளையும் அள்ளித்தரும் காலம், அந்த நான்கைந்து வருட கல்லூரி காலம் மட்டும் தான்.

இவ்வாறு,அனைவருடைய வாழ்க்கையிலும் வசந்த காலமாய்,ஆயிரமாயிரம் கனவுகளை ருசிக்க வைக்கும்,இனிய பிராந்தியமாய் இருப்பது அவரவர் கல்லூரி காலங்கள்தான்.

வேதனையான பல நிகழ்வுகள் கூட,நினைக்கையில் இனிப்பாய் மாறுவது,கல்லூரி வாழ்வை மறுபடியும் அசைபோடும் போதுதான்..

நானும் எனது கல்லூரி வாழ்வை திரும்பி வாழ நினைக்கிறேன்,அதே நண்பர்களுடன்.ஏனெனில்,”படிப்பு”,”மதிப்பெண்” என்று குதிரைக்கு மாட்டிய கடிவாளமாய்தான்,என் கல்லூரி வாழ்வு சென்றது.நட்பு எனும் நறுமணத்தை ,சரியாக நுகர மறந்த நாட்கள் அவை.இன்றுள்ளது போல் நட்பு வட்டம், அன்று பெரிய பரப்பளவை கொண்டிருக்கவில்லை.

இந்த பதிவெழுத சந்தர்ப்பம் அமைந்தது போல, கல்லூரிக்கு மாணவியாய் செல்ல வாய்ப்பு அமையுமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

இந்த பதிவை தொடர்ந்து எழுத நான் அழைப்பது, ஜமால் மற்றும் வேத்தியன்.

Sunday, April 12, 2009

செவ்வந்தி..


”ஆத்தா..தராச எடுத்து சாக்கு பையில போட்டுட்டேல..”

“போட்டுட்டேன்டா..இந்தா இந்த நீராரத்த குடி..தூக்குவாளில வெண்ணிபழசும்,வெங்காயமும் வச்சுருக்கேன்..பாறப்பட்டி வட்டகல் வந்ததும் தின்னுருல”

“நான் தின்னுக்குறேன்..மீதி புளியெல்லாம் குலுமையில போட்டாச்சுல..”

“ம்ம்..ஆச்சு..”

“முருகன் படத்து சட்டத்துல அம்பது ரூவா சொருகி வச்சுருக்கேன்,நம்ம கோனாரு வருவாக..வந்தா கொடுத்துரு..”

“நான் கொடுத்துக்கறேன்..நீ விரசா சோலிக்கு கிளம்புல..”

“சரித்தா..நான் வர்ரேன்..”

“ஏலே கொமாரு..நம்ம கணக்குபுள்ள தெருவுல ,செவ்வந்தி ருக்குவோட சுத்திக்கிட்டு இருப்பா..அவள வரச்சொல்லு..”

“சரி..சரி..சொல்றேன்” என்றபடி புளிகூடையை பின்னால் வைத்து,ஹாண்டில் பாரில் தொங்கிகொண்டிருக்கும் சாக்கு பைக்குள் தராசையும் வைத்து,கணக்குபிள்ளை தெருவை நோக்கி சைக்கிளை அழுத்தினான் குமார்.

“புளி.புளிளிளி...புளிளி..” கூவிக்கொண்டே அந்த தெருவை அடைந்தான்.

செவ்வந்தி ருக்குவின் சைக்கிளை வைத்து வட்டம் போட்டு கொண்டிருந்தாள்.

“இந்தா ..செவ்வந்தி..ஞாயித்து கெலம ஆச்சுனா ஆத்தாவுக்கு கூட மாட வேல செய்யிறத விட்டுபுட்டு ,இங்க வந்து சுத்திகிட்டு இருக்க”

“இல்லண்ணே..ருக்குதான் கூப்பிட்டா..”

“சரி ..சரி ஆத்தா கூப்புடுச்சு..வூட்டுக்கு போ...”

“அண்ணே..போன திருவிழாவுக்கே சைக்கிளு வாங்கித்தாரேனு சொன்ன..இன்னும் வாங்கிதரல...”

“நம்ம அழகன்சாமி மலை ஏறட்டும்..உனக்கு சைக்கிளு என்ன ,பட்டு பாவட தாவணியே வாங்கிருவோம்..”

“எனக்கு பாவடை தாவணியெல்லாம் வேணாம்..சைக்கிளுதான் வேணும்..”

“சரி வாங்கிபுடலாம்..நீ இப்ப வூட்டுக்கு போ..ஆத்தா தேடிக்கிட்டு இருக்கும்..”

”ம்..சரி”
------------------------------------

“ஏண்டி..செவ்வந்தி..காலைல பல்லு கொப்புலுச்சியா?விடிஞ்சா போதும் வூட்டுல தங்குறது இல்ல..”

“ஆத்தா ..ருக்கு சைக்கிள் வச்சுருக்கா...நெதமும் அவ அதுலதான் பள்ளிகோடத்துக்கு வருவா...”

“அதுக்கு என்னா இப்போ..தெரிஞ்சதுதான..”

“எனக்கும் சைக்கிள் வேணும் ஆத்தா..நானும் ஆறாப்பு போனதுலருந்து கேட்டுக்கிட்டே இருக்கன்ல..”

“உன் அண்ணன் புளி,காய் இதுல வித்து வர்ர காசுல உனக்கு இன்னும் ஒரு பொட்டு தங்கம் வாங்க முடியல..நீ சைக்கிளு கேட்டுகிட்டு திரியிர...”

“எனக்கு தங்கமெல்லாம் வேணாம்..சைக்கிளுதான் வேணும்..”

“ஆமாண்டி...வெறும் சைக்கிள மட்டும் வாங்கிகிட்டு உன்ன எவன் கட்டிப்பான்..போ..போயி அந்த கூடைய எடுத்து தனத்த அடச்சு வையி..”

“ம்ம்..”

“ஆறு குஞ்சும் இருக்கானு சரியா எண்ணி பாத்து கவுத்துடி...”

“சரித்தா...எனக்கு தெரியாதா..சும்மா நொய்யி நொய்யினுட்டு..”
-----------------------------------------------
”ஆத்தா..ஆத்தா...”

“என்னடா கொமாரு..இப்படி கத்துற ..கொல்லயில நம்ம தனத்துக்கு கம்பு போட்டுகிட்டு இருந்தேன்...என்ன விசயம் சொல்லு..”

“நம்ம வடிவேலு அய்யாகிட்ட பேசி 500 ரூவா கடன வாங்குனேன்..”

“எதுக்கு இவ்வளோ காசு வாங்குன...யாரும் சொந்தக்காரக வர்ராகளா..”

“இல்லத்தா..நம்ம செவ்வந்தி ரொம்ப நாளா சைக்கிளு கேட்டுக்கிருந்துச்சுல..தத்தி தத்தி பதுனொன்னாப்பு வேற போயிட்டா..சரி போகுது கழுதனு சைக்கிளு வாங்கிப்புடலாம்னுதான் காசு வாங்கியாந்தேன்..”

“ஏண்டா..உனக்கு கிறுக்கு புடுச்சுருக்காடா..இந்த காச வச்சு ஒரு சிலுக்கு சேல வாங்குனாவாது,கல்லாணம் காச்சினு வந்தா அவ கட்டிக்கிருவாள்ல...அதவிட்டுட்டு,ஆம்பள கணக்கா சைக்கிளு லாரினுகிட்டு..”

“ஆத்தா..அதெல்லாம் பொறவு பாத்துக்கலாம்..இன்னும் கொஞ்ச நாலுதான அவ இங்க இருக்க போறா...அவ சந்தோசமா இருந்துட்டு போகட்டுமே..”

“சரி..உன் இஷ்டம்..”

“கோவிந்தன் கடையில ஒரு சைக்கிளு சொல்லி வச்சிருக்கேன்..நாளைக்கு நானும் செவ்வந்திய்ம் போயி எடுத்துக்கிட்டு வந்துர்ரோம்..”

“ம்ம்...சரி சரி..”

---------------------------------------------------------


“ஆத்தா.நான் போயிட்டு வர்ரேன்...”-செவ்வந்தி.

“ஏ..கொமாரு,இங்க பாருடா..நீ சோலிக்கு போற வரைக்கும் பள்ளிக்கோடம் கெளம்பாம சுத்துறவ,அந்த சைக்கிளையும் குளுப்பாட்டி கெளம்பிட்டா..”

“விடுத்தா..எப்ப பாத்தாலும் அவள் குற சொல்லிகிட்டு..நீ கெளம்பும்மா,செவ்வந்தி..”

“ஆமாண்டா..வயக்காட்டு பக்கம் போனாக்கூட ,அந்த வண்டியையும் எடுத்துக்கிட்டு தான் போறா.. சரசக்கா சொல்லி சிரிச்சா.. இப்ப கூட பாரு,அந்த வண்டிக்கும் குங்குமம் சந்தனம்னு வச்சு ஏறிபோறத”

“சரி..சரி ..விடுத்தா..சின்னப்புள்ள அப்படிதான் இருக்கும்..”
----------------------------------------------------

”ஆத்தா.. நாளைக்கு வாடிப்பட்டிகாரக வர்ராகனு சொல்லிருந்தேன்ல..”

“ஆமா சொன்ன..செவ்வந்திகிட்டயும் சொல்லியாச்சு..அவ எதையும் காதுல வாங்கிக்காம ,வண்டிய எடுத்துட்டு ஊர் சுத்த போயிருக்கா..”

“நாளைக்கு வர்ரவுக வெத்தல பாக்கு மாத்திட்டுதான் போவாக..அதனால நம்ம வூட்டுலதான் ராத்திரி சாப்பாடு...”

“அதுக்கென்னா இப்போ..எல்லா வூட்லயும் இருக்கறதுதானே...கையில காசு ஏதும் வச்சுருக்கியா?..”

“இல்லத்தா..இருந்த காசத்தான் ,போன வாரம் நம்ம வடிவேலு அய்யாகிட்ட கொடுத்தேன்...நீ ஏதும் வச்சிருக்கியா..?”

“நம்ம தனத்த,சரசக்கா அவுக மாப்புள்ள வர்ராகனு சொல்லி 100 ரூவா கொடுத்து வாங்கிட்டு போனாக..அதான் இருக்கு..”

“சரித்தா...அத கொடு..நான் போய் புழுங்கரிசியும் ,பருப்பும் நாடார் கடயில போயி வாங்கியாரேன்..”

----------------------------------------------------------
“எப்படியோ கொமாரு..நிச்சயத்த நல்ல படியா முடிச்சாச்சு...கல்யாணத்தயும் முடிச்சிட்டோமுனா..ஒரு பாரம் கொறயும்...”

“ஆமாத்தா..நானும் அதத்தான் யோசன பண்ணிட்டு இருக்கேன்..”

“ஆமா ..கடேசி நேரத்துல,அவுகளுக்கு பலகாரமும் .செவ்வந்திக்கு பூவும் வாங்க காசு இல்லேனு சொல்லிக்கிருந்த..அப்பறம் எப்படி அவ்வளவு மல்லிப்பூவும்,கிலோ கணக்குல ஜாங்கிரியும் லட்டும் வாங்கியாந்தடா..”

“அது ஒண்ணுமில்ல ஆத்தா...செவ்வந்தி சைக்கிள வித்துட்டேன்..”

கொல்லைப்புரத்தில் நின்றிருந்த செவ்வந்தி,தலையிலிருந்த மல்லியை ஒவ்வொன்றாய் பிய்த்துக்கொண்டிருந்தாள்.


Saturday, April 11, 2009

கையறு(ம்) பாவை...


காண்பதும் வெள்ளை
கேட்பதும் வெள்ளை
உணர்தலோ இல்லை
எவ்வாறுரைப்பேன் எனது நிலை..

சுகமான மணம் நான்
சுடும் பாலைவனத்திலே

குளிரான நிறம் நான்
கும்மிருட்டிலே

இதமான வார்த்தை நான்
இதழ் மவுனத்திலே

வாழ்தலில் மீன் நான்
வாட்டும் சுடுநீரிலே

முடிவிலா வார்த்தைகளுடன்
உறவாடிய ஒருகாலம்

மூச்சிலா உணர்வுகளுடன்
முனகலோடு இக்காலம்

“உள்ளிருக்கும் நிலை கூட
உற்ற நேரத்தில்
உரைக்க வேண்டும்”-நீ உரைத்தது.
“உள்ளிருக்கும் நிலை கூட
உற்ற நேரத்தில்
உறைக்க வேண்டும்”-நான் உரைப்பது.
தடம் மாறியது நானா?
பயணமா?
எவ்வாறுரைப்பேன் எனது நிலை.


Thursday, April 2, 2009

பட்டாம்பூச்சி விருது பெருமைப்படும் அந்த மூன்று நபர்கள்

எழுத்துலகில் மோகம் கொள்வோரின்,வடிகாலாய் அமைந்து வரும் இந்த பதிவுலகம்,எண்ணற்ற திறமையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று சொல்வதில் மிகை ஏதும் இல்லை.

அவ்வுலகத்தில் நானும் உலாவிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கையில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு..


சரி..விஷயத்துக்கு வருகிறேன்..முதலில், ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று(என்னை ஏமாற்றாமல்) எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்த நண்பர் அகநாழிகை(பொன்.வாசுதேவன்) அவர்களுக்கு நன்றி....

அதை,நான் யாராவது மூன்று பேருக்கு தரனுமாமே....தந்துட்டா போச்சு..(இதுல வேற “கரப்பான்பூச்சி” விருது வேற ஒண்ணு வந்துருக்காமே)...முதலில் வால் பையன் என்ற அருண்.இவரை பற்றி நான் சொல்ல தேவையில்லை..என்னை விட உங்களுக்கே அவரை பற்றி நிறைய தெரியும்..2007 ல் இருந்து எழுதி வருகிறார்..அம்மாடியோவ்...அவருடைய படைப்புகளின் பகுதி தொகுப்பே 50 கிட்ட இருக்கும்..இரண்டாவதாக தமிழ்குருவி(சாதிக் அலி)-2008 ல் இருந்து எழுதுகிறார் .இவருடைய பதிவுகளில் நிறைய அறிவியல் சார்ந்த்தாகவே இருக்கும்.அழகாக அறிவியலை புரியவைத்து இருப்பார்.மூன்றாவதாக, என் உயிரே (அபு அப்ஸர்)-இவரும் 2008ல் இருந்து எழுதி வருகிறார்.அழகான படங்களின் மூலம் நிறைய விசயங்களை விளக்கி இருப்பார்.


பட்டாம்பூச்சி விருது பெற்ற இம்மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்..இதை எப்படி உங்களது ப்ளாக்கில் இணைக்க வேண்டும் என்பதை இங்கே சென்று தெரிந்து கொள்ளுங்கள்.(நன்றி சுரேஷ்)