Tuesday, March 31, 2009

தோழியின் திருமணமும்,பிளவுபட்ட தமிழகமும்


தோழியின் திருமணத்தின் பொருட்டு,மதுரை செல்வதற்காக, சென்ற சனிக்கிழமை மதியம், எக்மோரிலிருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரசில் பயணத்தை ஆரம்பித்தேன்.எப்பொழுதுமே,ரயில் பயணத்தின் போது,கடந்து செல்லும் மின் கம்பங்களையும்,மரங்களையும்,சிறிதாகிக் கொண்டே வரும் மலைகளையும்,சக பயணிகளின் பேச்சுக்களையும் ரசிக்கும் என்னால்,ஏனோ அன்று மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை.என் மனம் முழுவதும் என் தோழி வனிதாவே ஆட்கொண்டிருந்தாள்.

+1ல் இருந்து ஆரம்பித்த எங்கள் நட்பு,இளங்கலையில் ஒரே பெஞ்ச்சில் பயணித்த எங்கள் நட்பு,மாதம் ஒருமுறை திரையரங்குகளில் விரிந்த எங்கள் நட்பு,இதோ நாளையுடன் எல்லைகளுக்குள் அடங்கிவிடும்,என்று நினைக்கையில்,மனது எதிலும் லயிக்கவில்லை..

அவளுடைய நினைவுகளை சுமந்தபடி மதுரையை அடைந்தேன்.அன்பொழுக ,அம்மா கொடுத்த அடை தோசை கூட கசந்தது..

அடுத்த நாள்,எனது அம்மா,அப்பா,அண்ணா,நந்து(நந்தினி,எங்க வீட்டு அறுந்த வால் --அண்ணன் மகள்)ஆகியோருடன்,வனிதாவின் திருமணத்திற்கு கிளம்பினேன்.எங்கள் நட்பு மிகவும் ஆழமானதாலும்(எவ்வளோ என்றெல்லாம் கேட்க கூடாது),நாங்கள் பழகும் காலத்திலிருந்தே,இருவர் வீட்டிற்கும் ,நாங்கள் செல்ல பிள்ளை என்பதாலும், எங்கள் அண்ணனுக்கும்,அவளது அப்பாவிற்கும் அரசியல் ரீதியாக பழக்கம் உள்ளதாலும், இந்த ”குழு” பயணம் அவசியமாய் போய்விட்டது..

வனிதா,எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வின் கடைசி புதல்வி ஆதலால்,”ராஜா சர் முத்தையா” மன்றத்தில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.அலங்கார வளைவுகளும்,மேடை அலங்காரமும் கண்ணை கவர்வதாய் இருந்தது.அரசியல் புள்ளி மகளின் கல்யாணம் ஆதலால்,என்னால் அவ்வளவு சீக்கிரம் மணப்பெண்ணின் அறையை அடைய முடியவில்லை.பல முயற்சிகளுக்கு பிறகு அவளை சந்தித்தேன்.என்னை பார்த்ததும் எழுந்து வந்து கட்டிக்கொண்டாள்.எங்கள் இருவராலும் ஏதும் பேசமுடியவில்லை.பிறகு அவளிடம் விடைபெற்றுகொண்டு,மணமேடையின் எதிரே அமைந்திருந்த இருக்கைகளில் அமர்ந்தோம்.

முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதாக கூறி,வனிதாவை அழைத்து வந்து,மாப்பிள்ளை அருகில் அமர வைத்தனர்.தோழியை விட்டு பிரியப்போகிறோம் என்ற வருத்தமும்,அவளுக்கு இப்பொழுது திருமணம் என்ற சந்தோசமும் ,கலந்த கலவையாய் என் மனம் சிலாகித்துக்கொண்டிருந்தது.

திடீரென ,கூட்டத்தில் ஒரே பேச்சும் சலசலப்பும். “என்ன ஆச்சு அண்ணா?” என்று எனது அண்ணனை கேட்க திரும்பினால்,அவரை காணோம்.

நானும் எனது தலையை வலப்பக்கம் 90டிகிரி இடப்பக்கம் 90 டிகிரி என திருப்பி ,அண்ணனை தேடிக்கொண்டிருந்தேன்.சில நிமிடங்களுக்கு பிறகு ,அரக்க பரக்க ஓடி வந்து,எங்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டு,ஒரு சிறு கும்பலை நோக்கி சென்றார்.அங்கு சென்று பார்த்தால்,அட! சிறப்பு விருந்தினர் மு.க.அழகிரியும்,அவரது துணைவியார் காந்தி அழகிரியும் நின்று அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தனர்.எனது அண்ணன் அவர்களது பேரவையில்(பெயர் குறிப்பிட விரும்பவிலை)செயலாளராய் இருப்பதால்,எங்களை அறிமுகப்படுத்திவைத்தார்.

எனக்கு “ஹலோ” சொல்லி கைகுலுக்குவதா?இல்லை “வணக்கம்” சொல்வதா என்று தடுமாறிக்கொண்டிருக்கையில்,அழகிரி அவர்களே “வணக்கம் வாங்க” என்று கூறி எனது தடுமாற்றத்திலிருந்து என்னை காப்பாற்றினார்.

அப்பா,அவரிடம் ஏதும் பேசவில்லை.எனது அம்மாதான்,”நீங்க,ஏதாவது ஒரு தொகுதியில நிற்க வேண்டும்” என்று கூறினார்.

ஏதோ ”அந்த அம்மாவே ”கூறிவிட்ட மகிழ்ச்சியில் அவரும் ,எனது அம்மாவை நோக்கி, “ கவலைப்படாதிங்கம்மா! தேர்தல் முடியட்டும்.வடக்கே ஸ்டாலினும்,இங்கே நானும்னு பிரிச்சு தமிழகத்தை சீர்படுத்திடுவோம்”னு சொல்லி அழகாக புன்னகைத்தார்.

பிறகு,முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால்,தாலி எடுத்து கொடுக்க அவர் மணமேடையை நெருங்கினார்.அவரது தலைமையில் வனிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தது.விருந்து முடித்து விட்டு வீடு திரும்புகையில்,வனிதா மனதில் இல்லை....பிளவுப்படப் போகின்ற தமிழகமே கண்ணில் ஆடியது....இந்த நிகழ்வை “உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...

Thursday, March 26, 2009

தேர்தலுக்கு தயாராகிறேன்

தேர்தல் வரப்போகுதுங்கரதால,ஒரு பதிவு அரசியல் சம்பந்தம்மா போடலாமுனு நினைச்சேன்.உண்மைய சொல்லப் போனா ,எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்.அது என்னமோ தெரியலை,அரசியலும் கிரிக்கெட்டும் எனக்கு வேப்பங்காய் மாதிரி.

சரி விசயத்திற்க்கு வருவோம்..எனக்கு ஒரு பெரிய சந்தேகம்.நான் யாருக்கு வோட்டு போடுறது? (தமிழிஷ்ல இல்லப்பா)எந்த காரணத்துக்காக அவங்களுக்கு வோட்டு போடணும்?
இது மட்டும் தான்ப்பா....போன தடவை நான் வோட்டு போடுரப்பவே ,வீட்டுல ஒரு கலவரம் நடக்காத குறைதான் போங்க.அப்பா,எம்.ஜி.யார் விசிறிங்கறதால,”நான் ஆணை இட்டால் ”ஷ்டைலில் ”அந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.எங்க அம்மா தியாகி மக்ள்ங்கறதால,”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குன்னு சொல்லி “இந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.சரி ,சரின்னு தலையை ஆட்டிட்டு போய் ஒரு பட்டனையும் அமுக்கிட்டு வந்துட்டேன்.(ஆ..அசுக்கு புசுக்கு எந்த பட்டனை அமுக்கினேன்னு சொல்லமாட்டேன்)

இப்பதான் நான் வளந்துட்டேன்ல,சரி சுயமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம்னு நினைக்கிரப்பவே,நிறைய கட்சிகள்...ஒரே குழப்பமா இருக்கு..சரி நம்ம தோழர்கள் உன்ககிட்ட ஒரு ஐடியா கேட்கலாமுனுதான் இங்கே வந்தேன்.

ஆனா,ஒன்னு மட்டும் புரியுதுப்பா..எப்பவுமே ரெண்டு பேருக்கு போட்டி நடக்கும்.அவங்களுக்கு நிறைய ஹெல்ப்பிங் டெண்டன்சி உள்ள கூட்டணி ஃப்ரண்ட்ஷ் வேற..இது இப்ப மூணாவுதா கப்பல் ஓட்டுனர் வந்து இருக்காரு.அவரு இப்ப வரைக்கும் தனியாத்தான் கப்பல் விட்டுகிட்டு இருக்காரு..எப்ப புயலடிச்சு,அடுத்த கப்பலோட மோதப்போகுதோ தெரியல..இதுல சரத்து சாரி சரக்கு கப்பல் வேர,ஒரே கஷ்டமப்பா..

இதுல ,இலங்கை பிரச்சனையை வைத்து தேர்தல் முடிவு வரும்னு பயந்து டயட்ல இருக்கரவங்க எல்லாம் உண்ணாவிரதம் இருக்கிராங்க..ஒண்ணும் சொல்லுரதுக்கு இல்ல..

சரி,என் பிரச்சனைக்கு வாங்க..நான் வோட்டு போடப்போகிர தலைவராகட்டும்,அந்த் கட்சி உறுப்பினர்களாகட்டும் ,they should have the following qualifications..(என்ன ரொம்ப ஓவரா இருக்கா? என்ன பண்றது.எனக்கு வரப்போர தலைவன் எப்படி இருக்கனும்னு எனக்கு ஒரு கனவு இருக்க கூடாதா? இந்த இடத்தில யாராவது கமல நினைச்சிங்கன்னா ஐ அம் வெரி சாரி)

தகுதிகள்:

1)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.

இந்த மாதிரி இன்னும் பெரிய பட்டியல் இருக்கு..முதலில் இந்த 5ம் satisfy ஆகுர தலைவர் யர்ருன்னு எனக்கு சொல்லுங்க..நான் வோட்டு போடுரதுக்கு ஹெல்ப் பண்ணுங்க..


ஏ..சைலன்ஷ்..பதிவு எழுதிட்டு இருக்கேன்ல..டிஷ்டர்ஃப் பண்ணிட்டு..(ஒண்ணுமில்லைங்கண்ணா...அண்ணன் பசங்க வந்து கைய தட்டி விட்டுகிட்டே இருக்காங்க)

டிஷ்கி::தேர்தலுக்கு உபயோகமான ஒரு லிங்க் போய் பாருங்க http:// www.jaagore.com

Sunday, March 22, 2009

முரண்பாடு

இன்று வெள்ளிக்கிழமை.அம்மா தட்டில் வைத்த இட்லியையும் உளுந்த வடையையும் ,தேங்காய் சட்னியில் தோய்த்து,அவசர அவசரமாய் விழுங்கினேன்.இந்நேரம் அருள் வேலையை முடித்திருபானா? இன்று என்ன படம் வரைந்திருப்பான்? மனதில் தோன்றிய கேள்விக்கணைகளை அமுக்கி வைத்துவிட்டு ,என்னுடைய scootiyai ஸ்டார்ட் செய்தேன்.

"அம்மா ...போயிட்டு வர்றேன்..!"

"சரிம்மா..பாத்து போயிட்டு வா.இன்னைக்கு கோவிலுக்கு போகணும் ஞாபகம் இருக்குல்ல "

"இருக்கும்மா,evening சீக்கிரம் வந்துடுறேன் போதுமா.bye"

என் அலுவலகம் அடையார் என்பதால் ,எங்கள் வீட்டிலிருந்து bells road வழியாக கண்ணகி சிலையை அடைந்து ,அடையார் செல்ல வேண்டும்.கண்ணகி சிலைக்கு எதிரே ,திருவல்லிக்கேணி செல்லும் சாலையில் ,இடது ஓரத்தில் தான் எப்போதும் நின்றிருப்பான் அருள்.


கடந்த 5 மாதங்களாக தான் அவனை எனக்கு தெரியும்.வண்டியை வேகமாக அவனிருக்கும் இடத்திற்கு ஓட்டினேன்.அருள்,ரோட்டில் படங்களை வரைந்து ,அதன் மூலம் யாசகம் பெறுபவன்.அவனுக்கு ஒரு கால் வேறு கிடையாது. கட்டையின் துணையோடுதான் நின்று கொண்டிருந்தான்.

அவனுடைய ஒவ்வொரு படங்களும் தத்ருபமாய் இருக்கும்.வெறும் கலர் சாக்பீசாலே தெய்வங்களை அலங்கரித்திருப்பான்.இன்று வெள்ளிக்கிழமை ஆதலால்,பராசக்தி புலியில் அமர்ந்திருந்தாள்.அவள் மேலே 50 பைசா 1 ரூபாய் சில்லறைகள் சிதறிக்கிடந்தன.
அம்மாவை ஒருநாள் இங்கு அழைத்து வந்து காட்ட வேண்டும். பிறகு தினமும் வருகிறேன் என அடம்பிடிப்பாள்.மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

அருள் நல்ல கற்பனைசாலி மற்றும் திறமைசாலியும் கூட.நேரத்திற்கு தகுந்த மாதிரி படம் வரைவான்.நவராத்திரி நேரங்களில் ,பலவகையான அம்மன்கள் ,கிறிஸ்துமஸ் சமயங்களில் ஏசுநாதர்,குடில் ,சுதந்திர தின நேரங்களில் ,தேசத்தலைவர்கள் என்று அவனுடைய படைப்புக்கள் நமக்கு சில செய்திகளை சொல்லிகொண்டிருக்கும்.

சாதி மத பேதங்கள் எல்லாம் தனக்கு தானே மனிதன் அமைத்து கொண்டது என்பதை அவனுடைய நவீன படங்களின் மூலம் உணர்த்துவான்.அதனாலேயே அவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவனுடைய வீடு, சாந்தோம் சர்ச் பின்புறம் உள்ள ஒரு சேரியில் இருக்கிறது என்று கூறியிருக்கிறான்.பாவம் காலில்லா அம்மா,தங்கை ஆகிய இருவருக்கும் இவன்தான் துணை

சரி நாம் ஏதாவது உதவி செய்யாலாமே என்று ,கடந்த ஒரு வாரமாக "youthful fine arts" academy மூலமாக அவனுடைய படங்களை கண்காட்சியாக வைக்கும் முயற்சிகளில் இருக்கிறேன்.இதோ இன்றோடு அந்த வேலையும் முடிந்துவிட்டது.அவனிடம் சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கி விட்டால் ,பிறகு அந்த அகாடமியே எந்த நாளில் நடத்தலாம் என்று சொல்லி விடுவார்கள்.

"என்ன அருள்.இன்னைக்கு எவ்வளவு கலெக்சன்?"

"இப்பதான்க்கா ஆரம்பிச்சிருக்கு ..100 ரூபாய் எப்படியும் தேறும்னு நினைக்கிறேன்"

"சரி..சரி..எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு.இந்தா.இந்த பேப்பரில் கையெழுத்து போடு."

"அக்கா.இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போரேனோ தெரியலைக்கா"-கண் கலங்கினான் அருள்.

"அருள்..உன் திறமையையும் தாண்டி ,உன்னோட முற்ப்போக்கான சிந்தனைகள்தான் இந்த சமுதாயத்திற்கு தேவை.புத்தாண்டு அன்னைக்கு ஒரு படம் வரைந்திருந்தியே ஞாபகம் இருக்கா?சிவன் பார்வதி மடியில் இயேசுவை வைத்து,மேலே பிறை வடிவில் வரைந்து...பல கருத்துக்களை சொல்லாமல் சொல்லி இருந்தாய் .அப்பொழுதே உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது."

"நன்றிக்கா"

"சரி நான் கிளம்பிறேன் அருள்.பார்ப்போம் ".

ஒரு வாரம் கழித்து ,வீட்டிற்கு தபால் வந்திருந்தது.அருளுக்குதான்.அடுத்தமாதம்,27 ஆம் தேதி ,தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ,கண்காட்சி நடத்தலாம் என்பதற்கான செய்தி வந்திருந்தது.

உடனே அருளிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வேண்டும் என்று scooty ஐ எடுத்து கிளம்பினேன்.

"வாணி..மணி ஏழரை.இப்போ ஏன் போற?நாளைக்கு கொடுத்துக்கலாமே?"

"இல்லம்மா.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.இப்பவே அவனுடைய வீட்டுக்கு போய் கொடுத்துட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பிருவேன்..நீயும் வர்றியா?"

"இல்ல..நீ போயிட்டு வா..பாத்து எப்பவும் 40 லே ஓட்டு"

"சரிம்மா வர்றேன்"

சாந்தோம் சர்ச் தாண்டி ,இடது புறத்தில் அமைந்த ,ஒரு சிறிய குறுக்கு தெருவுக்குள் வண்டியை ஓட்டினேன்.அருள் சொன்ன அடையாளங்களை வைத்து அவனுடைய வீட்டை நெருங்கினேன்.

மூக்கினுள் ஏறிய கெட்ட வாடையையும் தாண்டி,மனதில் ஒரு நிறைவான சுகந்தம் தவழ்ந்து கொண்டிருந்தது.

அவனுடைய வீட்டின் முன்புறம் கூட்டமாய் இருந்தது.வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு கூட்டத்தை நோக்கி நடந்தேன்.

"ஏண்டி,கழிசடை,கஸ்மாலம்,ஏதோ போனா போகுதுன்னு டைப் கிளாசுக்கு அனுபிச்சா ..அந்த முருகேசனோட ஊர் சுத்திருயோ ?"-அருளின் குரல்தான்.

மெல்ல கூட்டத்திற்குள் கலந்தேன்.ஒரு பெண்ணை தன்னுடைய கால் கட்டையால் அடித்து கொண்டிருந்தான் அருள்.

" ஏண்டி ..சோத்த திங்கிறியா? இல்ல வேற ஏதாவது திங்கிறியா?இனிமே அந்த இந்துப்பயலோட சுத்தின,கழுத கண்ட துண்டமா வெட்டிருவேன்.அடுத்த வாரம் உனக்கும் நம்ம மாமனுக்கும் கல்லாணம் ...ஜாக்கிரதை "

அருள் இப்படியும் பேசுவானா? தொண்டையை அடைத்தது.

"ஏ ..விடுப்பா.பொட்டபுள்ளைய போட்டு ரொம்ப அடிக்காத.அதான் அடுத்த வாரம் கல்யாணம்னு சொல்லிட்டேல விடு விடு"-பக்கத்தில் நின்றிருந்தவன் அருளை விளக்கினான்.

ஏனோ தெரியவில்லை.அவனிடம் தபாலை கொடுக்காமலே திரும்பினேன்,

Wednesday, March 18, 2009

பிரசன்னாவும் தெய்வீகமும்


சலனமற்று சென்று கொண்டிருக்கும் ஆறு, மேலே இருந்து கீழே விழும் நேரத்தில், அருவியாய் ஏற்றுக்கொள்கின்ற மாற்றம் ,நம்முள் சில சிந்தனைகளையும், பெரும் ஆனந்தத்தையும் அள்ளி தருகிறது என்றால் மிகையில்லை. அது போல,கடந்த சில தினங்களாக, வேலை ,ப்ராஜெக்ட் என்று ஒரே வட்டத்தை விட்டு, வெளியே வாராமல் இருந்த என்னை,தன்னுடைய பாடலின் மூலம் , எங்கோ கொண்டு சென்று உன்னதமான தெய்வீக உணர்வுகளை கொடுத்துவிட்டார் பிரசன்னா.இதோ இந்த பதிவையும் எழுத வைத்து விட்டார்சென்ற வாரத்தில் நடந்த, ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை காண,நேற்றுத்தான் நேரம் கிடைத்தது.(அந்த நிகழ்ச்சியை நெட்டில் பார்ப்பதுதான் என் வழக்கம்.) இந்நிகழ்ச்சியில் தேர்வாகி இருக்கின்ற ஏழு போட்டியாளர்களில் ,ஆறு பேர் முறையாக சங்கீதம் பயின்றவர்கள்.நம் பிரசன்னாவை தவிர...


அவருடைய பல பாடல்களை ,போட்டிகளின் போது கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.எந்த ஒரு பாடலை பாடினாலும் மனுஷன் பிச்சு உதறிடுராருப்ப...நல்ல effort மற்றும் presentation அவருடைய பாடல்களில்உண்டு.


ஆனால்,அவரை ஒப்பேத்தி ,போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற துடிப்பு, நடுவர்களுகிடையே உள்ளதை ,சில வாரங்களாய் காண முடிகின்றது.(ஏன் இப்படியெல்லாம் ??)
நேற்று நான் பார்த்த நிகழ்ச்சி கர்நாடக சங்கீத சுற்று. பாடகி சுதா ரகுநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.அனைத்து போட்டியாளர்களும் நன்றாக பாடினார்கள்.ஆனால் ,பிரசன்னா "வேங்கடாசல" என்ற பாடலை மிக அருமையாக பாடினார்.கிட்டத்தட்ட,நான்கு ஐந்து முறை ,கண்களை மூடி ரசித்து கேட்டேன் .மனதில் உள்ள குழப்பங்கள் விலகி, எதோ ஒரு தெய்வீக உணர்வு என்னை ஆட்கொண்டதாக உணர்ந்தேன்.


நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள் .
பாடல் முடிந்ததும் ,சுதா ரகுநாதன் அவர்கள் கொடுத்த கமென்ட் ,நமக்கும் சரி, பிரசன்னாவுக்கும் சரி ஒரு பூஸ்ட்.அவருடைய கமெண்டின் போது நனைந்தது பிரசன்னாவின் கண்கள் மட்டுமல்ல..என்னுடைய கண்களும்தான்.


"முறையாக எனக்கு சங்கீதம் தெரியாது" என்று குழந்தையாய் பிரசன்னா கூறியதும்,அதற்க்கு சுதா ரகுநாதன் அவர்கள்,"நீங்கள் சொன்னால் ஒழிய ,உங்கள் பாடலின் மூலம் கண்டுபிடிக்க முடியாது "என்றது பிரசன்னாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.சுதா ரகுநாதன் அவர்களின் நேர்மையான ,கமெண்டிற்கு நான் தலை வணங்குகிறேன்.


எந்த ஒரு சங்கீத பின்புலமோ, முறையான பயிற்சியோ இல்லாமல்,வெறும் 48 மணிநேர பயிற்சியால் மட்டுமே இந்த பாடலை பாடினார் என்றால்,அவரை என்ன சொல்லி பாராட்டுவது.பிரசன்னா, உங்களுக்கு இந்த பதிவின் மூலம் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


"வேங்கடாசல"என்றபாடலைஉண்மையில்பாடியஉன்னிக்ரிஷ்ணனுக்கும்,நேற்று பாடிய பிரசன்னாவிற்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.


Thursday, March 12, 2009

நினைவில் நின்றவன்-சிறுகதை(முதல் முயற்சி)

கொடைக்கானல் மலைப்பாதையில் எங்களது டாட்டா சுமோ மெல்ல ஏறத்துவங்கியது. எனது இதயத்துடிப்பும் கூடவே.கடினமான பனிப்பொழிவு ,உடலை குளிர்வித்தாலும்,எனது முகத்தில் அரும்பிய வியர்வையை நான் உணர தவறவில்லை.

"கடவுளே! என்ன சோதனை இது..ஏன் எனக்கு மட்டும் ஞாபகமறதியை கொடுக்க மறந்து விட்டாய்"..மனதுக்குள்ளேயே கடவுளை சாடினேன்.

க்ரீச் .....

"என்னம்மா ,முகமெல்லாம் வேர்த்திருக்கு! "- எனது கணவர் அசோக்"

ஒன்னுமில்லைங்க,மலைப்பாதைனா எனக்கு கொஞ்சம் அலர்ஜி .அதான்..."

OK relax.. இன்னும் ஒன் ஹவர்ல நம்ம "பாலஸ் வுட்லாண்டு " க்கு போய்விடலாம்"-தேனிலவிற்கு செல்லும் குதுகூலம் என்னவரிடம் இருந்தது.

வண்டி சில்வர் பால்சை (silver Falls) தாண்டிக்கொண்டிருந்தது..மனதில் சாரல் அடிக்க தொடங்கியது.

"இதோ இந்த இடத்தில தானே ,நானும் கணேசும் குரங்குகளிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டோம். பிறகு கணேஷ் கம்பை ஓங்க,பதிலுக்கு குரங்குகளும் ஓங்க ,பின்பு நாங்கள் தப்பித்தால் போதும் என ஓடி,..அப்பப்பா .எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்கள்.

சாரல் இப்பொழுது என்னுள் தணலாய் மாறத்துவங்கியது.

"தீபா..ஸ்நாக்ஸ் ஏதும் சாப்பிடுறியா?"-கனவை கலைத்தார் கணவர்.

"இல்லைங்க ..வேண்டாம். ரூமுக்கு போயிட்டு சாப்பிட்டுக்கிறேன் "

கனவை தொடர்ந்தேன்.

வண்டி இப்பொழுது ஏரியின் அருகே உள்ள வளைவான பாதையில் சென்று கொண்டிருந்தது.
மறுபடியும் மனம் கணேஷை நோக்கி விரைந்து சென்று பற்றி கொண்டது.

டோக்கன் கொடுக்கும் இடத்தில ,அனைத்து போட்டுக்கும் (boat) பணம் கொடுத்துவிட்டு ,ஒரு மணி நேரம் ,தனியாய் ஏரியில் உலாவியது ,நினைவை தழுவி சென்றது.எவ்வளவு ரம்யமான நாட்கள் அவை.அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ,நான் நாணத்துடன் கணேஷின் அருகில் அமர்ந்து கொஞ்சி கொஞ்சி பேசியது.....கடவுளே எனக்கு ஞாபக மறதியை கொடு!.

"தீபா ..தீபா..எங்க இருக்கே! ஹோட்டல் வந்துடிச்சு .இறங்கு வா!.உன் வரவுக்காக இந்த ஹோட்டல் காத்து கொண்டு இருக்கு.நானும் கூடத்தான்" அசட்டு சிரிப்புடன் கண்சிமிட்டினார் என் கணவர்.

என் ஹாண்ட்பாகை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

"குட்டிம்மா! இப்போ டைம் 12.30.நாம லன்ச் முடுச்சுட்டு,கொஞ்ச நேரம் வெளியில் சுத்திட்டு ,6.30 போல திரும்பலாம்.O.K வா ? உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே!

"இல்லைங்க"

அந்த ஹோட்டலிலே லன்ச் முடித்தோம்.வெளியே வந்து டாடா சுமோவில் ஏறினோம்.வண்டி நிதானமாக நகர துவங்கியது.

"தீபா டியர் !நாம இப்ப எங்க போறோம் தெரியுமா?"

ம்ஹும்.தெரியாதுங்க!

சூசைடு பாயிண்ட்! இது எல்லோரும் இங்க வந்தோனே போய் பாக்குற சூசைடு பாயிண்ட் இல்ல.இது வேற.இங்கிருந்து 5 கிலோமீட்டர் மேலே உள்ள மலையில்தான் ரியலான சூசைடு பாயிண்ட் இருக்கு.நீ இதுக்கு முன்னாடி போய் இருப்பியான்னு தெரியல.தடுப்பு சுவர் எதுவுமே கிடையாது ! வித்தியாசமா செம த்ரில்லிங்கா இருக்கும்.நீ ரொம்ப என்ஜாய் பண்ணுவ!......................,...........,

என் கணவர் பேச பேச தலை சுற்ற ஆரம்பித்தது .எந்த இடத்தை வாழ்வில் மறுமுறை பார்க்ககூடாது என்று நினைத்தேனோ ,அந்த இடத்தை என் கணவர் மூலமே!..நெஞ்சை அடைத்தது .

"வா தீபா..இடம் வந்திருச்சு .பாத்து இறங்கு.என் கையை பிடிச்சிக்கோ "

அந்த இடத்தை நெருங்க நெருங்க கணேஷின் அருகாமையை என்னால் உணர முடிந்தது.

தீபா....-கணேஷின் குரல். தீபா...- மறுபடியும் கணேஷின் குரல்.

சந்தேகமே இல்லாமல் கணேஷ் தான்,என் கால்கள் இரண்டும் கட்டையாகிவிட்டதா?அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லையே..ஐயோ ..என்னது இது..எனக்கு பார்வை போய் விட்டது.. சுற்றிலும் கருமையாய் உள்ளதே"..........


"தீபா ..தீபா..என்ன ஆச்சுடா ,,எழுந்திரு..ரியாலி சாரிடா .நீ இப்படி பயப்படுவேனு தெரிஞ்சிருந்தா ,இங்க உன்னைய கூபிட்டே வந்திருக்க மாட்டேன் ..வா போகலாம் "-பிஸ்லேரி பாட்டிலுடன் நின்றிருந்தார் என் கணவர். எழுந்து என்னவருடன் நடக்க ஆரம்பித்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் ---என்ற படத்தில் ,என்னுடன் நடித்து ,ஷூட்டிங்கின் போது இதே இடத்தில தவறி விழுந்து இறந்து போன ,நடிகர் கணேஷின் குரல் என்னை விட்டு தொலைவாக சென்று கொண்டிருந்தது.

Saturday, March 7, 2009

மகளிர் தினச்செய்தி மார்ச் 8,2009


அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். 

சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்,முன்னேற்றத்திற்கும் , பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது மட்டுமன்றி தவிர்க்கமுடியாதது என்ற நிலைப்பாடு வளர்ந்து வரும் இவ்வேளையில் ,காலத்தின் சக்கரத்தை பின்னோக்கி ஓட்டி விடுகிறேன். மக்களாட்சி காலத்திற்கு முன் மன்னராட்சி யுகத்திற்கு சென்றோமானால் ,
பெண்களின் நிலை என்ன?
அவர்கள் எவ்வாறு மதிக்கப்பட்டார்கள்? என்ற கேள்விற்கு விடை சற்று புரியலாம்.


அக்காலகட்டத்தில் , அரசியல் கொள்கைகளிலும், வளர்ச்சி யுக்திகளிலும், போர் திறன்களிலும் , பெண்களின் பங்கு அளப்பரியது என்று கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிய வருகிறோம், தேவரடியார்கள் என்று சொல்லப்படும் பெண்கள் கூட , அரசியலில் சில முக்கிய பணிகளில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குரிய மரியாதையும் , மதிப்பும், சுதந்திரமும் வன்மம் இன்றி இருந்தது எனலாம்.


நமது நூற்றாண்டை எடுத்துக்கொண்டோமானால் , சுதந்திரப்போராட்டங்களோடு ஆரம்பித்த நூற்றாண்டு , பெண்களின் பங்களிப்போடுதான் நிறைவுற்றது. வேலுநாச்சியார், ஜான்சிராணி போன்ற வீரப்பெண்மணிகளின் குருதிபடிந்த நாட்டில்தான் நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.

பிறகு ஏன் பெண் சுதந்திரம் என்ற வேள்வி தோன்றியது ? எப்பொழுது தோன்றியது ? யார் காரணம்? முதலில்,பெண் சுதந்திரத்திற்காக "மகளிர் தினம்" கொண்டாடப்படவில்லை என்ற தெளிவு வேண்டும்.

முதன் முதலில் 1908 ஆம் ஆண்டு, பெப்ரவரி திங்கள் 28 ஆம் நாள் , நியூயார்க் நகரில், நெசவுத்தொழில் ஈடுபட்ட பெண்கள் ,தங்களுடைய ,தகுந்த ஊதியம் குறித்தும், சரியான வேலை நேரம் அதாவது ஒரு நாளில் எட்டு மணி நேரமே வேலை என்ற நிலைப்பாடுகளை குறித்தும் ,வலியுறுத்தவே பேரணி நடத்தினர். அது சுதந்திர போராட்டமன்று. உரிமை போராட்டம். ஆகவே இந்த நாளே பெண்கள் நாளாக அவர்களுக்குள்ளே கொண்டாடினர்.

பிறகு ஆங்காங்கே ,உலகின் பல இடங்களில், இவ்வாறான கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் பெண்களால் நடத்தப்பட்டது.. அதன் பிறகு 1911 ஆம் ஆண்டு ,மார்ச் 19, உலக மகளிர் தினமாக ,ஜெர்மனி ,ஆஸ்ட்ரியா ,டென்மார்க் ,மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்பட்டது .இதற்க்கு காரணமாக பெரும் பங்கெடுத்தவர் ,ரஷ்ய புரட்சியாளரும், பெண்ணியவாதியும் ஆன Alexandra Kollontai என்பவரே.இதன் விளைவாக ,1929 ஆம் ஆண்டும் ,1931 ஆம் ஆண்டும் இதே போல், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியின் Belmore Park எனும் இடத்தில , மர வேளையில் ஈடுபட்டிருந்த பெண்கள் ,தங்களுடைய உரிமைக்காக பெரும் பேரணி ஒன்றை கூட்டினர்
இவ்வாறு பல இடங்களில் ,பெண்கள் தனி தனி குழுக்களாக உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுது ,இரண்டாம் உலகப்போரும்,பொருளாதார வீழ்ச்சியும் அவர்களை ஒன்றுபடுத்தியது.அதன்படி,1937 இல் இருந்து ,நாம் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த மார்ச் 8 என்பதே உலக பெண்கள் அனைவருக்கும், "உலக மகளிர் தினமாக " அறிவிக்கப்பட்டது.

ஆகவே மகளிர் தினம் என்பது பெண் உரிமையை வலியுறுத்தி கொண்டாடும் நாள் அன்றி பெண் சுதந்திரத்தை மற்றவர்களிடம் கேட்கும் நாள் அன்று.பெண் சுதந்திரம்
என்று ஏன் நாம் பிதற்றி கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை.

எந்த ஒரு தேவைக்கும் ,பிறரை சார்ந்திருக்கும் நிலை உருவாகும்போது ,தன்னுடைய சுயத்தை விட்டோழிக்கத்தான் வேண்டி இருக்கிறது.பெண்களும் அவ்வாறே.. பிறந்து வளர்ந்து வாழ்நாள் முடிகின்ற வரை ,பிறரை சார்ந்தே இருக்கிறார்கள்.அவர்களால் தன்னுடைய "சுயம்" என்ற சுய உரிமையை ஏந்த முடியாமல் போய்விட்டது.

ஆனால் ,இப்பொழுது அந்த நிலை ,நிறைய மாறியிருக்கிறது.வேலைக்கு செல்கின்றனர்.தொழில் புரிகின்றனர்.இருப்பினும் ஒரு பெண் வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிப்பதால் மட்டுமே,பெண் சுதந்திரம் வந்து விட்டது என் எண்ணலாகாது.எத்தனை பேர் ,அந்த பணத்தை வீட்டில் கொடுத்துவிட்டு,தன் செலவிற்கு, கையேந்தி நிற்கிறார்கள்?

வேலைக்கு செல்வது என்பது ஒரு பெண் சுதந்திரத்தின் சிறு வெளிப்பாடாக வைத்துக்கொள்ளலாமே தவிர ,அதுவே உரிமையையும்,இன்ன பிற தேவைகளையும் நிறைவேற்றாது.

பணிக்கு சென்றாலும்,செல்லாவிட்டாலும்,தொழில் செய்தாலும் செய்யாவிட்டாலும்,அவரவர்க்கென்று தனிமனித உரிமை ,பொறுப்பு,திறமை,பங்களிப்பு இருக்கிறது. அந்த ஒரு சிந்தனை மட்டுமே ,எங்கிருந்தாலும் பெண்களை சுதந்திரமாக வாழ வைக்கும், 

மற்றபடி,பெண் சுதந்திரம் இல்லை என்று அப்பட்டமாக ஆண் சமுதாயத்தை சாடுவது , நம் அறிவிலிதனத்தையே காட்டுகிறது. ஆண்கள்,தான் சம்பாதித்தால் தான் , தன்னுடைய வாழ்க்கை சக்கரம் ஓடும் என்பதை உணர்ந்து உழைக்கிறான். பெண்களுக்கு அப்படி இல்லையே ! "எப்படியாவது அப்பா பீஸ் கட்டி படிக்க வட்சுடுவார், எப்படியாவது,கணவன் சம்பாதித்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவான் என்ற OPTION ,பல பெண்களிடம், அடிமனதில், ஒரு சிறு இடத்தில புதைந்து கிடப்பதால்தான் , அவளால் வெளி வர முடியவில்லை.

இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் விழிப்புணர்வோடும், சுய சிந்தனையோடும் உலா வர வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில்தான் "பெண் சுதந்திரம்" வேண்டும் என்ற பேச்சே பொருளற்று போய்விடும்.


இதை படித்து கொண்டிருக்கும் சிலர் மனதில் இவ்வாறு தோன்றலாம், "இவங்க ஈசியா சொல்லிட்டாங்க, பெண் சுதந்திரம் நம்ம கிட்டதான் இருக்குன்னு. ஆனா அந்தந்த சூழ்நிலைகள்ல இருந்தாதான் தெரியும் " என்று.

அவர்களுக்கு பின்வரும் கதையை கூறுகிறேன். அனைவருக்கும் பரிச்சியமான கதைதான். எதோ ஒரு காரணத்திற்காக , கழுகின் முட்டை, கோழியின் முட்டைகளோடு கலந்து விடுகிறது. கோழிகளின் முட்டைகளோடு சேர்ந்து, கழுகின் முட்டையும் குஞ்சு பொரிக்கிறது. கோழிகளோடே வளர்ந்ததால், தன்னால் உயர பறக்க முடியும் என்ற விழிப்புணர்வும் உண்மையும் தெரியாமல் போய்விடுகிறது. கடைசிவரை,அதுகளுடனே காலத்தையும் கழித்து விடுகிறது.

இதுவே, கழுகிற்கு "உன்னால் பறக்க முடியும் "என்று யாராவது கூறியிருந்தால், விழிப்பூட்டி இருந்தால், கண்டிப்பாக பறந்திருக்கும். கழுகின் நிலைதான் ,பெண் நிலையும் . இருக்கும் இடத்தில இருந்து கொண்டு, பல காரணங்களை துணைக்கு அழைத்து , நான் சுதந்திரமற்று இருக்கிறேன் என்று கூறினால் யார் தவறு?ஆகவே,பெண்களே ,விழிப்புணர்வோடு செயல்படுங்கள். சுதந்திரத்தின் கருவறை உங்களிடமே.அதை வெளியே எதிர்பார்க்காதிர்கள்.

மறுபடியம் எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

Thursday, March 5, 2009

பார்வைகள் பலவிதம்


(மதுரைக்கு சென்று விட்டதால் பதிவுகள் தாமதமானது.சென்னை வந்ததும், காணமல் போனவர்கள் பட்டியலில் என் பெயரை சேர்த்து விட்டார்களோ என்று நினைத்து அனைத்து நாளிதழ்களையும் வாங்கினேன் .அப்பாடா ..அப்படி ஒன்றும் அசம்பாவிதம் நடந்து விடவில்லை ..சரி எல்லோரும் எப்படி இருக்கீங்க .).

விகடன் குட் ப்ளோகில் வந்த ராகவன் சார் அவர்களுக்கும்,தேவா சார் அவர்களுக்கும்,ஜீவன் அண்ணா அவர்களுக்கும், என் இனிய தோழி ரம்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .


ரெண்டு ஷூக்குள்ள எப்படித்தான் மூணு கால விட முடியுதோ?அடேயப்பா முயற்சி திருவினையாக்குமா?
பெண் நாணல் போன்றவள் என்று சொல்வது உண்மைதான்..எங்க இருந்து போட்டாலும் கரெக்டா போடுவோமுலதலை சுத்துதுன்னு சொன்னா இதுதான் அர்த்தமா ?
மற்றவர்களோடு ஒத்து போவதில் பெண்களை மிஞ்ச முடியுமா?

எவ்வளவு பெரிய கை ..என்னாது இது?? ..ஒரே குழப்பமா இருக்கே