Monday, December 16, 2013

அம்மாவின் மனசு

கலைந்து  கிடக்கும் காட்டன் புடவைகளை மடித்தபடியே , கண்ணாடி ஜன்னலின் வழியே வெளியே பார்த்தான் திருப்பதி. வானின் வெள்ளிக்கம்பிகள் பூமியை நனைத்துக் கொண்டிருந்தன .சாரலையும் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களும், பொங்கலுக்கு துணிமணிகள் வாங்க , அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

ஒரு அம்மாவின் கையிலிருந்த குழந்தை , ஆவலோடு தன்  கையை நீட்டியும் , கண்களை விரித்தும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது .அவரும் புரிந்துவிட்ட  ஜாடையில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். திருப்பதிக்கு  சட்டென்று தன்  அம்மாவின் ஞாபகம் வந்தது.

சென்னையில் , மிகவும் பிரபலமில்லாமல் இருக்கும் இந்த துணிக்கடைக்கு அவன் வேலைக்கு சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது . தன் வீட்டு கஷ்ட ஜீவனத்தைக் கண்டு , சமூக அறிவியல் வாத்தியார்தான் தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி இங்கு வேலைக்கு சேர்த்து விட்டார் . இந்த நான்கு வருடத்தில் , பொங்கலுக்கு மட்டும்தான் ஒரு வாரம் லீவு எடுத்துக் கொள்வான் . மற்றபடி முன்னூற்றி ஐம்பத்தியெட்டு நாட்களும் இந்த கடைதான் அவன் உலகம்.


திருப்பதிக்கு சொந்த ஊர் சிவகாசியில் இருக்கும் வேட்டுவபாளையம் எனும்  கிராமம். அப்பா கிடையாது. அம்மாவுக்கு கண்ணில்  பார்வை மங்கிவிட்டதால்  வீட்டிலேயே இருக்கிறாள். சுமதி வசந்தி என்று இரண்டு தங்கைகள். 

 திருப்பதி பத்தாவது செல்லும் வரை அம்மா தான் வீட்டின் ஆணிவேர். தீப்பட்டி  தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தாள். எப்படியாவது கஷ்டப்பட்டு, பிள்ளைகளை படிக்க வைத்து மேடேற்றி விடவேண்டும்  என்பது அவளது கனவாய் இருந்தது. ஆனால் அவள் கனவு  கலைந்தது போல ஒரு நாள் அவள் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட  தீ விபத்து  அவள் கண் பார்வையை முக்கால்வாசி பறித்துக்கொண்டது . அவள் வேலை பார்த்த கம்பெனியோ ஒரு சிறு தொகையை வைத்தியத்துக்காக  கொடுத்து விட்டு  விலகிக் கொண்டது . அன்றிலிருந்து திருப்பதி  அவ்வீட்டின் ஆணிவேர் ஆனான்.அவன் அனுப்பும் சம்பளம் தான்  , அவர்கள் வீட்டின் நீருற்று .


 'இந்த பொங்கலுக்கு போகும்போது அம்மாவுக்கு பட்டு புடவை எடுத்துட்டு போகணும். போன பொங்கலுக்கு வாங்க நினைத்தது. சுமதியின் சடங்கிற்கு செலவாகிவிட்டது . அதற்கு முந்திய பொங்கலுக்கும்  வாங்க நினைத்து வைத்திருந்த பணம், ஆஸ்பத்திரி செலவுக்கு போய்விட்டது .எப்படியோ இந்த பொங்கலுக்காவது  கண்டிப்பாக வாங்கிட்டு போகணும'என்று  நினைத்துக் கொண்டே மடித்த புடவைகளை , வரிசையாக ராக்கரில் அடுக்கி வைத்தான் திருப்பதி.ஆனந்த சிரிப்போடு தங்கைகளின் முகங்களும் அவன் கண்ணில் நிழலாடின.


"ஏம்ம்பா திருப்பதி..உன்னை ரவி சார் கூப்பிடுறார் "- மூன்றாவது மாடியில் ரெடிமேட் செக்சனில் இருக்கும் சுப்பையா அண்ணன் சொல்லிவிட்டு போனார்.

"இதோ வரேன்ணே "-- அவசர அவசரமாக தன்னுடைய இடத்தில் எல்லாம் சரியா அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, கேசியர் ரவியைப்  பார்க்க கிளம்பினான் திருப்பதி.

என்ன தம்பி ஊருக்கு கிளம்பியாச்சா ? எப்போ வண்டி ?-ரவி 

இன்னைக்கு  நைட்டுக்கு சார் .- திருப்பதி.

எப்போ ரிட்டன்?
அடுத்த சனிக்கிழமை வந்துடுவேன் சார்.

ம்ம். சரி .அப்புறம் உன் சீட்டு காசுக்கு துணி எடுத்துகிறியா ? இல்ல பணமா
தந்துறதா?

இல்ல சார் ..டிரஸ் ஆவே எடுத்துக்குறேன்..

சரிப்பா .சர்விஸ் சார்ஜ் கழிச்சது போக மொத்தம் 1850 ரூபாய் இருக்கு. 2500  குள்ள துணி வாங்கிக்க.. பில்ல இங்க வந்து கொடு .  பேலன்ஸ  அடுத்த மாசத்துல கணக்கு பண்ணிக்கலாம் 

சரிங்க சார்  .

பட்டு புடைவை செக்சனில் அரை மணி நேரமாய் தேடி துலாவி 2600க்கு அழகிய நீலக்கலரில் மயில் தோகை பார்டரில் ஒரு புடவையை வாங்கினான். மறக்காமல் ப்ளவ்ஸ் பீஸ் கட் செய்து கொண்டு, முந்தி முடிச்சும்  போட்டு எடுத்து கொண்டான்.


கேண்டினில் சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்த திருப்பதி,  சூட்கேசில் அம்மாவிற்காக  வாங்கிய புடவையையும் , தங்கைகளுக்கு வாங்கிய சுடிதார் ,வளையல் கம்மல் களையும் அழகாக அடுக்கி வைத்து எடுத்துக்கொண்டான் .

நாளை காலை வீட்டில் இருப்போம் .நினைக்கும் போதே சந்தோசமாக இருந்தது. ஒருவேளை அம்மாவிற்கு கண் நன்றாக இருந்திருந்தால் இந்நேரம் காலேஜில் இருந்து வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்திருப்பான் . என்ன.. அம்மா எனக்கு டிரஸ் வாங்கி வைத்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டே  சிவகாசி செல்லும் இரவு பேருந்தில் ஏறினான் . நல்ல வேலையாக சீட் கிடைத்தது .டிவியில் பலரும் கோட் சூட் போட்டபடி நடந்து கொண்டு இருந்தனர் .இவன் டிவியை விடுத்து, வெளியே இருட்டில் கடந்து போகும் வெளிச்சங்களை நோக்கினான்.

 இவன் ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் இந்த பட்டு புடவையை  ,சந்தோசமாய்  அம்மா பொங்கலுக்கு  கட்ட போவதை நினைத்து மகிழ்ந்து கொண்டான். தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மா கட்ட போகும் முதல் பட்டு புடவை இது . அதுவும் அவளுக்கு பிடித்த கலரில். மிகவும் பெருமையாக இருந்தது அவனுள். பல எண்ணங்களை அசை போட்டபடியே பேருந்தின் தாலாட்டில் தூங்கியும் போனான்.

அம்மா - திருப்பதியின் குரல் கேட்டு திண்ணையில் இருந்து எழுத்து வந்த அவன் அம்மா அவன் கைகளை கெட்டியாக பிடித்தபடி வாப்பா திரு வாய்யா என்றபடி உள்ளே அழைத்து சென்றாள்.
எப்படி பா இருக்க?

நல்ல இருக்கேன்மா . நீங்க எப்படிமா இருக்கீங்க

நல்ல இருக்கேன்பா 

எங்க சுமதி வசந்தி ? என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் அண்ணனின் பக்கத்தில் வந்து அமர்ந்தனர்.

என்னணே ..பொங்கல் எல்லாம் வந்துடுச்சா? என்றபடி சந்தோசமாய் அண்ணனை வரவேற்றனர்.


ஓ வந்துடுச்சே என்றபடி சூட்கேசை திறந்து சுடிதார்களை எடுத்து நீட்டினான் .

 இந்தாங்க உங்க ரெண்டு பேருக்கும் சுடிதார்,கம்மல் .

ஹய்யா என்றபடி ஆர்வமாக இருவரும் சுடிதாரை வாங்கிகொண்டனர்.

பிறகு அம்மாவிடம் திரும்பி 'இந்தாங்கம்மா. இது உங்களுக்கு.பட்டு புடவை. பிடிச்சிருக்கா  பாருங்க ' என்று அம்மாவின் கைகளில் கொடுத்தான்.

ஐ அம்மாவுக்கு பட்டு புடவை என்றபடி சுமதியும் வசம்தியும் புடவையை பிரித்து பார்க்க ஆரம்பித்தனர்.


சேலை நல்லா  இருக்கு திருப்பதி. ஆனா கண்ணு தெரியாத காலத்துல எனக்கு எதுக்கு  இதெல்லாம் .. சுமதிக்கு நல்லா இருக்கும்.வயசுப்புள்ள வேற.. அவ கட்டிகிடட்டும் என்றபடி சுமதியின் தலையை வருடியபடி , அவளின் கைகளில்  பாசத்தோடு  புடவையை கொடுத்தாள் அம்மா.


திருப்பதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திடீரென்று எதிர்பார்க்காத அம்மாவின் இச்செயல், அவனுள், அவனுக்கு மட்டுமே தெரிந்த மிகவும்  மெல்லிய  கர்வமெனும் நூலை அறுத்து விட்டு போனது .
சட்டென்று அமைதியாகி விட்ட திருப்பதியை பார்த்த அம்மா 'என்னப்பா உடம்புக்கு ஏதும் பண்ணுதா?' என்றாள் பதை பதைத்தபடி .

'இல்லம்மா ஒன்னும் இல்ல' என்றபடி அம்மாவின் மனசை அறிந்த திருப்தியில்  ' இன்னைக்கு சாயங்காலம் டவுனுக்கு போய்  அம்மாவுக்கு நல்ல காட்டன் புடவை வாங்க வேண்டும்' என்று நினைத்து கொண்டான். அவன் மனதில் பொங்கல் பொங்க தொடங்கியது.

Thursday, December 5, 2013

அது என்னவென்றால் ...

நீரில் படர்ந்திருக்கும்
தாமரை இலையானாலும்
உள்ளிழுக்கும் கொடிமுள்ளாய்  அது.

விரைந்து ஏறும் படிக்கட்டுக்களில்
தடுமாறி விழவைக்கும்
தடுப்புக் கம்பியாய் அது.

அன்றாட வாழ்வினில்
அள்ளிப் பூசிக்கொள்ளும்
அரிதாரமாய் அது.

துவைத்தபின் ஊற்றிவிடும் நீரில்
அலையாமல் ஒதுங்கி நிற்கும்
அழுக்கைப் போல அது.

கதை முடிக்கும் வேளையில்
கற்பனையை  வற்றவைக்கும்
துயிலெழுப்பும் ஓசை அது.

அடுக்கி வைத்திருக்கும்  ஆடைகளுக்குள்
முறுக்கேறித்  திரியும்
மூட்டைப்பூச்சி அது.

உறவு விடுத்து
மண் மறந்து   விலகி நின்று
காலங்கள் பல ஆனாலும்
கருகும் வாசமாய் அது.

இந்த அதுகளுக்கும்
உங்களுக்கும்  தொடர்பிருந்தால்
நீங்களே அதுக்கு  பெயரிட்டுக்   கொள்ளுங்கள்.