Monday, June 29, 2009

விடியலை நோக்கிய ஓர் இரவு...

உஷ்ணம் கலந்த, நீண்ட கரிய சாலைகளை, எனது ஸ்ப்ளெண்டர் விழுங்கிக் கொண்டிருந்தது. எத்தனை சிக்னல்களை விதிமுறையின்றி கடந்திருப்பேன் என்பது ஞாபகத்தில் இல்லை. மாலை நேரத்து எதிர்வெயில் ஹெல்மெட்டின் கண்ணாடிக்குள் புகுந்து கண்ணை உறுத்திற்று. மற்ற நாட்களை விட இன்று அதிகமாய் தலையிலிருந்து வியர்வை கசிந்து, காது மடல்களருகே இறங்கி, உப்பு காற்றை நாசியில் தவழவிட்டது.

ஹெல்மெட்டை கழற்றி எறிந்து விடலாமா? என்று கூட ஒரு நொடி யோசித்தேன். “நேற்றாய் இருந்தால் செய்திருப்பாய்” என்று என்னில் இருந்து ஒரு குரல் என்னை ஏளனம் செய்தது. அதுவும் உண்மைதான். நேற்றுவரை நான் Mr.C.ரமேஷ் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர். ஆனால் இன்றோ C.ரமேஷ் அன் எம்ப்ளாயி.

பெரிய கம்பெனி என்றில்லாத, ஒரு மத்தியதர மென்பொருள் கம்பெனியில் 3 வருடமாக, நாயாய் நேற்றுவரை உழைத்தவன். அதனால்தான் என்னவோ, நாய்க்கு பிஸ்கட் தூக்கியெறிவது போல, பிங்க் ஸ்லிப் கொடுத்து விரட்டிவிட்டனர். நன்றி கெட்டவர்கள்!

சங்கம் தியேட்டர் கடந்தவுடன்,மெதுவாய் வண்டியை வலப்பக்கம் திருப்பி,நேரு பூங்காவின் வாசலருகே ப்ரேக் பிடித்தேன். ரோஸ்நிற கவுன் போட்ட, இரண்டு வயதையொத்த குழந்தையொன்று, கருப்புநிற சுடிதார் பெண்மணியிடம் பலூன் வாங்கித்தரும்படி கெஞ்சிக்கொண்டிருந்தது. வார நாட்களில் கூட கூட்டம் அதிகமாய் இருப்பதாய் தோன்றியது.முடிந்தமட்டும் வண்டியை ஓரமாய் நிறுத்தி பூட்டிவிட்டு, உள்ளே நடக்க ஆரம்பித்தேன்.

இப்பூங்காவிற்கும் எனக்கும் நிறைய உளவியல் தொடர்புகள் இருப்பதாய் இப்பொழுதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்துவருட சென்னை வாழ்க்கையில், எந்த சூழலில் அமைந்த பிரச்சனை என்றாலும், இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லும்போது, மனம் தீர்வை நோக்கி ஓட ஆரம்பிப்பதை கவனித்திருக்கிறேன். வேலை தேடிக்கொண்டிருந்த அந்த ஒருவருட கால கட்டம், இப்பூங்காவில் என்னை நானே உணர்ந்த நாட்கள்.அதனால்தான் என்னவோ, என்னையுமறியாமல் என் உள்மனது, இன்று வண்டியை நேராக இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது.

புல்தரையை ஒட்டிய பச்சைநிற மரப்பெஞ்சில் உட்கார்ந்தேன்.ரோஸ்கவுன் குழந்தை மஞ்சள் பலூனை உதைத்து விளையாடிக்கொண்டிருந்தது. விட்டு அகலா நிழல்போல, மனம் மதியம் நடந்ததையே அசைபோட்டு அலற்றிக் கொண்டிருந்தது.
“மிஸ்டர் ரமேஷ்! கம்பெனியிலிருந்து உங்களை வேலை நிறுத்தம் செய்வதாய் முடிவெடுத்திருக்கிறோம்.ஐ ஆம் ரியலி வெரி சாரி”
இதற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பாஷணைகளில் மனம் ஏனோ லயிக்கவில்லை. மனதிலிருந்த திட்டங்கள், சந்தோசங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் வழிந்தோடிவிட்டது போல் இருந்தது. ரேஸில் தடுமாறி தலை குப்புற விழும் குதிரையை போல இருந்தது இந்நாள்.

வாசலருகே வந்து, இரண்டு ரூபாய் கொடுத்து வாட்டர் பாக்கெட் வாங்கிக்கொண்டேன். நான் செய்வதையே திரும்ப செய்து கொண்டிருக்கும் நிழலை பார்த்தபடியே, நடந்து சென்று, மறுபடியும் பெஞ்சில் அமர்ந்துகொண்டேன்.
இளம்பெண்கள் ஜாகிங் என்ற பெயரில், மற்றவர்களின் மூச்சழுத்தத்தை அதிகப்படுத்திக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் முன்னும் பின்னும் வளர்ந்திருந்த தொப்பையின் அளவை குறைக்க குனிந்து நிமிர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். காதலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூங்காவை அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள், பச்சை மஞ்சள் நிற பலூன்களை தூக்கிப்போட்டு வண்ணமயமாய் விளையாடிக்கொண்டிருந்தனர். ரோஸ்கவுன் குழந்தை, பலூனின் கயிற்றை பிடித்து எடுக்க போராடிக்கொண்டிருந்தது.ஒவ்வொரு தடவை கயிற்றை பிடிக்க போகும் போதும், பலூன் நழுவிக்கொண்டிருந்தது.

வாட்டர் பாக்கெட்டை பிரித்து, சிறிது குடித்துவிட்டு.மீதியை முகத்தில் பீய்ச்சிக்கொண்டேன். ஊரிலிருக்கும் அம்மா ஞாபகத்திற்கு வந்தாள்.
“ரமேஷு, வசந்திக்கு போட்ட மாதிரியே, சுமதிக்கும் இருபது பவுன் போட்டுரோம்னு சொல்லிருக்கு..மறந்துடாத..”
“என்னம்மா நீ..இதபோயி ஞாபகபடுத்திகிட்டு..எனக்கு தெரியாதா?”
பொங்கலுக்கு வீட்டிற்கு போனபோது அம்மாவிடம் பேசியது மனதை பிசைந்தது. பழைய நினைவுகளில் சிறிது மூழ்க ஆரம்பித்தேன்.

அப்பா செல்லையா.சொந்தமாக சவரகடை வைத்திருந்தார். நாள் வருமானம் 30 ஐ தாண்டுவதே கஷ்டம். அம்மாவும், பாதியிலே படிப்பை விட்ட இரு தங்கைகளும் வயல் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தினர். நான் விடுதியில் தங்கிப்படிக்கும்போது, வீட்டிற்கு செல்லவே கஷ்டமாயிருக்கும். வறுமையின் சுவட்டை வாரி இறைத்ததைப்போல் இருக்கும் வீடு. ஆனாலும் அம்மா எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருப்பாள்.
“நீ ஒரு வேலைக்கு போயிட்டேனா எல்லாம் சரியாகிடும்..நீ அதுல மட்டும் கவனமாயிருப்பு” என்று அடிக்கடி சொல்வாள்.

படித்ததும் உடனே வேலையும் கிடைத்துவிடவில்லை. இந்த சிங்கார சென்னை வந்து ,ஒருவருடம் நண்பர்களின் உணவு,உடை,உறைவிடத்தை பகிர்ந்துகொண்டேன்.இப்பூங்காவிற்கு வரவும் பழகியிருந்தேன்.
ரோஸ்கவுன் குழந்தை இன்னும் நழுவிக்கொண்டிருக்கும் பலூனின் கயிற்றை பிடிக்க போராடிக்கொண்டிருந்தது. கருப்பு சுடிதார் ,நழுவிய பலூனை குழந்தையின் அருகே தள்ளிவிட்டுக்கொண்டிருந்தாள். ஏனோ கயிற்றை மட்டும் குழந்தையின் கையில் கொடுக்கவில்லை.

இரண்டாவது வருட ஆரம்பத்தில், ஒரு சாதாரண கம்பெனியில் 6,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது. ஒரு வருடமாய் அற்றுப்போயிருந்த தொடர்பை அன்று புதுப்பித்துக்கொண்டேன் வீட்டில். அதற்கு பிறகு நிறைய மாற்றங்கள். குடிசை ஓடானது, குண்டு பல்ப் டியூப் லைட் ஆனது, கொல்லையில் டாய்லெட் கட்டியது, கடையை வாடகைக்கு விட்டு வீட்டில் பசு கட்டியது, வசந்திக்கு வரன் பார்க்க ஆரம்பித்தது என நிறைய...

8 மாதங்களுக்கு பிறகு, அந்த கம்பெனியை விட்டு, இதோ இன்று பிங்க் ஸ்லிப் கொடுத்த கம்பெனியில், ஆரம்ப சம்பளம் 12,000 க்கு மாறினேன். நான் ஒரு பெரிய நிலைக்கு வந்துவிட்டதாய் வீட்டில் அனைவரும் பூரித்தனர். அம்மாவும் சுமதியும் வயல் வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டார்கள். வசந்திக்கு 20 பவுன் போட்டு கவர்மெண்ட் வாத்தியாருக்கு கல்யாணம் செய்து கொடுத்தோம். போன தடவை ஊருக்கு சென்றிருந்தபோது, ஊர் கண் பட்டுவிட்டது என்று ராமாயி ஆச்சி எங்கள் நால்வரையும் உட்காரசொல்லி, உப்பு மிளகாய்வத்தல் வைத்து திருஷ்டி கழித்து நெருப்பில் தூக்கி போட்டார். சடசடவென்று வெடிக்கும் சப்தம் கேட்டு “திருஷ்டியெல்லாம் கழிஞ்சிருச்சி புஷ்பா ” என்று அம்மாவை பார்த்து கூறினார்.

“அங்கிள்..அங்கிள்..உங்க காலுக்கு கீழே பலூன் பறந்து வந்துடுச்சி .. எடுத்துக்கவா?”
திடுக்கிட்டு, சிறு புன்னகையுடன் குனிந்து பலூனை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.
“தாங்க்ஸ் அங்கிள்” பலூனிலிருந்த தூசியை துடைத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தான்.

ரோஸ்கவுன் குழந்தை இப்பொழுது லாவகமாய் பலூனின் கயிற்றை பிடித்து, தெத்துப்பல் தெரிய, பலூனை போவோர் வருவோர் காலிலெல்லாம் அடித்து , சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தேன். இனிமேல் என்ன செய்வது? கல்யாணத்திற்கு வாங்கிய லோன் மாதமாதம் கட்டவேண்டும். வண்டி வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும். தங்கியிருக்கும் அறைக்கு வாடகை கட்டவேண்டும். இதைதவிர மாதமாதம் செல்போன் பில் வேறு கட்டவேண்டும்.

இப்படி நிறைய “வேண்டும்” கள் அடுக்கடுக்காய் கண்முன் விரிந்தது.
காலடியில் ஏதோ மெத்தென்றது. ரோஸ்கவுன் குழந்தையின் பலூன்தான். “குனிந்து எடுத்துக்கொடுக்கலாமா” என்று யோசிப்பதற்குள், தன் பிஞ்சுவிரல்களால் லாவகமாய் பலூனின் கயிற்றை பிடித்து, என் கால்களில் அடித்து மகிழ்ந்தது. குழந்தை ஏதோ என்னிடம் சொல்லியதுபோல ஒரு உணர்வு. வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
“நீ ஒரு நல்ல வேலைக்கு போயிட்டேனா எல்லாம் சரியாகிடும்..நீ அதுல மட்டும் கவனமாயிருப்பு” - அம்மாவின் குரல் சுகந்தமாய் எங்கிருந்தோ கேட்பது போலிருந்தது.

இரவின் குளுமையை ரசித்துக்கொண்டே, வண்டியை ரூமை நோக்கி விட்டேன் , விடியலை எதிர்பார்த்து நம்பிக்கையுடன்....


Thursday, June 18, 2009

உங்களுக்காக ஒரு ரொமான்ஸ் பதிவு...


தொயந்து சோகமாவே எழுதி, அல்லாத்துக்கும் அழுகாச்சி காட்டுனதால,நெறைய பேர் நொந்து போயிருக்கீங்கனு கமெண்ட்டு,மெயில பாத்தாலே தெரியுது மக்கா...அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துக்கினேன்.இந்த பதிவுல தம்மாத்துண்டு இயத்துலகூட சோகாச்சி வரக்கூடாதுன்னு முடிவு கட்டிக்கினேன்.அத்தால உங்க எல்லாத்துக்கும் ஷோக்கா அதான்பா இன்கிலிபீச்சுல ரொமாண்டிக்கா ஒரு கத சொல்றேன் கேட்டுக்கோ..கத சொல்லும்போச்சு மட்டும் நான் தெளிவாத்தான் சொல்லுவேன்.அதால யாரும் கிராஸ் கொஸ்டின்னெல்லாம் கேக்ககூடாது..சொல்லட்டா......
கதை:
கழுத்தில் புது மஞ்சள் சரடு மின்ன ,கணவன் செந்திலோடு ஒட்டி நடந்தாள் சுந்தரி.நேற்றுதான் திருமணம் நடந்தது.ஈவின்ங் ஷோவிற்கு இரண்டு டிக்கெட்களை எடுத்துக்கொண்டு ,சுந்தரியை உரசியபடியே நடந்தான் செந்தில்.அவளுடைய சரிகை நெய்த அரக்கு கலர் சேலை அவனுடைய கைகளில் உரசி,அவனை கிறங்க வைத்தது.அவளிடமிருந்து வந்த மல்லிகை மணமும் , மஞ்சள் மணமும் அவனை மோகக்கடலில் மூழ்கச்செய்தன. வீட்டிலேயெ இருந்திருக்கலாமோ என்று அடிக்கடி அவனது உள்மனது கூறியது. சுந்தரியுடன் நடந்து செல்வதே அவனுக்கு சொர்க்கத்தில் நடப்பது போலிருந்தது.தியேட்டருக்குள் நுழைந்ததும் அவளின் மெல்லிய விரல்களோடு தன் கைகளை பிணைத்து கொண்டான்.சுந்தரி கைகளை வெட்கத்துடன் விடுவிக்க முயன்றாள்.உடனே கைகளின் இறுக்கத்தை அதிகபடுத்தினான் செந்தில்.சுந்தரியின் முகம் நாணத்தில் சிவந்து இருட்டில் கூட ஒளி காட்டியது.

ஹலோ இன்னா எல்லாரும் கத வாசிக்கிரீங்களா...புடிச்சிருக்கா..என்னாது நான் வர்ரதுதான் புடிக்கலியா..என்னாப்பா இப்பூடி சொல்லிட்டீக..சரி நான் நடய கட்டுறேன்
.

கதை தொடர்கிறது:
இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

இன்னாப்பா எல்லாரும் தொயந்து படிக்கிரீகளா?? இன்னாது இடலே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?? சரி சரி அஜ்ஜஸ் பண்ணிக்கோ.இதோ நான் கிளம்பிட்டேன்..

திரைப்படம் ஓடுவதையே மறந்து இருவரும் ஒருவரையொருவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தப்பட்டனர்.பாடல் காட்சிகளின்போது அவளுடைய கைவிரல்களோடு நாட்டியமாடினான் செந்தில்.சுந்தரி வெட்கத்துடன் கையை விடுவித்துக்கொண்டாள்.
“ஏன்??”-செந்தில்.
“யாராவது பார்க்கபோறாங்க!”-சுந்தரி
“பார்க்கட்டுமே..அதுக்குத்தான் உன் கழுத்துல நான் கட்டின லைசென்ஸ் இருக்கே! “ - செந்தில்.
“அதுக்காக தியேட்டர்லயா?? “ - சுந்தரி.
“அப்போ வீட்டுல வச்சுக்கலாமா ! ம் சொல்லு “ என்று குறும்புடன் கேட்டான் செந்தில்.

கன்னம் சிவந்து நாணத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்தாள் சுந்தரி. பூக்களை வருடும் இளங்காற்றாக அவளுடைய தலையை கோதினான் செந்தில்.சின்ன சின்ன சீண்டல்களிலும் தீண்டல்களிலும் உலகை மறந்தனர்.படத்தின் கதை என்ன என்பது கூட அறியாமல்,திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.மூன்று மணிநேரம் மூன்று நொடிகளாய் மாறிப்போனதை நினைத்து இருவருமே வருந்தினர்.

“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.

என்னா மக்கா..படிச்சீங்களா...அழலையே..அதான் அதான் எனக்கு வேணும்.என்ன கொஞ்சம் கோபமா இருப்பீக கதய படிச்சிட்டு..அதுக்கு நான் என்ன செய்யட்டும்.சோகாச்சி இல்லாமத்தான் எழுதுறேன்னு சொன்னேன்..கோவாச்சி இல்லாமன்னு சொல்லலையே..வரட்டா....கனவு காணாம போயி தூங்குங்க...

Wednesday, June 17, 2009

காத்திருப்பேன் உனக்காக..!


வித்திட்ட விதை எல்லாம்
உன் பேர் சொல்ல
திக்கற்று நிற்கிறேன்
நானிங்கே..
காயத்தை மட்டும்
தந்த நீ
ஏன் களிம்பை தர மறுக்கிறாய்
ஊமைக்கனவுகளுக்கு
எப்பொழுது
உயிர் தரப்போகிறாய்.
உன் நினைவுகளில்
என் வார்த்தைகள்
கூட மயங்கி விட்டன
அதனால்தான்
கவிதை கூட
இங்கே வறட்சியாய்..
நான்
உன்னிடத்தில் வந்த போது
என் எதிர்காலத்தையும்....,
உன் கடந்த காலத்தையும்
மறந்து விட்டேன்.
கானலாகிப்போன
காலங்களுக்காக
என்ன செய்வேன் நான்
கண்ணீரை தவிர ..
இமைக்கும் ஒலி கூட
என்னை பயமுறுத்துகிறது
நீ என்னை பிரியும்போது
தனிமையின்
தணலை தாங்கிக்கொண்டு
தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!