Tuesday, June 21, 2016

பிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்

பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகிய பிரான்சிஸ் இட்டிகோரா  தமிழில் வாசிக்க கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

பெருத்த மழையின் பின்னணியில் இருக்கும் காற்று , நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.  அது போல, நீண்ட உலக வரலாற்றின் பக்கங்களில் பலரின் பங்களிப்புகளும் இருப்புகளும், மறைக்கப்பட்டும், மாற்றப்பட்டும், மறந்தும் போயிருக்கின்றன. ஆனபோதும் அவ்வாறானவர்களின் சிலரது வாழ்க்கையை, மக்கள் கதைகள் மூலமும், பழக்க வழக்கங்களின் மூலமும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவற்றை நகர்த்தி கொண்டுதான் இருக்கின்றனர்.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த, பிரான்சிஸ் இட்டிகோரா எனும் மிளகு வியாபாரியின் கதை, கேரள மாநிலத்தின் குன்னங்குளத்து வியாபார பண்பாட்டின் வரலாற்றில் இருந்து உருவாகிறது.அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வாழும் , கோரா பாட்டனின் வழித்தோன்றலாகிய  இட்டிகோரா என்பவனுக்கும்,  கொச்சினின் 'தி ஸ்கூல்'(தி ஆர்ட் ஆப் லவ் மேக்கிங் ) எனும் நிறுவனத்திற்கும் இடையே நடைபெறும் மின்னஞ்சலின்  வழியாக, பிரான்சிஸ் இட்டிகோராவின் வரலாறு நம் கண்முன்னே விரிகிறது.

நிகழ்காலத்தில் நிகழும் இட்டிகோராவின் சம்பவங்களும், அவன் மூலம் சொல்லப்படும் பிரான்சிஸ் இட்டிகோராவின் வரலாறும் தண்டவாளத்தில் செல்லும் ரயிலைப்போல விறுவிறுவென கதையை முன்னெடுத்துச் செல்கின்றன.  

நாவலின் ஆரம்பம் வன்முறையான காமமும்,   கனிபால் எனப்படும் நரபோஜிகளைப்  பற்றியும்(மனித மாமிசம் உண்பவர்கள்) , ஒன்றிணைத்து இருப்பதால் , ஒருவித அருவருப்பும் தயக்கமும் அதனுடன் கூடிய எதிர்பார்ப்பையும் வாசகனின் மனதில் ஏற்படுத்துகிறது.

1456 இல் கேரள குன்னங்குளத்தில் பிறந்த பிரான்சிஸ் இட்டிகோரா,  பல மொழிவித்தகராகவும் , கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவராகவும் அறியப்படுகிறார். நாவலின் ஒரு இடத்தில் பூஜ்யத்திற்கும் அனந்தத்திற்கும் (infinity) அவர் கொடுக்கும் விளக்கம் ஆச்சர்யமூட்டுகிறது.  தன் சொந்த நாட்டில் விளைந்த மிளகைக்கொண்டு அவர் பல நாடுகளில்  நடத்திய கடல் வணிகம் , குறிப்பாக இத்தாலியில் அவருக்கிருந்த அரசியல் உறவு  பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. 

வெறும் வணிகம் மட்டுமே வாழ்க்கை என்றில்லாமல் , தன் இடம் சார்ந்த  மக்களை வறுமையிலும் , சமூக ஒடுக்கமுறையிலும் இருந்து  மேலெடுத்து வர பிரான்சிஸ்  இட்டிகோரா மேற்கொண்ட வழிமுறைகள் ஒரு சிறந்த வியாபாரி என்ற  நிலையை கடந்து ஒரு நல்ல தலைவனின் இயல்பை காட்டுவதாய்  இருக்கிறது.  அமைதியாய்  ஒரு சமுதாய புரட்சியை,  தன் தொழில் மூலம் செய்தார் என்றும் சொல்லலாம்.

இந்நாவலாசிரியர் , பிரான்சிஸ் இட்டிகோராவின் வரலாற்றை, ஹைபேசியன் சொசைட்டி , பெர்மாட்ஸ் லாஸ்ட் தியரம், கேரள ஸ்கூல் ஆப் மதமடிக்ஸ் மற்றும்  ஐரோப்பியன் மதமேட்டிக்ஸ் தொடர்பு , வாடிகன் போப் ரகசிய உறவு, பால் எர்தோஷ் (ஹங்கேரியன் கணிதவியலாளர் ), La Fornarina பெயிண்டிங்  என்று  பல தளங்களில் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் கோர்த்து சென்றுள்ளார். 

குறிப்பாக ஹைப்பேஷியா என்ற பெண்ணைப் பற்றிய சிறுகதை. இச்சமூகம் தனிப்பட்டவர்களின் நம்பிக்கைகளை எவ்வாறு அலட்சியப்படுத்தி சித்ரவதை செய்தது , மூட நம்பிக்கைகளை சாடுபவர்களை எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தியது  என்பதை பதைபதைப்புடன் சொல்கிறது.  அதுவும் பெண் என்ற பட்சத்தில், அவளுடைய உடலை பலி வாங்க துடிப்பது கொடுமையின் உச்சகட்டம்.

பிரான்சிஸ் இட்டிகோராவின் இறப்பின் உண்மையை திரித்து அல்லது ஏற்று கொள்ள மறுத்து  அவரை குன்னங்குளத்து மக்கள் தெய்வமாய் நினைப்பது , அவர் செய்த நற்செயல்களின் பலன்தான் போலும்.

பதினெட்டாம் கூட்டத்தாரை பற்றி கதைமாந்தர்கள் அறிந்து கொள்ள செல்லும் இடங்கள் ஒருவித மர்ம முடிச்சுக்களை சுட்டிக் காட்டிக்கொண்டே   இருக்கின்றன. 

பதினெட்டாம் கூட்டத்தாரின் வேதநூல் எனப்படும் நூலில் குறிப்பிட்டு  உள்ளது போல  கோராவுக்கு கொடுப்பது எனும் வழக்கம் இன்றும் உள்ளதா எனத்  தெரியவில்லை.  ஆனால் அவ்வழக்கத்தை இந்நாவலின் வழியே படிக்கும் போது  திடுக் திடுக் என்றிருக்கிறது . அதுவும் சூஸன்னா எனும் கதாபாத்திரம் சொல்லி கேட்கும்போது  திகில் கலந்த அருவருப்பு ஏற்படுகிறது.  வயதுக்கு வந்த  பெண்ணை தனி அறையில்  அடைத்து , என்றோ இறந்து போன இட்டிகோராவுடன்  உடலுறவு கொள்வது என்பது  ஒருவித அச்சத்தை நம்முள் படரவிடச் செய்கிறது. 

கோராவுக்கு கொடுப்பது எனும் வழக்கம் இன்றும் சில கிருஸ்துவ குடும்பங்களில் நடைமுறையில் இருக்கலாம் என்று நினைக்கும் போது மனதின் அடியில் ஒரு கிலி உருவாகிறது.

கோராப்பூட்டு எனும் பழக்கம் , இய்யால கோதை எனும் பெண்மணி ,  கொக்கோ டி மெர்க்கு  விதை போன்றவை இந்நாவலுக்கு மேலும் மெருகேற்றி செல்கின்றன. கோராப்பாட்டன் வழி எனப்படும் குன்னங்குளத்து  கடைத்தெரு வழி உண்மையிலேயே இருக்குமானால் கண்டிப்பாக ஒரு தடவை சென்று   பார்க்க  வேண்டும் என ஆவல் மேலிடுகிறது.

நிகழ்காலத்தில்  வாழ்ந்து கொண்டிருக்கும் இட்டிகோராவின் வாழ்வு, பல ஒடுக்கப்பட்ட உதாசீனப்படுத்தப்பட்ட நாடோடி  மக்களின் அடையாளமாகவே உள்ளது. மனித உடலை சுட்டு சாப்பிடும் இடங்கள் , வித்தியாசமான வழிபாட்டு முறைகள்  நம்மை வேறு உலகத்திற்குள் கொண்டு செல்கிறது.  

இரண்டாம் உலகப்போரின் போது சதாமுக்கும் டொனால்டு ராம்ஸபெல்ட்க்கும் நடந்த உரையாடல் , உலக சினிமா என்று இவற்றையும் தொட்டு செல்கிறார் நாவலாசிரியர். பிரான்சிஸ் இட்டிகோராவின் கணிதம் சார்ந்த பங்களிப்பை பற்றி தி ஸ்கூல் இல் நடக்கும் கலந்துரையாடல், நமக்கு உலக யதார்த்தத்தை சொல்லி தருகிறது.

என்னதான்  ஒருவனை பல தலைமுறைகளாக ரகசிய தெய்வமாய் நினைத்திருந்தாலும்,  அவனுடைய வாரிசு  என்றொருவன் வரும்போது அவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, யதார்த்த சூழலில்  இச்சமுதாயம்  கண்டிப்பாய் கொடுத்தே தீரும் என்பதை நாவலின் கடைசி பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம். 

பிரான்சிஸ் இட்டிகோராவை வாசித்த பின், சில கிருஸ்துவ நண்பர்களை  கடந்து போகும் வேளையில்  , இவர்கள் பதினெட்டாம் கூட்டாளியை சேர்ந்தவர்களோ  என்ற சந்தேகமும்  குறுகுறுப்பும்  வந்து போகிறது.Thursday, April 28, 2016

மீராவின் குழலோசை

பெங்களூரின் குளிரையும்  தாண்டி, மண்டபத்தின் ஒலிப்பெருக்கியில் இருந்து மிதந்துவரும் நாதஸ்வர ஓசை, என் ரகசிய நினைவுகளை கிளறி, என்னை தடுமாறச் செய்து கொண்டிருந்தது.  இன்னும் சிறிது நேரத்தில் எனக்கும் என் அத்தை பெண் வசுந்தராவுக்கும் திருமணம்.

நேற்று அடித்த ஜானி வாக்கரின் போதை தெளியாமல் அரவிந்தும் இஸ்மாயிலும் என் கட்டிலின் அருகே  கவிழ்ந்து படுத்திருந்தனர். நான் மாப்பிள்ளை என்பதால், அளவாகவே எனக்கு போதை தரப்பட்டது. தரப்பட்டது என்பதைவிட தந்துகொண்டேன் என்றும் சொல்லலாம். காரணம் மீரா.

பெயரைக் கேட்டவுடன், சாந்தமான முகத்துடன் கையில் தம்புராவோடு  காவி நிற சேலையில்,  கண்ணனுக்காக  காத்து கொண்டிருந்த மீரா உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம்.என் மீராவும் அப்படித்தான். ஆனால் ரகசிய புன்னகையுடன் கையில் புல்லாங்குழலோடு , காட்டன் புடவையில்  இருப்பாள். அவள் வாசிப்பது என்ன ராகம் என்ன தாளம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் கேட்கும் போது மிகவும் சுகமாய் இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் போல. உடல் எடை குறைந்து, பறவையின் இறகைப்போல, காற்றிலே மிதந்து சென்று அவளை சுற்றி சுற்றி வருவது போல இருக்கும்.

இதுநாள் வரையில் நான் அவளிடம் பேசியது கிடையாது. ஆனால் அவளை எனக்கு பிடிக்கும். என்னையும் அவளுக்கு பிடிக்கும்.

மதுரையில், கல்லூரியில் படிக்கும் போதுதான், இதோ கீழே கவிழ்ந்து கிடக்குறானே அரவிந்த், எனக்கு அறிமுகம் ஆனான். நன்றாக மிருதங்கம் வாசிப்பான். ஆனால் எனக்கு அந்த சப்தம் பிடிக்காது. ஏதோ கடாமுடாவென்று காதை அடைப்பது போலிருக்கும். கல்லூரி செல்லும் நாட்களில்,  அவனது வீட்டுக்கு சென்றுவிட்டு தான் கல்லூரிக்கே போவோம். ஏனெனில் அவனது வீடு கல்லூரியின் பின் வளாக தெருவில், வேப்ப மரங்கள் அடர்ந்த முனையில் இருந்தது. நான் செல்வதற்கு முன்பாகவே கதிரும் இஸ்மாயிலும் அவனது வீட்டிற்கு வந்து விடுவார்கள்.

அரவிந்தின் வீடு மிகவும் அழகாகவும் விசாலமாகவும் இருக்கும்.  தாமரைப்பூ வேலைப்பாடு அமைந்த கிரில்லின் கேட்டை இணைத்து எழுப்பப்பட்ட மதிலில், இரு பக்கமும் கரு நிறத்து  யானை சிலைகள் இருக்கும். குட்டி யானைகள் இரண்டு காவலுக்கு நிற்பது போன்ற பிரம்மை கூட எனக்கு அடிக்கடி தோன்றும்.

கிரில்லை தாண்டி படியேறி வீட்டிற்குள் செல்வதற்கு எப்படியும் இரண்டு நிமிடங்கள் ஆகலாம். அவ்வளவு ரம்மியமாக,  நடை பாதையின் இரு புறத்திலும் வண்ண வண்ண பூக்கள் பூத்திருக்கும். ரோஜாவைத் தவிர சத்தியமாக  மற்ற பூக்களின் பெயர்களையெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சில நேரங்களில், அப்பூக்களின் மேல் சுற்றி திரியும் வண்டுகளை கண்டு மெய் மறந்து ரசித்திருக்கிறேன். அதெல்லாம் பழைய கதை.

சொல்ல மறந்து விட்டேனே அரவிந்தின் அக்காதான் மீரா.  இரண்டு வயது மூத்தவள். காதில் தேன் பாய்வது போன்று புல்லாங்குழல் வாசிப்பாள். காற்றுக்கும் அவளுக்கும் ரகசிய சம்பாஷனை நடப்பது போலிருக்கும்.  உடனே உங்களது எண்ணங்கள் தாறுமாறாக செல்வதை என்னால் உணர முடிகிறது. நானும் மீராவும் காதலித்து, பின் பெற்றவர்களுக்கு தெரியவந்து பிரச்சனையாகி பிரிந்துவிட்டோம் என்று.

இல்லை. நாங்கள் காதலிக்க வில்லை. எங்களுக்குள்  அந்த எண்ணமும் இருந்ததில்லை. ஒருவேளை, மீரா என்னை விட மூத்தவள் என்பதாலோ என்னவோ தெரியவில்லை.

ஒருநாள், பிராக்டிகல் தேர்வு முடிந்து நானும் கதிரும் சீக்கிரமே கிளம்பி விட்டோம். அரவிந்தின் வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். வீட்டின் அருகே செல்ல செல்ல, குழலின் ஓசை மாடியிலிருந்து எங்களை அழைத்தது. நானும் கதிரும் அண்ணாந்து மேலே பார்த்தோம். வேப்பம்பூக்களோடு இருந்த சில கிளைகள் மறைத்திருக்க,  மாடியறையின் ஜன்னல் வழியே மீராவின் முகம். தன்னை மறந்து புல்லாங்குழல் வாசித்து கொண்டிருந்தாள். ஏனோ அந்த குழலோசை, ஒரு ரகசிய அழைப்பை  எனக்காக தூது விடுப்பது போல இருந்தது.

சட்டென்று  சொல்லவொன்னா  தவிப்பு என்னுள். குளிர்ந்த காற்று விர்ரென கிளம்பி, என் ஆடைக்குள் புகுந்து ஜில்லிட செய்வது போலிருந்தது. என்னவென்று சொல்ல தெரியவில்லை.  இந்த உணர்வு ஒருவித புது பரவசத்தை என்னுள்  விதைக்க ஆரம்பித்திருந்தது . ஆனால் அது காதலில்லை என்று, மனதுக்குள்  திரும்ப திரும்ப சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

கதிர்தான் அழைத்தான். " வாடா, அரவிந்த் வரவரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணலாம்" என்று.  என்னால் மறுக்க முடியவில்லை.  மறுக்க முடியவில்லை என்பதை விட மகிழ்ந்தேன் என்பதுதான் பொருத்தமாய் இருக்கும்.  அரவிந்தின் அம்மாவை பற்றி பிரச்சனை இல்லை, தானுண்டு சமையலுண்டு என்றிருப்பார்.

ஆதலால், அரவிந்த் வீட்டு ஹாலில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தபடியே நானும் கதிரும் பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் என் மனமெல்லாம் குழலின் ஓசை வழியே பயணித்துக் கொண்டிருந்தது.  ஏனோ அவ்வோசை என் நெஞ்சை அடைப்பது போலவும்,  வா வா என்று அழைப்பது போலவும் இருந்தது. சட்டென்று கதிரின் கையை பிடித்து " வாடா போகலாம்" என்று சொல்லி, விறு விறுவென்று வெளியே நடந்தேன்.

கிரில்லை கடந்து சாலையில் வந்தவுடன், மேலே நிமிர்ந்து பார்த்தேன். மீராவும் என்னை பார்த்தாள். வாசிப்பதை நிறுத்தியிருந்தாள். அவள் உதட்டோரம் பூத்த புன்னகை என்னை ஆவேசப்படுத்தியது. ஓடாத குறையாக வீடு வந்து சேர்ந்தேன். அதற்கு பிறகான நாட்கள், என் வாழ்வில் மறக்கமுடியா தருணங்களாகும் என கனவிலும் நினைக்கவில்லை.

அரவிந்த் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் மீரா என் கண்ணில் பட்டாள். கண்ணில் பட்டாளா அல்லது என் கண்ணில் படுவதற்காக வந்தாளா  என்று இன்றுவரை எனக்கு தெரியாது. உதட்டோரம் அதே ரகசிய புன்னகை.  நானும் புன்னகைத்து வைத்தேன் படபடப்போடு.

அரவிந்த் வீட்டில், தேர்வுக்கு சேர்ந்து படிக்கும் நாட்களில் எல்லாம் மீராவின் குழலோசை பின்னணி இசையை போல ஒலிக்கும். சில சமயங்களில், அந்த ஓசை இல்லாமல் படிக்க முடியாதோ என்று கூட தோன்றும்.  தன் அக்காவை பற்றி பேசும் ஒரு சந்தர்ப்பத்தில்,  அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருப்பதாக அரவிந்த் கூறினான்.  கொஞ்சம் நிம்மதியாகவும் நிறைய கவலையாகவும் இருந்தது.

ஒரு நாள், பல கதைகளில்  வருவது போன்று, ஒரு மழை நேரத்து மாலைப் பொழுது. நான், கதிர், அரவிந்த் மூவரும்  எப்பொழுதும் போல் அரவிந்த் வீட்டில் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தோம். மேகங்கள் இருட்டி கொண்டு வந்து சில்லென்று காற்று வீசியது.  மழைத்தூறல்களோடு சேர்ந்து மரக்கிளைகளும் ஆடுவது ஜன்னலின் வழியே ரம்மியமாய் தெரிந்தது.

மீரா எப்பொழுதும் போல வாசிக்க தொடங்கியிருந்தாள்.  ஐசொமெரிசத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஐஸாகி கொண்டிருக்கும் என் மனமும் உடலும் பதற ஆரம்பித்தது. எழுந்து பாத்ரூம் நோக்கி செல்ல ஆரம்பித்தேன். அவளின் அறையை கடந்து தான் செல்ல வேண்டும். மெதுவாக நடந்து, திறந்திருந்த அவளது அறையின் முன் நின்றேன். என்னைப் பார்த்ததும்,வாசிப்பதை நிறுத்தி,  கட்டிலில் இருந்து எழுந்து,  என்ன என்பது போல் பார்த்தாள்.


உதட்டோரம் அதே ரகசிய புன்னகை. அசையாமல் நின்றேன். அவளும் கூட. மெதுவாக அறைக்குள் நடந்தேன். ஜன்னல் கம்பியின் வழியே படர்ந்திருந்த முல்லை பூவின் வாசம் அறை முழுதும் நிரம்பியிருந்தது. அவளது கண்ணில் எந்த பதட்டமும் இருந்ததாக தெரியவில்லை. அவளின் அருகே சென்றேன். ஜவ்வாதும் பாண்ட்சும் கலந்த மனம் அவளிடமிருந்து.

என்ன செய்வது என்று தெரியவில்லை. சட்டென்று அவளை அணைத்து இதழோடு முத்தமிட்டேன். அவள் எதிர்க்கவில்லை. அமைதியாக கண்மூடி நின்றாள். எனக்கு மூச்சு அடைப்பது போலிருந்தது. வேகமாக வெளியே சென்று திரும்பி பார்த்தேன். அவளிடமிருந்து அதே ரகசிய புன்னகை . இம்முறை புன்னகை என்பதைவிட சிரிப்பு என்றே சொல்லலாம்.

என்னால் தாங்க முடியவில்லை. இதயம் வெடித்து விடும் போலிருந்தது. அரவிந்திடம் குடை வாங்கி கொண்டு  மழையில் நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். ஒருவாரமாக அவனது வீட்டு பக்கம் செல்ல வில்லை. அரவிந்திடம் சொல்லி இருப்பாளோ அல்லது தற்கொலை ஏதும் செய்து கொள்வாளோ என்ற பயம் வயிற்றை கவ்வியது.

ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. இயல்பாகவே நாட்கள் நகர்ந்தன. அரவிந்த் எப்பொழுதும் போலவே பழகியது சிறிது நிம்மதியை கொடுத்தது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அவனுடைய வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன். எப்பொழுதும் போல் பூக்கள் பூத்திருந்தன. புல்லாங்குழல் இசை கேட்டு கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது வேறு மாதிரியாக மலை முகடுகளின் இடையே சோவென்று விழும் அருவியை போல ஒலித்தது.

என் கண்கள் மீராவை தேடின. அவள் வந்தாள். புன்னகைத்தாள். நானும் புன்னகைத்தேன். அரவிந்த் கவனிக்காத சில நேரங்களில், புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல பாவனை செய்தாள்.  தொண்டைக்குள் இருந்து தீ பரவி கீழே இறங்குவது போலிருந்தது. அமைதியாக கீழே குனிந்து கொண்டேன்.

ஒருநாள், அரவிந்த் அவனது புத்தகத்தை எடுக்க போயிருந்த வேளையில், ஊஞ்சலில் சாய்ந்து நின்று  கொண்டு ,வாசலில்  வரைந்திருந்த கோலத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்.  திடீரென மீரா அருகே வந்தாள்.  நான் நிதானித்து விலகுவதற்குள் , என்னை  அணைத்து என் இதழில் முத்தமிட்டாள். மழையோடு ஐஸ் க்ரீம்  சாப்பிடுவது  போன்ற நடுக்கம் என்னுள். பின்பு ஏதும் நடக்காதது போல , உள்ளே சென்று குழல் வாசிக்க ஆரம்பித்து விட்டாள். எனக்குத்தான் பிரம்மை பிடித்தது போலிருந்தது.

அதற்கு பிறகு, அவனது வீட்டிற்கு போக கூடாது என்று முடிவெடுப்பதும், மீறி போகும் போதெல்லாம், சட்டென்று வந்து கொடுக்கும்  மீராவின் முத்தமும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது . கல்லூரி முடிந்து செல்லும் கடைசி நாளில் கூட அவளுடைய முத்தம் என் இதழையும் இதயத்தையும் நனைத்தது. அதுதான் அவளது கடைசி முத்தம்.

அதன் பிறகு, மீராவை சந்தித்து இன்றோடு ஐந்து வருடங்கள் சொச்சம்  ஆகிவிட்டன. மீராவின் திருமண பத்திரிக்கையை கூட அரவிந்த் நேரே வந்து கொடுத்தான். ஏனோ எனக்கு போக பிடிக்கவில்லை.

அதன் பிறகு, வேலை, சேமிப்பு, குடும்பம்  என்று என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. மீராவை மறந்து போயிருந்தேன் என்று சொல்வதெல்லாம் பொய். எந்த படத்தில்  முத்தக் காட்சியைப் பார்த்தாலும், எங்கெல்லாம் வாத்திய கருவிகளின் இசையை கேட்டாலும் அவளது ஞாபகம் வரும். அவளும் என்னை நினைத்துக்கொள்வாள் என்ற நினைப்பு கூட எனக்கு சந்தோசத்தை கொடுத்தது.

வசுந்தராவுக்கும் எனக்கும் திருமண பத்திரிகை பிரண்ட் ஆகி வந்ததும், மறக்காமல் அரவிந்திடம் அட்ரஸ் வாங்கி, நெய்வேலியில் இருக்கும் மீராவிற்கு அனுப்பி வைத்தேன். இதோ இன்னும் சிறிது நேரத்தில் மீரா வந்து விடுவாள். ஏனோ அர்த்தமில்லா ஓர் பயமும், படபடப்பும், மகிழ்ச்சியும்  கலர்ந்த உணர்வு என்னுள் பரவ ஆரம்பித்தது. திருமண பரிசாக ஒரு முத்தத்தை தந்துவிடுவாளோ என்ற சந்தேகம் கூட அதற்கு காரணமாய் இருக்கலாம்.

மண்டபம் மனித தலைகளால் நிறைய ஆரம்பித்தது. அனைவரின் ஆசியோடும், கெட்டி மேளமும் நாதஸ்வரமும்  ஒலிக்க வசுந்தராவின் கழுத்தில் தாலி கட்டினேன்.  நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த மீராவின் வாழ்த்துக்கள், அட்சதையின் மூலம் என்னை வந்து சேர்ந்தது. மீரா மிக நேர்த்தியாய் இளஞ்சிவப்பு காட்டன் புடவை கட்டி இருந்தாள். கையில் புல்லாங்குழல் இருக்கிறதா என்று  சந்தேகத்தோடு தேடினேன். நான் தேடியது அவளுக்கு புரிந்திருக்கும் போல. மெலிதாக புன்னகைத்தாள். அதே ரகசிய புன்னகை. நானும் புன்னகைத்தேன். கையில் எனக்காக பச்சை வண்ண பெட்டியில் பரிசு வாங்கி வந்திருந்தாள்.

வரிசையில் நின்று வசுந்தராவிற்கு  வாழ்த்து சொல்லி, என் கையில் பரிசை தந்து விட்டு, அதே உதட்டோர ரகசிய  புன்னகையுடன் கும்பலில் காணாமல் போனாள் மீரா.  என் கண்கள் அவளை தேடின. ஆனால் அவள் தென்படவில்லை . உடை மாற்றும் சாக்கில், அறைக்குள்  வந்து மீராவின் பரிசை பிரித்துப் பார்த்தேன். சட்டென்று விழியோரம் சிறு துளிகள் எட்டி பார்த்து கண்களை மறைத்தது. அவற்றை துடைக்க மனம் வரவில்லை. பெட்டியில் மஞ்சள் வெல்வெட் துணியில், புல்லாங்குழல் ஒன்று மயிலிறகோடு சுற்றி இருந்தது. மீராவுக்கு தெரியும் நான்  ஒவ்வொரு முறையும் இந்த புல்லாங்குழலை கையில் எடுக்கும் பொழுதெல்லாம் எதை நினைத்துக்கொள்வேன் என்று. சிறு புன்னகை என் உதட்டோரம் தவழ துவங்கியிருந்தது. மீராவின் ரகசிய புன்னகை போல.