Saturday, March 27, 2010

தீர்மானங்களின் தடுமாற்றம்


இது என்னுடைய 50 வது பதிவு. இவ்வேளையில், நான் பதிவிட ஆரம்பித்த காலகட்டத்தில், தன்னுடைய பின்னூட்டங்களின் மூலம் என்னை பெரிதும் ஊக்கப்படுத்திய ராகவன் அண்ணாவிற்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
-----------------------------------------
தீர்மானங்கள் எடுப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான, இலகுவான விசயம்.தீர்மானங்கள் மனிதனின் மனதை சுத்தப்படுத்தும் கருவியாக இருந்து வருகிறது.தேவையில்லா விசயங்களை தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக பிறந்ததுபோல வாழ முற்படுத்துவதற்கு, செய்த தவறுகள் பலவற்றை மறப்பதற்கு, மற்றவரிடம் சொல்லி பெருமை படுவதற்கு என்று பலவகையில் தீர்மானங்கள் மனிதனின் ஆளுமையுடன் பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது.இவ்வுலகில் தீர்மானங்களே எடுக்காத உயிர் என்று எதுவுமே இல்லை.


வருடத்தின் ஆரம்ப நாளில் , தீர்மானங்களை எடுப்பவர்களாகட்டும், அனுதினமும் ஏதாவது ஒரு தீர்மானங்களை எடுப்பவராகட்டும், எத்தனை பேர் அதை சரிவர பின்பற்றுகிறோம் என்பது அவதானிக்க முடியாத ஒன்று.தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு பல காரணிகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒரு தடையாய் இருப்பது ஆழ்மன போராட்டம்.

உதாரணத்திற்கு, உடம்பை குறைக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அதற்காக தினமும் உடற்பயிற்சியும் சரியான உணவு பழக்க வழக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவும் (அதாவது தீர்மானம்) எடுத்திருப்போம். ஆனால் அதிகாலையில் எழுந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் என செயல்திட்டம் உதிக்கும்போது, நம்முடைய தீர்மானங்கள் ஆழ்மனதிற்கு சென்று சேர்ந்திருந்தால், எவ்வித தடையுமின்றி நம்மால் பயிற்சியை தொடர்ந்திட முடியும். அன்றேல், தூக்கம் மட்டும்தான் மிஞ்சும்.

மேலோட்டமாக எடுக்கப்படும் தீர்மானங்களும், சூழ்நிலை கைதியாகி எடுக்கப்படும் தீர்மானங்களும், காற்றில்லாத பலூன்போல கீழே கிடக்கும். சுய சிந்தையோடு, ஆழ்மனதின் விழிப்புணர்வோடு எடுக்கும் எந்த ஒரு முடிவும் தீர்மானமும், நம்மை நம்மையறியாமலே செயல்படவைக்கும்.


வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். அவை ஆழ்மன விழிப்புணர்வோடு எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக பதிவிடுவேன். பார்போம் என்ன நடக்க போகிறது என்பதை.

------------------------------------------

சென்ற வாரம் “இண்டி ப்ளாக்கர்” மீட்டிங் சென்றிருந்தேன். பல புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.அதில் நிறைய பேர் பல வலைப்பூக்களை நிர்வகிப்பவர்களாய் இருக்கின்றனர். ஒவ்வொரு வலைப்பூவும் ஒவ்வொரு கரு கொண்டதாய் உள்ளது. உதாரணத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பூவென்று தனியாக, சமையெலுக்கென்று தனியாக, சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள என்று தனியாக. மேலும் அவற்றின் மூலம் எவ்வாறு பணம் ஈட்டலாம் என்பதிலும் முனைப்பாகவும் தொலைநோக்கு பார்வையுடனும் உள்ளனர்.
----------------------------------




Monday, March 8, 2010

தனிமையைத் தேடி...



அரிதாகிவிட்ட உன் அண்மைகளால்
என் நாட்குறிப்புகள்
தழும்பேறிக்கொண்டிருக்கின்றன.

அடிக்கடி தொலைந்து போய் விடுவாய் எனத்தெரிந்தும்
என் வீட்டுச்சாளரங்களை திறந்து விடுகிறேன்.

உன்னுடனான ரகசிய தொடர்புகளை பத்திரமாய்
என் படுக்கையின் அடியில் பதுக்கி வைத்துள்ளேன்
என்றேனும் எழுந்து வந்து
கடிகார முள் சப்தத்துடன் என்னை ஆளமாட்டாயா என்று .

உலராத நினைவுகளின் வாசனை
என் வீட்டு செம்பருத்தி இலையின் பச்சையமாக இருக்கிறது.
உன்னிருப்பை உணர்த்தும்போது..

என்னுள் என்னை பார்க்கும் தருணங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன..
நீ என்னை பார்க்கும் வேளையில்..

என்னுடனான மற்றவரின் தொடர்புகள்
எல்லையை விட்டு நகர்ந்து செல்கின்றன
உன் இருத்தலை பொருட்டு..

இதோ இன்னும் சற்று நேரத்தில்
என் அகத்தை விட்டு
வெளியேறிவிடுவாய்...

அக்கணங்களில்
தொலைந்து போவது
நீ மட்டுமல்ல
நானும்தான்...

இந்த வார உயிரோசையில் எனது கவிதை.