Sunday, July 12, 2009

நகைச்சுவை கதம்பம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்வு இது.பள்ளி ஆண்டுவிழாவிற்காக, எங்கள் வகுப்பின் சார்பாக ஒரு குடும்ப நாடகம் நடத்துவதாய் ஏற்பாடு செய்தோம். ஒரு வீட்டில் இரு மருமகள்களும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அமைந்த நாடகம் அது. நான் இளைய மருமகளாயும், எனது தோழி சந்திரலீலா எனது கணவனாகவும் நடித்திருந்தோம். நாடக ஒத்திகையெல்லாம் கூட நன்றாக நடந்தது.

விழா நாளன்று ,எனக்கு பெரிதாய் எந்த பயமும் இல்லை ,சேலை அவிழ்ந்து விடக்கூடாதே என்பதைத் தவிர..ஆனால் லீலா மிகவும் பதட்டமாய் இருந்தாள். பேண்ட்டுக்கு மாட்டுவதற்காக கொண்டு வந்திருந்த அவளது கோபக்கார அண்ணனின் பெல்ட்டை தொலைத்துவிட்டாள்.
நாடகம் வேறு ஆரம்பித்துவிட்டது.ஒரு காட்சியில் நானும் எனது அக்காவும்(மூத்த மருமகள்) சண்டையிடும் போது,எனது கணவனான லீலா வந்து என்னை அதட்டி வீட்டினுள்ளே அழைத்துசெல்வது போல் ஒரு காட்சி. அக்காட்சியும் வந்தது.

நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். வேகமாய்(பதட்டமாய்) அங்கே வந்த லீலா, “ படிச்ச பொண்ணு மாதிரியா நடந்துக்குர. வாடி உள்ள” என்று வசனங்களையெல்லாம் சரியாக கூறி, என்னை அழைத்து செல்வதற்கு பதில் என் அக்காவை அழைத்து சென்று விட்டாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருந்தவர்களிடையே சலசலப்பும் சிரிப்பும் ஆரம்பமாகியிருந்தது.

நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன். ஏற்கனவே இருந்த குழப்பம் தீர்வதற்குள், அடுத்த காட்சிக்கு வந்த என் அக்காவின் கணவனான , என் தோழி ரோஸ்மேரி, கடகடவென்று வசனங்களை ஒப்பித்துவிட்டு, “ வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும் குரலில், “ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க,
இனிதே நிறைவடைந்தது நாடகம்.
.........................................................................................................
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்வு இது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்மொழிவழி கற்றலில் படித்துவிட்டு , ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலமொழிவழி கற்றலில் , புதுப்பள்ளி ஒன்றில் சேர்ந்தேன்.ஆகவே, அப்போதைய என்னுடைய ஆங்கில அறிவு எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக வினாடி வினா ஏற்பாடு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கேள்வியும் பதிலும் முன்னமே கொடுக்கபட்டுவிட்டது.யார் கேள்வி கேட்பார், யார் அதற்கு பதில் சொல்லவேண்டும் என்பதையும் ஒத்திகை பார்த்தாயிற்று. நல்ல்வேளையாக நான் ஒரு கேள்விக்கு மட்டும் விடை சொல்வதாய் அமைந்திருந்தது அவ்வினாடி வினா. ஒத்திகை சமயங்களில் எல்லாம் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்து பயிற்சி எடுத்தோம். விழா நாளும் வந்தது.

மேடையில் இருபுறமும் இருக்கைகள் போட்டு வினாடி வினா ஆரம்பமானது.மைக்கை என்னிடமிருந்து எட்டு இருக்கைகள் தள்ளி நிறுத்தியிருந்தார்கள். அவ்வளவு தூரம் நடந்து சென்று, பதில் சொல்லவேண்டும் என்று பயமும் தடுமாற்றமும் என்னுள்.பலமுறை என் பதிலை சொல்லிபார்த்துக் கொண்டும், மறந்துவிடக்கூடாதென்று ஆத்தா பராசக்தியையும் வேண்டிக்கொண்டிருந்தேன்.
வினாடி வினா நல்லபடியாக நடந்துகொண்டிருந்தது. மற்ற அனைவரும் தைரியமாக போய், புன்னகைத்தபடியே மைக்கில் கேள்வியும் பதிலும் சொல்லிக்கொண்டிருந்தனர்.பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் சிறிது சிறிதாக நம்பிக்கை பிறந்தது. நாமும் சிரித்தமுகத்துடன் சென்று பதில் சொல்ல்வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டேன். எனக்கான கேள்வியை மைக்கின் அருகே அமர்ந்திருந்த என் தோழி கேட்டாள்.

நானும் ஒயிலாக நடந்து சென்று, புன்னகையுடன் எனது பதிலை சொன்னேன். சொன்னதுதான் தாமதம், மொத்த பள்ளியும். சிறப்பு விருந்தினர்களும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அட அப்படி என்ன பதில் சொன்னேன் என்று கேட்கிறீர்களா?? “Pass” என்றுதான் சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பா!!


Saturday, July 11, 2009

எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி

சமீபத்திய எனது வாசிப்புகளில் , வெம்மையின் உக்கிரத்தை, என்னுள் , எழுத்துக்கள் மூலம் பாய்ச்சிய உணர்வை உண்டாகியது எஸ்.ரா அவர்களின் "நெடுங்குருதி" நாவல். விவசாயம் மறந்த, அனல் விழுங்கும் ஓர் கிராமத்தை "வேம்பலை" எனும் ஊர் மூலம் , பல படிமங்களில் நம் கண் முன்னே விரிய விட்டிருக்கிறார் ஆசிரியர்.

பால்ய நினைவுகளையும் , பாழ்பட்டு போன பல மனித வாழ்க்கைகளையும் , சிதிலடைந்து போன வீடுகளின் வரலாறுகளையும் , பன்முக நுணுக்கமாய் கையாளப்படிருக்கிறது இந்நாவலில். களவே தொழிலாக கொண்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த , ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வே , இந்நாவலின் கதை மாந்தராய் விளங்குவது ,ஓர் சிறப்பான அம்சமாகும் .



இரு தலைமுறைகளின் வாழ்வை , கோடைகாலம் , காற்றடி காலம், மழை காலம், பனிக் காலம் என நான்கு நிலைகளில் கோர்க்கப்பட்டிருக்கிறது . வாசிப்பின் இடையே , பல இடங்களில் நிறுத்தி , நாவலின் அப்போதைய நிகழ்வை , கற்பனை செய்து ரசிக்கும்படியாய் உள்ளது. ஒரு சிறு விடயத்தை கூட , அருகே நடக்கும் பிம்பமாய் உரு படுத்தி இருப்பது பிரம்மிப்புக்குரியது.



பல உதாரணங்களை மேற்கோள் காட்டலாம். அவற்றில் ஒன்று சென்னம்மா. பொதுவாக கதைகளில், முக்கிய கதை மாந்தர்கள் பொருட்டு தரும் வருணனை , ஏனோ சுற்றியிருப்பவர்களுக்கு இல்லா சாபமாகிவிடும். ஆனால் நெடுங்குருதியில் சென்னமாவின் பாத்திரம் உலாவும் மணித்துளிகள் சிறிதே ஆனாலும் , அவரைப்பற்றி ஆசிரியர் மூலம் , நம்மில் எழும் பிம்பங்கள் ..அடேயப்பா! வார்த்தைகளில் வரையறுக்க முடியாதவை. தலைமுறை தாண்டியும் அவளை வேம்பலையில் இணைத்திருப்பது ,கதையின் யதார்த்தத்தையும் , ஆசிரியரின் திறனையும் காட்டுகிறது.



நாகுவின் சகோதரிகளாக வரும் நீலாவும் ,வேணியும் வேம்பலையை அழகு படுத்துகிறார்கள். நாகுவின் அய்யா, அம்மா, தாத்தா இவர்களுடைய வாழ்வியல் முறைகள் , இயல்பான கிராமிய மனிதர்களின் நிலைப்பாடு. அதுவும், அய்யா களவிற்கு சென்று விட்டு திரும்பும் போது, கொண்டுவரும் அரிக்கேன் விளக்கும் , அதைப்பற்றிய நிகழ்வுகளும் ,நாமும் அவர்களுடன் வாழ்வதை போன்றதொரு நிலையை ஏற்படுத்துகிறது.


ரத்னாவதியின் வாழ்வு, ஏனோ மனதை நெகிழவைத்து, இறுதியில் நிசப்தத்தை சுவாசிக்க செய்வது போல் இருந்தது. திருமாலின் வாழ்பனுவங்கள் வித்தியாசமான ,ஏக்கத்திற்குரிய குறிப்புகள். வசந்தாவின் நட்பும், திருமண வாழ்வும் கிராமத்து பெண்களுக்கே உரிய ஓடங்கள். இந்நாவலின் ஒவ்வொரு எழுத்துக்களும், உயிர் பெற்று எழுந்து வந்து ,நம் குருதியில் கலந்துவிட்டதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது.


நாவலைப் படித்த பின்பும், சருகாகிப்போன வேம்பலையை பற்றிய பசுமையான நினைவலைகளும், நாமும் அங்கே வாழ்ந்தோம் என்ற எண்ணமும் ஓங்குகிறது. கோடையின் வெப்பத்தை கூட ரசிக்க வைத்த நாவல் நெடுங்குருதி. தார்ச்சாலைகளில் நடக்கும்போது ஏற்படும் வியர்வைத்துளிகள் கூட வேம்பலையை ஞாபகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


“கோணங்கி எனும் மாயக்கதையாளன்” எனும் கட்டுரையில் (ஜீன் 2009, உயிர்மை) , கோணங்கி கூறியிருப்பதாய் சில விசயங்களை எஸ்.ரா கூறியிருப்பார். அஃதாவது, “எழுத்தாளன் மண்புழுவைப்போல கிராமத்து மண்ணை தின்று ஊர்ந்து திரிய வேண்டும். இருட்டுக்குள் கால் பின்னப்பட்டு நிற்கும் கழுதையின் மெளனம் புரிய வேண்டும்” என்று. இவையனைத்தும் எஸ்.ராவிற்கு பொருந்துமாகையால், அவருடைய “நெடுங்குருதி” தவிர்க்க முடியாத முக்கியமான நாவலாய் ஆகிவிட்டது.