
எனக்கு எங்க அக்காவ ரொம்ப பிடிக்கும்தான்.ஆனா சிலநேரம் அவளோட சண்டை போடத்தான் ரொம்ப பிடிக்கும்.இப்படித்தான் ஒரு நாளு,எங்க வீட்டு பக்கமா இருக்குர வேப்பமரத்துல ஊஞ்சல் கட்டி ஆடிக்கிட்டு இருந்தோம்.என்னைய வச்சு கொஞ்ச நேரம்தான் ஆட்டினா.அப்பறம் அவளே ரொம்ப நேரம் விளையாடினா. எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.அப்பாகிட்ட சொல்றேன்னு அவகிட்ட டூ விட்டுட்டு அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சுட்டேன்.எங்க இருந்து வந்ததுனே தெரியல, ஒரு வெள்ள கலர் கோவில்மாடு என் முன்னால ஓடி வந்துட்டு இருந்துச்சு.எனக்கு பயம் பயமா வந்துடுச்சு.”ஓ” னு அழுதிட்டேன்.எங்க அக்காதான் ஊஞ்சல்ல இருந்து குதிச்சு ஓடிவந்து, என்னைய தூக்கிட்டு வளைஞ்சு வளைஞ்சு ஓடி வீட்டுக்கு வந்துட்டா.
வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம்தான் தெரிஞ்சது அவ உள்ளங்கையிலயும்,கால் மொட்டிலயும் சிராய்ப்பு.பாவம் ஊஞ்சல்ல இருந்து கீழ விழுந்துட்டால அதான்.உடனே அவள கட்டிக்கிட்டேன்.எனக்கு எங்க அக்கானா ரொம்ப பிடிக்கும்.சில நாள்லாம், என்னய தொட்டில போட்டு தாலாட்டியிருக்கா.என் வெயிட்டு தாங்காம ரெண்டு நாள்லேயெ அம்மாவோட சேல கிழிஞ்சிடும். அதனால அம்மாகிட்ட திட்டு எல்லாம் வாங்கிருக்கா. நீங்களே சொல்லுங்க,யாராவது ரெண்டாப்பு படிக்கிர புள்ளய தொட்டில்ல போட்டு ஆட்டுவாங்களா?.ஆனா,எனக்கு பிடிக்கும்னு என்ன போட்டு ஆட்டுவா.அவ நல்லவ.
எங்க அப்பா படுக்குற ஈஸி சேருல படுத்துக்குறதுன்னா,அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.அதுலயும் பச்ச கலர் துணிதான் சேருல கட்டியிருக்கனும்னு, அப்பாகிட்ட அடம் பிடிச்சு ரெண்டு உறை வாங்கிட்டா.வாரத்துக்கு ஒருதடவை ,அத துவைச்சும் மாத்திடுவா.அவ ஈஸி சேருல படுத்துருக்கும் போது, நான் போனேனா என்னைய அதுல படுக்க வச்சிட்டு,கீழே உட்கார்ந்துகிட்டு,நிறைய கத சொல்லுவா.எனக்காக,பக்கத்து வீட்டு ரமேஷோட பாலமித்திரா, அம்புலிமாமால்லாம் படிச்சு கத சொல்லிருக்கா.

ஒருதடவை,எங்க அப்பா அவரோட ஃப்ரண்ட்ஸோட ராமேஸ்வரம் போனாரு.என்னையும் கூப்பிட்டு போயிருந்தாரு.பெரிய பிள்ளைங்கரதால, அக்காவ வரவேணாமுனுட்டாரு.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால, ராமேஸ்வரத்துல இருந்து வரும்போது,எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி பாசிமணி வாங்கிட்டு வந்தேன்.அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.உடனே போட்டுகிட்டா.எனக்கும் போட்டுவிட்டா.
தீபாவளிக்கு முத நாளு,எங்க அம்மா இட்லிக்கு,உரல்ல மாவு அரச்சிகிட்டு இருந்தாங்க.அவ சும்மா இருக்கலாமுல்ல, உடனே அம்மாகிட்ட போயி,”குடும்மா.நான் அரைக்கிறேன்” னு ,பாதிலேயெ எங்கூட விளையாடாம போயிட்டா.கோவம் கோவமா வந்துச்சு.கொஞ்ச நேரம் கழிச்சு, அவ அரைக்கிறத நிறுத்திட்டு,ரெண்டு கையையும் இடப்பக்கமா நெஞ்சுல வச்சுகிட்டு, குனியவும் நிமிரவும் செய்தா.அவ கண்ணெல்லாம் கலங்கிருந்துச்சு. எனக்கு பயமா போயிடுச்சு.அவ பக்கத்துல போயி நின்னுகிட்டேன்.அவ உடனே எங்கிட்ட அம்மாவ கூப்பிட சொன்னா.நானும் ,எங்க அம்மாகிட்ட ஓடிப்போயி சொன்னேன்.என் கையில இருந்த பால்கோவாவெல்லாம் கீழ விழுந்துடுச்சு தெரியுமா!
அப்பறம்,எங்க அம்மாவும் அப்பாவும்.என்னய புஷ்பாக்கா வீட்டுல விட்டுட்டு,வெள்ள கலர் அம்பாஸிடருல அக்காவ கூப்பிட்டுகிட்டு போனாங்க.எனக்கு தூக்கமே வரல .எங்க அக்காவ பாக்கணும் போல இருந்துச்சு.பாவம் அவளுக்கு வலிச்சிருக்கும்ல.
அடுத்த நாள்.எங்க அப்பா மட்டும் வந்து,அம்மா பீரோக்குள்ள இருந்து, எனக்கு டிரஸ்ஸும்,மேரி பிஸ்கட்டும்,புது செப்பு சாமானும் வாங்கி கொடுத்துட்டு, புஷ்பாகா வீட்டுலயே விட்டுட்டு போயிட்டாரு.எனக்கு கஷ்டமா இருந்துச்சு.
ரெண்டு நாள் கழிச்சு, எங்க அப்பா மட்டும் சில ஆளுகள கூப்பிட்டு வந்தாரு.அவங்கெல்லாம் எங்க வீட்டு முன்னாடி கொட்டக போட்டுகிட்டு இருந்தாங்க.எங்க அழகம்மா பாட்டி,பசுபதி சித்தப்பா,கலா சித்தி, முத்தையா பெரியப்பா,ராக்காயி பெரியம்மா, பூமி மாமா.புவாயி அத்த,கயலு, சொர்ணா,நாகலிங்கம் எல்லாரும் வந்திருந்தாங்க.ஆனா யாருமே முன்னமாதிரி என்கிட்ட சிரிச்சு பேசவேயில்ல.என்ன தூக்கி கொஞ்சவும் இல்ல.கயலு மட்டும் என்கிட்ட வந்து கண்ணாம்பொத்தி விளையாடலாமான்னு கேட்டா.நான் “மாட்டேன். வரலை” னு சொல்லிட்டேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு,எங்க வீட்டுக்கு ஒரு கருப்பு கலர் வேனு வந்துச்சு.அதுல இருந்து ,எங்க அம்மா தலைய விரிச்சு போட்டுகிட்டு,நெஞ்சுல அடிச்சிக்கிட்டு ,அழுதுகிட்டே கீழ இறங்குனாங்க.எங்க பெரியம்மா போயி எங்க அம்மாவ பிடிச்சுக்கிட்டாங்க.அப்பறம் எங்க சித்தி,சித்தப்பால்லாம் போயி,வேனுக்குள்ள இருந்து எங்க மீனாட்சி அக்காவ தூக்கிட்டு வந்தாங்க.பிறகு,வெள்ளை துணிபோட்ட சேருல உட்கார வச்சாங்க.
“ஏன் அக்கா நடந்து வரமாட்டேங்குறா??ஏன் யாரையும் பார்க்க மாட்டேங்குறா??ரொம்ப தூங்கிட்டாலோ??”. நான் அவ கைய பிடிச்சு “அக்கா..என்ன ஆச்சு” னு கேட்டேன்.உடனே எங்க சித்தி லூசு என்னய கட்டிபிடிச்சுக்கிட்டு அழ ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா எனக்கு அழுகையே வரல.நிறைய பேர் வந்து எங்க அக்காவுக்கு ரோஜாப்பூ மாலையெல்லாம் போட்டாங்க.அவளுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா??.

சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்க்கவே முடியல.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??
'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது