”ஆத்தா..தராச எடுத்து சாக்கு பையில போட்டுட்டேல..”
“போட்டுட்டேன்டா..இந்தா இந்த நீராரத்த குடி..தூக்குவாளில வெண்ணிபழசும்,வெங்காயமும் வச்சுருக்கேன்..பாறப்பட்டி வட்டகல் வந்ததும் தின்னுருல”
“நான் தின்னுக்குறேன்..மீதி புளியெல்லாம் குலுமையில போட்டாச்சுல..”
“ம்ம்..ஆச்சு..”
“முருகன் படத்து சட்டத்துல அம்பது ரூவா சொருகி வச்சுருக்கேன்,நம்ம கோனாரு வருவாக..வந்தா கொடுத்துரு..”
“நான் கொடுத்துக்கறேன்..நீ விரசா சோலிக்கு கிளம்புல..”
“சரித்தா..நான் வர்ரேன்..”
“ஏலே கொமாரு..நம்ம கணக்குபுள்ள தெருவுல ,செவ்வந்தி ருக்குவோட சுத்திக்கிட்டு இருப்பா..அவள வரச்சொல்லு..”
“சரி..சரி..சொல்றேன்” என்றபடி புளிகூடையை பின்னால் வைத்து,ஹாண்டில் பாரில் தொங்கிகொண்டிருக்கும் சாக்கு பைக்குள் தராசையும் வைத்து,கணக்குபிள்ளை தெருவை நோக்கி சைக்கிளை அழுத்தினான் குமார்.
“புளி.புளிளிளி...புளிளி..” கூவிக்கொண்டே அந்த தெருவை அடைந்தான்.
செவ்வந்தி ருக்குவின் சைக்கிளை வைத்து வட்டம் போட்டு கொண்டிருந்தாள்.
“இந்தா ..செவ்வந்தி..ஞாயித்து கெலம ஆச்சுனா ஆத்தாவுக்கு கூட மாட வேல செய்யிறத விட்டுபுட்டு ,இங்க வந்து சுத்திகிட்டு இருக்க”
“இல்லண்ணே..ருக்குதான் கூப்பிட்டா..”
“சரி ..சரி ஆத்தா கூப்புடுச்சு..வூட்டுக்கு போ...”
“அண்ணே..போன திருவிழாவுக்கே சைக்கிளு வாங்கித்தாரேனு சொன்ன..இன்னும் வாங்கிதரல...”
“நம்ம அழகன்சாமி மலை ஏறட்டும்..உனக்கு சைக்கிளு என்ன ,பட்டு பாவட தாவணியே வாங்கிருவோம்..”
“எனக்கு பாவடை தாவணியெல்லாம் வேணாம்..சைக்கிளுதான் வேணும்..”
“சரி வாங்கிபுடலாம்..நீ இப்ப வூட்டுக்கு போ..ஆத்தா தேடிக்கிட்டு இருக்கும்..”
”ம்..சரி”
------------------------------------
“ஏண்டி..செவ்வந்தி..காலைல பல்லு கொப்புலுச்சியா?விடிஞ்சா போதும் வூட்டுல தங்குறது இல்ல..”
“ஆத்தா ..ருக்கு சைக்கிள் வச்சுருக்கா...நெதமும் அவ அதுலதான் பள்ளிகோடத்துக்கு வருவா...”
“அதுக்கு என்னா இப்போ..தெரிஞ்சதுதான..”
“எனக்கும் சைக்கிள் வேணும் ஆத்தா..நானும் ஆறாப்பு போனதுலருந்து கேட்டுக்கிட்டே இருக்கன்ல..”
“உன் அண்ணன் புளி,காய் இதுல வித்து வர்ர காசுல உனக்கு இன்னும் ஒரு பொட்டு தங்கம் வாங்க முடியல..நீ சைக்கிளு கேட்டுகிட்டு திரியிர...”
“எனக்கு தங்கமெல்லாம் வேணாம்..சைக்கிளுதான் வேணும்..”
“ஆமாண்டி...வெறும் சைக்கிள மட்டும் வாங்கிகிட்டு உன்ன எவன் கட்டிப்பான்..போ..போயி அந்த கூடைய எடுத்து தனத்த அடச்சு வையி..”
“ம்ம்..”
“ஆறு குஞ்சும் இருக்கானு சரியா எண்ணி பாத்து கவுத்துடி...”
“சரித்தா...எனக்கு தெரியாதா..சும்மா நொய்யி நொய்யினுட்டு..”
-----------------------------------------------
”ஆத்தா..ஆத்தா...”
“என்னடா கொமாரு..இப்படி கத்துற ..கொல்லயில நம்ம தனத்துக்கு கம்பு போட்டுகிட்டு இருந்தேன்...என்ன விசயம் சொல்லு..”
“நம்ம வடிவேலு அய்யாகிட்ட பேசி 500 ரூவா கடன வாங்குனேன்..”
“எதுக்கு இவ்வளோ காசு வாங்குன...யாரும் சொந்தக்காரக வர்ராகளா..”
“இல்லத்தா..நம்ம செவ்வந்தி ரொம்ப நாளா சைக்கிளு கேட்டுக்கிருந்துச்சுல..தத்தி தத்தி பதுனொன்னாப்பு வேற போயிட்டா..சரி போகுது கழுதனு சைக்கிளு வாங்கிப்புடலாம்னுதான் காசு வாங்கியாந்தேன்..”
“ஏண்டா..உனக்கு கிறுக்கு புடுச்சுருக்காடா..இந்த காச வச்சு ஒரு சிலுக்கு சேல வாங்குனாவாது,கல்லாணம் காச்சினு வந்தா அவ கட்டிக்கிருவாள்ல...அதவிட்டுட்டு,ஆம்பள கணக்கா சைக்கிளு லாரினுகிட்டு..”
“ஆத்தா..அதெல்லாம் பொறவு பாத்துக்கலாம்..இன்னும் கொஞ்ச நாலுதான அவ இங்க இருக்க போறா...அவ சந்தோசமா இருந்துட்டு போகட்டுமே..”
“சரி..உன் இஷ்டம்..”
“கோவிந்தன் கடையில ஒரு சைக்கிளு சொல்லி வச்சிருக்கேன்..நாளைக்கு நானும் செவ்வந்திய்ம் போயி எடுத்துக்கிட்டு வந்துர்ரோம்..”
“ம்ம்...சரி சரி..”
---------------------------------------------------------
“ஆத்தா.நான் போயிட்டு வர்ரேன்...”-செவ்வந்தி.
“ஏ..கொமாரு,இங்க பாருடா..நீ சோலிக்கு போற வரைக்கும் பள்ளிக்கோடம் கெளம்பாம சுத்துறவ,அந்த சைக்கிளையும் குளுப்பாட்டி கெளம்பிட்டா..”
“விடுத்தா..எப்ப பாத்தாலும் அவள் குற சொல்லிகிட்டு..நீ கெளம்பும்மா,செவ்வந்தி..”
“ஆமாண்டா..வயக்காட்டு பக்கம் போனாக்கூட ,அந்த வண்டியையும் எடுத்துக்கிட்டு தான் போறா.. சரசக்கா சொல்லி சிரிச்சா.. இப்ப கூட பாரு,அந்த வண்டிக்கும் குங்குமம் சந்தனம்னு வச்சு ஏறிபோறத”
“சரி..சரி ..விடுத்தா..சின்னப்புள்ள அப்படிதான் இருக்கும்..”
----------------------------------------------------
”ஆத்தா.. நாளைக்கு வாடிப்பட்டிகாரக வர்ராகனு சொல்லிருந்தேன்ல..”
“ஆமா சொன்ன..செவ்வந்திகிட்டயும் சொல்லியாச்சு..அவ எதையும் காதுல வாங்கிக்காம ,வண்டிய எடுத்துட்டு ஊர் சுத்த போயிருக்கா..”
“நாளைக்கு வர்ரவுக வெத்தல பாக்கு மாத்திட்டுதான் போவாக..அதனால நம்ம வூட்டுலதான் ராத்திரி சாப்பாடு...”
“அதுக்கென்னா இப்போ..எல்லா வூட்லயும் இருக்கறதுதானே...கையில காசு ஏதும் வச்சுருக்கியா?..”
“இல்லத்தா..இருந்த காசத்தான் ,போன வாரம் நம்ம வடிவேலு அய்யாகிட்ட கொடுத்தேன்...நீ ஏதும் வச்சிருக்கியா..?”
“நம்ம தனத்த,சரசக்கா அவுக மாப்புள்ள வர்ராகனு சொல்லி 100 ரூவா கொடுத்து வாங்கிட்டு போனாக..அதான் இருக்கு..”
“சரித்தா...அத கொடு..நான் போய் புழுங்கரிசியும் ,பருப்பும் நாடார் கடயில போயி வாங்கியாரேன்..”
----------------------------------------------------------
“எப்படியோ கொமாரு..நிச்சயத்த நல்ல படியா முடிச்சாச்சு...கல்யாணத்தயும் முடிச்சிட்டோமுனா..ஒரு பாரம் கொறயும்...”
“ஆமாத்தா..நானும் அதத்தான் யோசன பண்ணிட்டு இருக்கேன்..”
“ஆமா ..கடேசி நேரத்துல,அவுகளுக்கு பலகாரமும் .செவ்வந்திக்கு பூவும் வாங்க காசு இல்லேனு சொல்லிக்கிருந்த..அப்பறம் எப்படி அவ்வளவு மல்லிப்பூவும்,கிலோ கணக்குல ஜாங்கிரியும் லட்டும் வாங்கியாந்தடா..”
“அது ஒண்ணுமில்ல ஆத்தா...செவ்வந்தி சைக்கிள வித்துட்டேன்..”
கொல்லைப்புரத்தில் நின்றிருந்த செவ்வந்தி,தலையிலிருந்த மல்லியை ஒவ்வொன்றாய் பிய்த்துக்கொண்டிருந்தாள்.