+1ல் இருந்து ஆரம்பித்த எங்கள் நட்பு,இளங்கலையில் ஒரே பெஞ்ச்சில் பயணித்த எங்கள் நட்பு,மாதம் ஒருமுறை திரையரங்குகளில் விரிந்த எங்கள் நட்பு,இதோ நாளையுடன் எல்லைகளுக்குள் அடங்கிவிடும்,என்று நினைக்கையில்,மனது எதிலும் லயிக்கவில்லை..
அவளுடைய நினைவுகளை சுமந்தபடி மதுரையை அடைந்தேன்.அன்பொழுக ,அம்மா கொடுத்த அடை தோசை கூட கசந்தது..
அடுத்த நாள்,எனது அம்மா,அப்பா,அண்ணா,நந்து(நந்தினி,எங்க வீட்டு அறுந்த வால் --அண்ணன் மகள்)ஆகியோருடன்,வனிதாவின் திருமணத்திற்கு கிளம்பினேன்.எங்கள் நட்பு மிகவும் ஆழமானதாலும்(எவ்வளோ என்றெல்லாம் கேட்க கூடாது),நாங்கள் பழகும் காலத்திலிருந்தே,இருவர் வீட்டிற்கும் ,நாங்கள் செல்ல பிள்ளை என்பதாலும், எங்கள் அண்ணனுக்கும்,அவளது அப்பாவிற்கும் அரசியல் ரீதியாக பழக்கம் உள்ளதாலும், இந்த ”குழு” பயணம் அவசியமாய் போய்விட்டது..
வனிதா,எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வின் கடைசி புதல்வி ஆதலால்,”ராஜா சர் முத்தையா” மன்றத்தில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.அலங்கார வளைவுகளும்,மேடை அலங்காரமும் கண்ணை கவர்வதாய் இருந்தது.அரசியல் புள்ளி மகளின் கல்யாணம் ஆதலால்,என்னால் அவ்வளவு சீக்கிரம் மணப்பெண்ணின் அறையை அடைய முடியவில்லை.பல முயற்சிகளுக்கு பிறகு அவளை சந்தித்தேன்.என்னை பார்த்ததும் எழுந்து வந்து கட்டிக்கொண்டாள்.எங்கள் இருவராலும் ஏதும் பேசமுடியவில்லை.பிறகு அவளிடம் விடைபெற்றுகொண்டு,மணமேடையின் எதிரே அமைந்திருந்த இருக்கைகளில் அமர்ந்தோம்.
முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதாக கூறி,வனிதாவை அழைத்து வந்து,மாப்பிள்ளை அருகில் அமர வைத்தனர்.தோழியை விட்டு பிரியப்போகிறோம் என்ற வருத்தமும்,அவளுக்கு இப்பொழுது திருமணம் என்ற சந்தோசமும் ,கலந்த கலவையாய் என் மனம் சிலாகித்துக்கொண்டிருந்தது.
திடீரென ,கூட்டத்தில் ஒரே பேச்சும் சலசலப்பும். “என்ன ஆச்சு அண்ணா?” என்று எனது அண்ணனை கேட்க திரும்பினால்,அவரை காணோம்.
நானும் எனது தலையை வலப்பக்கம் 90டிகிரி இடப்பக்கம் 90 டிகிரி என திருப்பி ,அண்ணனை தேடிக்கொண்டிருந்தேன்.சில நிமிடங்களுக்கு பிறகு ,அரக்க பரக்க ஓடி வந்து,எங்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டு,ஒரு சிறு கும்பலை நோக்கி சென்றார்.
alagu.jpg)
அங்கு சென்று பார்த்தால்,அட! சிறப்பு விருந்தினர் மு.க.அழகிரியும்,அவரது துணைவியார் காந்தி அழகிரியும் நின்று அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தனர்.எனது அண்ணன் அவர்களது பேரவையில்(பெயர் குறிப்பிட விரும்பவிலை)செயலாளராய் இருப்பதால்,எங்களை அறிமுகப்படுத்திவைத்தார்.
எனக்கு “ஹலோ” சொல்லி கைகுலுக்குவதா?இல்லை “வணக்கம்” சொல்வதா என்று தடுமாறிக்கொண்டிருக்கையில்,அழகிரி அவர்களே “வணக்கம் வாங்க” என்று கூறி எனது தடுமாற்றத்திலிருந்து என்னை காப்பாற்றினார்.
அப்பா,அவரிடம் ஏதும் பேசவில்லை.எனது அம்மாதான்,”நீங்க,ஏதாவது ஒரு தொகுதியில நிற்க வேண்டும்” என்று கூறினார்.
ஏதோ ”அந்த அம்மாவே ”கூறிவிட்ட மகிழ்ச்சியில் அவரும் ,எனது அம்மாவை நோக்கி, “ கவலைப்படாதிங்கம்மா! தேர்தல் முடியட்டும்.வடக்கே ஸ்டாலினும்,இங்கே நானும்னு பிரிச்சு தமிழகத்தை சீர்படுத்திடுவோம்”னு சொல்லி அழகாக புன்னகைத்தார்.
பிறகு,முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால்,தாலி எடுத்து கொடுக்க அவர் மணமேடையை நெருங்கினார்.அவரது தலைமையில் வனிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தது.விருந்து முடித்து விட்டு வீடு திரும்புகையில்,வனிதா மனதில் இல்லை....பிளவுப்படப் போகின்ற தமிழகமே கண்ணில் ஆடியது....இந்த நிகழ்வை “உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...