Thursday, April 30, 2009

பருத்திப்பாலும் பணியாரமும்...

மாற்றமே உலக தத்துவம் - கண்ணதாசனின் வைர வரிகள்,நம் காலத்தின் கொடை.

அடுக்குமாடிகளின் ஆவேச வளர்ச்சியால்,அமைதியாக,சவப்பெட்டிக்குள் செல்வதற்கான நாட்களை தினந்தோறும் எண்ணிக்கொண்டிருக்கின்றன ,விளைநிலங்களும்,எழில் கொஞ்சும் பூஞ்சோலைகளும் ...

வீட்டை சுற்றிலும் வேம்பும் புன்னையும் படர்ந்திருக்க,அவற்றில் கொச்சை கயிற்றை கட்டி,மரப்பலகையை வாகாக வைத்து,காற்றிலே ஊஞ்சலாடிய காலம் போய்,கருவறைக்குள்ளே குழந்தை அசைவதைப் போல,வீட்டிற்க்குள்ளே கம்பியால் ஆன ஊஞ்சல் இன்று.. ஊஞ்சலுக்கு கூட கடிவாளம் கட்டியது காலத்தின் மாற்றம்.

புதிதாய் கறந்த பாலில்,சுக்கு, மல்லி, வெல்லம் தட்டி போட்டு,காலையில் பருகும் காபியில் கூட உடல் நலத்தை பேணிய காலம் எங்கே...கானல் நீராய் போனதுதான் மிச்சம்.

பெண்களுக்கு தாலி கட்டாத கணவனாகவும்,ஆண்களுக்கு முழுநேர காதலியாகவும்,விளங்கிக்கொண்டிருக்கும் கணிணியில்,நம் பாரம்பரிய வாழ்வு அடகு வைக்கப்பட்டு விட்டது.மீட்டெடுக்கும் நாளும் அடுத்த தலைமுறையை சாராது.நம்மாலானது,பழமையை மறக்காமல் ,அந்நினைவுகளை அசைபோடுவதுதான் என்றாகிவிட்டது.அதில் நானும் விதிவிலக்கல்ல.

நான் எப்பொழுது மதுரை சென்றாலும்,ஒரு விசயத்தை மறக்காமல் செய்துவிடுவேன்.அது, முருகனை தரிசிக்க என்று கூறி திருப்பரங்குன்றம் செல்வதுதான்.ஆனால் உண்மையான காரணம் பருத்திப்பாலும் பணியாரமும் தான்.

மாலை 5 மணிக்கு மேல்,அக்கோவில் வீதியில்,  அங்கொன்றும் இங்கொன்றுமாய்,பருத்திப்பால் கடையும் ,பணியாரகடையும் களைகட்டும்.சென்னையில் பீசாவும் கெண்டக்கி சிக்கனும்(ஒரு பில்டப்புதான்),உண்டு பழுப்பேறி போன நாவிற்கு,இதமாய் அமையும் பருத்திப்பாலை ,இரண்டு தம்ளர் வாங்கி பருகினால்தான் என் மதுரை பயணம் பூர்த்தியடையும்.

சரவணபவனில் ,28 ரூபாய்க்கு ஆசையாய் வாங்கிய பணியாரத்தட்டில் இருக்கும்,
மூன்று பணியாரங்களை பார்த்துவிட்டு ,ஏற்படும் கோபம்,அவ்வீதியில்,வேலாயி பாட்டிகடையில் ரூபாய்க்கு இரண்டு வாங்கும்போது தணிந்துவிடும்.

நான் சிறுவயதாய் இருந்தபொழுது,எங்கள் வீட்டின் அருகே,ஒரு பெரிய தோப்பு இருந்தது.அந்நாட்களில்,என் அப்பாவுடன் அந்த தோப்பிற்கு சென்று குளிப்பது வழக்கம்.என் அப்பா மோட்டர் போட்டுவிட்டு குளித்துவிட்டு வரும்வரை,தோப்பு முழுதும் எனது ராஜாங்கம்தான்.வேப்பங்குச்சியில் பல்துலக்கிகொண்டே,சறுக்கலில் ஏறி விளையாடுவதும்,ஊஞ்சல் அந்து விழும் அளவிற்கு ஆடுவதும்,தட்டானையும் பட்டாம்பூச்சியையும் தேடி அலைந்ததுமாய்,இதமானதொரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது அந்த தோப்பு.கிணற்றிலே,நான் நீச்சல் பழகுவதற்கான அடிநாதமாய் விளங்கியதும் அவ்விடம்தான்.

ஆனால் ,இன்று அந்த இடத்தில் அக்குளிர்சோலை இருந்ததிற்கான சுவடே இல்லை.இளநீரும்,மாங்காயும்,அவரையும், கத்தரியும் கொடுக்கும் அவ்வட்சய பாத்திரம்,ரியல் எஸ்டேட்காரர்களால் சூறையாடப்பட்டுவிட்டது.என் விளையாட்டு திடலும்,பட்டாம்பூச்சியும் களவாடப்பட்டது.

நாள்முழுதும் ஏசி குளிரில் விறைத்துக்கொண்டிருக்கும் எத்தனைபேருக்கு,தோப்பு மூலிகை நிழல் புரியும்.காசு கொடுத்து நோயை வாங்கிகொண்டிருக்கும் எத்தனை பேருக்கு இயறகை உணவுகள் தெரியும்.

இதெற்க்கெல்லாம் காரணம் யார்? நாம் ..நாம் மட்டும்தான்.சிறுகுடலை வெட்டி எறிந்துவிட்டு,எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்பது போலல்லவா இருக்கின்றோம்.மரங்களின் புனிதமும்,இயற்கையின் முக்கியத்துவமும்,பணத்தின் முன் அடிபட்டுக்கொண்டிருக்கிறதே..

இந்நிலை தொடர்ந்தால்,பருத்திபால் குடிக்க மதுரை செல்லும் என்னைப்போல,ஆக்ஸிசன் நுகர எங்கேயாவது செல்ல வேண்டியிருக்கும் அடுத்த தலைமுறை.
 


35 comments:

SK said...

super :)

மணிநரேன் said...

//பெண்களுக்கு தாலி கட்டாத கணவனாகவும்,ஆண்களுக்கு முழுநேர காதலியாகவும்,
விளங்கிக்கொண்டிருக்கும் கணிணியில்,நம் பாரம்பரிய வாழ்வு அடகு வைக்கப்பட்டு விட்டது//

சாட்டையடியான வார்த்தைகள். நினைத்தாலே வேதனைதான்
மிஞ்சுகிறது.எனினும் மாற்றவும் முடியவில்லை :(

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையாச் சொன்னீங்க தோழி.. நாம நிறைய விஷயங்களைத் தொலச்சுக்கிட்டே வரோம்.. இது மாறனும்.. என்னதான் சொல்லுங்க.. நம்ம ஊரு ரோட்டுக்கடைல கிடைக்குற டேஸ்ட் வேற எங்கயும் கிடைக்காது..:-)

வேத்தியன் said...

அருமையா சொல்லியிருக்கீங்க அக்கா...

என்ன பண்றது???

அதுசரி, பாட்டி கடையில ரூபாய்க்கு ரெண்டா???
அப்போ 28 ரூபாய்க்கு 56 பணியாரம்ல...
சரபணபவன் மேல கோர்ட்டுல கேஸ் போடனும்...
:-)

வேத்தியன் said...

உணர்வுகளை அருமையாச் சொல்லியிருக்கீங்க...

மிக நல்ல யோசிக்க வேண்டிய, உடனடியாக தீர்வு எடுக்க வேண்டிய விடயம்...

இராகவன் நைஜிரியா said...

கண்களை கொடுத்து சித்திரம் வாங்கிய கதையாகப் போய்க் கொண்டு இருக்கின்றது நம் நிலைமை.

நீங்க கூறியது போல் வருங்கால சந்ததிகள் ஆக்சிஜனுக்கு விலைக் கொடுக்க வேண்டிய நிலை வெகுதொலைவில் இல்லை.

நல்ல சமுதாய நோக்கு உள்ள இடுகை. வாழ்த்துக்கள்

Suresh said...

அருமை ;)

mani said...

"நினைத்தாலே வேதனைதான்"
ரசனைக்காரி...
we are addited for this life style we can't go back. This is one way.But you can only refresh your
memory

mani said...

"நினைத்தாலே வேதனைதான்"
ரசனைக்காரி...
we are addicted for this life style we can't go back. This is one way.But you can only refresh your
memory

அப்பாவி முரு said...

//பெண்களுக்கு தாலி கட்டாத கணவனாகவும்,ஆண்களுக்கு முழுநேர காதலியாகவும்,விளங்கிக்கொண்டிருக்கும் கணிணி//

//சிறுகுடலை வெட்டி எறிந்துவிட்டு,எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்பது போலல்லவா//

நல்லா அபிநயம் பிடிச்சு ஆடுறீங்க...

ஆ.முத்துராமலிங்கம் said...

உங்கள் பகிர்வு உண்மையானது
நாம் தொலைத்து வருவதை ஏக்கமாக சொல்லியிருக்கீங்க,
நல்லதொரு பதிவு தோழி.

ஜோதிபாரதி said...

அருமை!

Vetrimagal said...

அருமையான கருத்துக்கள்.

வாருங்கள் நாம் எல்லோரும் நம்மால் முடிந்ததை செய்யலாம்.

பிரியமுடன்.........வசந்த் said...

இதெற்க்கெல்லாம் காரணம் யார்? நாம் ..நாம் மட்டும்தான்.

ஆதவா said...

உண்மையிலெயே ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு விஷயத்தைத் தொலைத்துவிட்டுத்தான் வருகிறோம். ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் இருந்த பண்பாடும் சரி, பாரம்பரியமும் சரி, ஏன், உணவு முறைகூட மாறிவிட்டது. இன்னும் சற்று வருடங்களுக்கு முன்னர் போனால் இன்னும் இன்னும்....

மாற்றங்கள் வரவேற்க்கத்தக்கது.... அதில் சில இந்தமாதிரி அடிபட்டு போவதுமுண்டு!!

இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரை "அரப்பு" . உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!!!

SUBBU said...

ரசனைக்காரி... :)))))))))

S Senthilvelan said...

அருமையான பதிவு. நாம் இழந்து வரும் எத்தனையோ விசயங்களை அழகாக எழுதி இருக்கீங்க.

sarathy said...

//சிறுகுடலை வெட்டி எறிந்துவிட்டு,எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்பது போலல்லவா இருக்கின்றோம்//

சரியான பஞ்ச்...

இவ்ளோ நாளா உங்க பதிவுகளை பார்க்காம இருந்திட்டேனே...

thevanmayam said...

நான் எப்பொழுது மதுரை சென்றாலும்,ஒரு விசயத்தை மறக்காமல் செய்துவிடுவேன்.அது, முருகனை தரிசிக்க என்று கூறி திருப்பரங்குன்றம் செல்வதுதான்.ஆனால் உண்மையான காரணம் பருத்திப்பாலும் பணியாரமும் தான்.//
பரவாயில்லையே!!!பணியாரத்தை மறக்கவில்லையா இன்னும்!!!

அபுஅஃப்ஸர் said...

உங்க வருத்த புரியுதுங்க‌

டெக்னாலஜியும், பாஸ்ட் லைஃபையும் சமாளிக்கனும்னா கடந்த கால வசந்தத்தை ரொம்ப மிஸ்பண்ணித்தான் ஆகனும்...... வாழ்க்கையிலே ரிவைன்ட் பட்டன் ஒன்னு இருந்தா ரிலாக்ஸ் தேவைப்படும்போது பட்டன் தட்டி அப்படியே தோப்பு, காடு, ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம்... இப்போதைக்கு மிஸ் பண்ணிய எல்லாபண்டங்களும் சாப்பிடலாம்....

அபுஅஃப்ஸர் said...

//பெண்களுக்கு தாலி கட்டாத கணவனாகவும்,ஆண்களுக்கு முழுநேர காதலியாகவும்,
விளங்கிக்கொண்டிருக்கும் கணிணியில்,நம் பாரம்பரிய வாழ்வு அடகு வைக்கப்பட்டு விட்டது//

like this lines

good to remain all, thanks

ரிஷி (கடைசி பக்கம்) said...

:-)

jothi said...

உண்மையில் இன்றைக்கு ருசி மறந்து போச்சு. அம்மியில் வைத்த கார குழம்பும், ஆட்டுரலில் அரைத்த மாவின் இட்லியும், நல்லெண்ணெய் ஊற்றிய கோதுமை புட்டும் தேங்காய் துருவலும் இப்படி நிறைய,..

அடுத்த தலைமுறை இன்னும் எவ்வளவு இழக்கப் போகிறதென தெரியவில்லை,..

meena said...

எல்லோர் மனதிலும் ஏற்படும் ஏக்க உணர்வுகள்! நல்லதொரு பதிவு!

அங்கிருந்துகொண்டே இப்படி ஏங்கினால் நாங்கல்லாம்..என்ன சொல்வதாம் :)

\\ அம்மியில் வைத்த கார குழம்பும், ஆட்டுரலில் அரைத்த மாவின் இட்லியும், நல்லெண்ணெய் ஊற்றிய கோதுமை புட்டும் தேங்காய்
துருவலும் \\

ஜோதி வேற...பசியை கிளப்பிவிட்டுட்டாங்க!வரேன் :)

மீனா

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...தொலைத்தவைகளை இப்படி எப்போவாவது போய் ரசித்துவிட்டு வரத்தான் முடியும்....வேறென்ன செய்வது???
அன்புடன் அருணா

அ.மு.செய்யது said...

//வீட்டை சுற்றிலும் வேம்பும் புன்னையும் படர்ந்திருக்க,அவற்றில் கொச்சை கயிற்றை கட்டி,மரப்பலகையை வாகாக வைத்து,காற்றிலே ஊஞ்சலாடிய காலம் போய்,கருவறைக்குள்ளே குழந்தை அசைவதைப் போல,வீட்டிற்க்குள்ளே கம்பியால் ஆன ஊஞ்சல் இன்று.. ஊஞ்சலுக்கு கூட கடிவாளம் கட்டியது காலத்தின் மாற்றம்//

எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க..மண்வாசனை வீசும் எழுத்துக்கள்.
பருத்திப்பாலின் சுவையை நானும் அனுபவித்திருக்கிறேன்.

அ.மு.செய்யது said...

//இந்நிலை தொடர்ந்தால்,பருத்திபால் குடிக்க மதுரை செல்லும் என்னைப்போல,ஆக்ஸிசன் நுகர எங்கேயாவது செல்ல வேண்டியிருக்கும் அடுத்த தலைமுறை.//

இப்போதே தூய்மையான காற்றை சுவாசிக்க பார்லர்கள் வந்து விட்டனவே.

கருத்தை சொல்லும் விதம் என்னை வெகுவாக கவர்கிறது ராஜேஸ்வரி.

துளசி கோபால் said...

//இதெற்கெல்லாம் காரணம் யார்? //

யாரா? தேவையில்லாம அளவுக்கு மீறி மக்கள் தொகையை உருவாக்கி வச்சுருக்கும் நம் மக்கள்தான்.


பருத்திப்பால் இதுவரை ருசி பார்க்கலை(-:

சாதிக் அலி said...

//ஆக்ஸிசன் நுகர எங்கேயாவது செல்ல வேண்டியிருக்கும் அடுத்த தலைமுறை.//
சரியான பஞ்ச். கேஸ் சிலிண்டர் போல வீட்டுக்கொரு ஆக்ஸிஜன் சிலின்டர் தேவைப்படலாம்.
ஜன்னல் வழி தெரியும் இயற்கையை கூட கம்ப்யூட்டர் திரையில் பார்த்தால் தான் ரசிக்கிறோம்

Krishna said...

Its a Real,but can't, I will try.Its difficult but its possible.Thank you my dear Friend

sundar.s said...

அக்கா, உங்கள் வருகைக்கு நன்றி .

இது நம்ம ஆளு said...

அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

முக்கோணம் said...

சூப்பர்..இந்த பதிவை வட்டார மொழி வழக்கில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..

ஜீவன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க டீச்சர் !

பம்பு செட் ,வேப்பங்குச்சி,தட்டான் , பட்டாம்பூச்சி ,கிணத்து நீச்சல் , இளநீர் ,மாங்காய்

எல்லாம் ஊர் நினைப்ப எனக்கும் கொண்டு வருது!

உங்களுக்கு பருத்தி பால் ,பணியாரம் போல ,

எனக்கு பனங்கள்ளு ,நண்டு ! ;;)))

" உழவன் " " Uzhavan " said...

ஆஹா.. பருத்தில்பால் ஆசையை கெளப்பிவிட்டுட்டீங்களே... இதெல்லாம் இப்ப இங்க சென்னையில எங்க கிடைக்குது.. எங்க விளாத்திகுளத்திலயும் இதுகிடைக்கும். ஆனா அங்க கூட இப்ப பார்த்த மாதிரி இல்ல..

//இந்நிலை தொடர்ந்தால்,பருத்திபால் குடிக்க மதுரை செல்லும் என்னைப்போல,ஆக்ஸிசன் நுகர எங்கேயாவது செல்ல வேண்டியிருக்கும் அடுத்த தலைமுறை.//

நல்ல மெசேஜ்.. வாழ்த்துக்கள்..

அன்புடன்
உழவன்