Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts
Thursday, June 18, 2009
உங்களுக்காக ஒரு ரொமான்ஸ் பதிவு...
தொயந்து சோகமாவே எழுதி, அல்லாத்துக்கும் அழுகாச்சி காட்டுனதால,நெறைய பேர் நொந்து போயிருக்கீங்கனு கமெண்ட்டு,மெயில பாத்தாலே தெரியுது மக்கா...அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துக்கினேன்.இந்த பதிவுல தம்மாத்துண்டு இயத்துலகூட சோகாச்சி வரக்கூடாதுன்னு முடிவு கட்டிக்கினேன்.அத்தால உங்க எல்லாத்துக்கும் ஷோக்கா அதான்பா இன்கிலிபீச்சுல ரொமாண்டிக்கா ஒரு கத சொல்றேன் கேட்டுக்கோ..கத சொல்லும்போச்சு மட்டும் நான் தெளிவாத்தான் சொல்லுவேன்.அதால யாரும் கிராஸ் கொஸ்டின்னெல்லாம் கேக்ககூடாது..சொல்லட்டா......
கதை:
கழுத்தில் புது மஞ்சள் சரடு மின்ன ,கணவன் செந்திலோடு ஒட்டி நடந்தாள் சுந்தரி.நேற்றுதான் திருமணம் நடந்தது.ஈவின்ங் ஷோவிற்கு இரண்டு டிக்கெட்களை எடுத்துக்கொண்டு ,சுந்தரியை உரசியபடியே நடந்தான் செந்தில்.அவளுடைய சரிகை நெய்த அரக்கு கலர் சேலை அவனுடைய கைகளில் உரசி,அவனை கிறங்க வைத்தது.அவளிடமிருந்து வந்த மல்லிகை மணமும் , மஞ்சள் மணமும் அவனை மோகக்கடலில் மூழ்கச்செய்தன. வீட்டிலேயெ இருந்திருக்கலாமோ என்று அடிக்கடி அவனது உள்மனது கூறியது. சுந்தரியுடன் நடந்து செல்வதே அவனுக்கு சொர்க்கத்தில் நடப்பது போலிருந்தது.தியேட்டருக்குள் நுழைந்ததும் அவளின் மெல்லிய விரல்களோடு தன் கைகளை பிணைத்து கொண்டான்.சுந்தரி கைகளை வெட்கத்துடன் விடுவிக்க முயன்றாள்.உடனே கைகளின் இறுக்கத்தை அதிகபடுத்தினான் செந்தில்.சுந்தரியின் முகம் நாணத்தில் சிவந்து இருட்டில் கூட ஒளி காட்டியது.
ஹலோ இன்னா எல்லாரும் கத வாசிக்கிரீங்களா...புடிச்சிருக்கா..என்னாது நான் வர்ரதுதான் புடிக்கலியா..என்னாப்பா இப்பூடி சொல்லிட்டீக..சரி நான் நடய கட்டுறேன்
.
கதை தொடர்கிறது:
இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
இன்னாப்பா எல்லாரும் தொயந்து படிக்கிரீகளா?? இன்னாது இடலே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?? சரி சரி அஜ்ஜஸ் பண்ணிக்கோ.இதோ நான் கிளம்பிட்டேன்..
திரைப்படம் ஓடுவதையே மறந்து இருவரும் ஒருவரையொருவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தப்பட்டனர்.பாடல் காட்சிகளின்போது அவளுடைய கைவிரல்களோடு நாட்டியமாடினான் செந்தில்.சுந்தரி வெட்கத்துடன் கையை விடுவித்துக்கொண்டாள்.
“ஏன்??”-செந்தில்.
“யாராவது பார்க்கபோறாங்க!”-சுந்தரி
“பார்க்கட்டுமே..அதுக்குத்தான் உன் கழுத்துல நான் கட்டின லைசென்ஸ் இருக்கே! “ - செந்தில்.
“அதுக்காக தியேட்டர்லயா?? “ - சுந்தரி.
“அப்போ வீட்டுல வச்சுக்கலாமா ! ம் சொல்லு “ என்று குறும்புடன் கேட்டான் செந்தில்.
கன்னம் சிவந்து நாணத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்தாள் சுந்தரி. பூக்களை வருடும் இளங்காற்றாக அவளுடைய தலையை கோதினான் செந்தில்.சின்ன சின்ன சீண்டல்களிலும் தீண்டல்களிலும் உலகை மறந்தனர்.படத்தின் கதை என்ன என்பது கூட அறியாமல்,திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.மூன்று மணிநேரம் மூன்று நொடிகளாய் மாறிப்போனதை நினைத்து இருவருமே வருந்தினர்.
“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.
என்னா மக்கா..படிச்சீங்களா...அழலையே..அதான் அதான் எனக்கு வேணும்.என்ன கொஞ்சம் கோபமா இருப்பீக கதய படிச்சிட்டு..அதுக்கு நான் என்ன செய்யட்டும்.சோகாச்சி இல்லாமத்தான் எழுதுறேன்னு சொன்னேன்..கோவாச்சி இல்லாமன்னு சொல்லலையே..வரட்டா....கனவு காணாம போயி தூங்குங்க...
Tuesday, March 31, 2009
தோழியின் திருமணமும்,பிளவுபட்ட தமிழகமும்
+1ல் இருந்து ஆரம்பித்த எங்கள் நட்பு,இளங்கலையில் ஒரே பெஞ்ச்சில் பயணித்த எங்கள் நட்பு,மாதம் ஒருமுறை திரையரங்குகளில் விரிந்த எங்கள் நட்பு,இதோ நாளையுடன் எல்லைகளுக்குள் அடங்கிவிடும்,என்று நினைக்கையில்,மனது எதிலும் லயிக்கவில்லை..
அவளுடைய நினைவுகளை சுமந்தபடி மதுரையை அடைந்தேன்.அன்பொழுக ,அம்மா கொடுத்த அடை தோசை கூட கசந்தது..
அடுத்த நாள்,எனது அம்மா,அப்பா,அண்ணா,நந்து(நந்தினி,எங்க வீட்டு அறுந்த வால் --அண்ணன் மகள்)ஆகியோருடன்,வனிதாவின் திருமணத்திற்கு கிளம்பினேன்.எங்கள் நட்பு மிகவும் ஆழமானதாலும்(எவ்வளோ என்றெல்லாம் கேட்க கூடாது),நாங்கள் பழகும் காலத்திலிருந்தே,இருவர் வீட்டிற்கும் ,நாங்கள் செல்ல பிள்ளை என்பதாலும், எங்கள் அண்ணனுக்கும்,அவளது அப்பாவிற்கும் அரசியல் ரீதியாக பழக்கம் உள்ளதாலும், இந்த ”குழு” பயணம் அவசியமாய் போய்விட்டது..
வனிதா,எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வின் கடைசி புதல்வி ஆதலால்,”ராஜா சர் முத்தையா” மன்றத்தில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.அலங்கார வளைவுகளும்,மேடை அலங்காரமும் கண்ணை கவர்வதாய் இருந்தது.அரசியல் புள்ளி மகளின் கல்யாணம் ஆதலால்,என்னால் அவ்வளவு சீக்கிரம் மணப்பெண்ணின் அறையை அடைய முடியவில்லை.பல முயற்சிகளுக்கு பிறகு அவளை சந்தித்தேன்.என்னை பார்த்ததும் எழுந்து வந்து கட்டிக்கொண்டாள்.எங்கள் இருவராலும் ஏதும் பேசமுடியவில்லை.பிறகு அவளிடம் விடைபெற்றுகொண்டு,மணமேடையின் எதிரே அமைந்திருந்த இருக்கைகளில் அமர்ந்தோம்.
முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதாக கூறி,வனிதாவை அழைத்து வந்து,மாப்பிள்ளை அருகில் அமர வைத்தனர்.தோழியை விட்டு பிரியப்போகிறோம் என்ற வருத்தமும்,அவளுக்கு இப்பொழுது திருமணம் என்ற சந்தோசமும் ,கலந்த கலவையாய் என் மனம் சிலாகித்துக்கொண்டிருந்தது.
திடீரென ,கூட்டத்தில் ஒரே பேச்சும் சலசலப்பும். “என்ன ஆச்சு அண்ணா?” என்று எனது அண்ணனை கேட்க திரும்பினால்,அவரை காணோம்.
நானும் எனது தலையை வலப்பக்கம் 90டிகிரி இடப்பக்கம் 90 டிகிரி என திருப்பி ,அண்ணனை தேடிக்கொண்டிருந்தேன்.சில நிமிடங்களுக்கு பிறகு ,அரக்க பரக்க ஓடி வந்து,எங்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டு,ஒரு சிறு கும்பலை நோக்கி சென்றார்.
alagu.jpg)
அங்கு சென்று பார்த்தால்,அட! சிறப்பு விருந்தினர் மு.க.அழகிரியும்,அவரது துணைவியார் காந்தி அழகிரியும் நின்று அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தனர்.எனது அண்ணன் அவர்களது பேரவையில்(பெயர் குறிப்பிட விரும்பவிலை)செயலாளராய் இருப்பதால்,எங்களை அறிமுகப்படுத்திவைத்தார்.
எனக்கு “ஹலோ” சொல்லி கைகுலுக்குவதா?இல்லை “வணக்கம்” சொல்வதா என்று தடுமாறிக்கொண்டிருக்கையில்,அழகிரி அவர்களே “வணக்கம் வாங்க” என்று கூறி எனது தடுமாற்றத்திலிருந்து என்னை காப்பாற்றினார்.
அப்பா,அவரிடம் ஏதும் பேசவில்லை.எனது அம்மாதான்,”நீங்க,ஏதாவது ஒரு தொகுதியில நிற்க வேண்டும்” என்று கூறினார்.
ஏதோ ”அந்த அம்மாவே ”கூறிவிட்ட மகிழ்ச்சியில் அவரும் ,எனது அம்மாவை நோக்கி, “ கவலைப்படாதிங்கம்மா! தேர்தல் முடியட்டும்.வடக்கே ஸ்டாலினும்,இங்கே நானும்னு பிரிச்சு தமிழகத்தை சீர்படுத்திடுவோம்”னு சொல்லி அழகாக புன்னகைத்தார்.
பிறகு,முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால்,தாலி எடுத்து கொடுக்க அவர் மணமேடையை நெருங்கினார்.அவரது தலைமையில் வனிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தது.விருந்து முடித்து விட்டு வீடு திரும்புகையில்,வனிதா மனதில் இல்லை....பிளவுப்படப் போகின்ற தமிழகமே கண்ணில் ஆடியது....இந்த நிகழ்வை “உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...
Subscribe to:
Posts (Atom)