Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Saturday, January 30, 2010

உறவுகளாலான உணர்வுகள்..

உறவுகள் என்றென்றும் நம்மை உணர்வுகளோடு உலாவரச்செய்பவை. அவ்வுணர்வுகளின் சாயமோ உறவுகளின் நிலை பொருட்டு மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. சில உறவுகள் நமக்கு மகிழ்ச்சியை தரும்.சில உறவுகள் வேதனையை தரும். சில உறவுகள் நம்மை தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும். சில உறவுகளை தேடிச்சென்றாலும், நம் கை வசப்படாமல் நழுவிச்செல்லும்.


பதினொன்றாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில், ”முதியோர் இல்லத்தின் மனநிலை” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். ஆறு பேர் அடங்கிய குழு எங்களுடையது, ஒரு ஆசிரியர் உள்பட. மதுரையில் உள்ள பல்வேறு முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு சென்று , அவர்களிடம் தனித்தனியாக பேசி , அவர்களுடைய நிலையையும் அதற்கான காரணங்களையும் அறிந்து கொண்டு, அவற்றிற்கான தீர்வை, நம்முடைய பார்வையில் கொடுத்து, அவ்வறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். பல பாட்டிகளிடமும், தாத்தாக்களிடமும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளிலும், உறவுகளைப்பற்றிய ஏக்கங்களும், சூழ்நிலையை நினைத்த நொந்த வலிகளுமே விரவிக்கிடந்தன. உறவுகள் கைவிடப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு பல காரணங்களால் அவர்கள் வந்திருந்தாலும், அடிப்படை காரணங்கள் அன்பை பெறுதலில் உள்ள சிக்கல்களும், புரிந்துகொள்ளலில் உள்ள தவறுகளுமே.. அன்பிற்கு ஏங்காதவர் யாரும் உண்டோ?

கல்லூரியில் தங்கி படிக்கும் காலகட்டத்தில் , வாரம் ஒருமுறை வீட்டிலிருந்து கடிதம் வந்துவிடும். வார்டன் அவர்கள் தான் அதை தருவார். அதையும் பிரித்துதான் தருவார். அவர் கையிலிருந்து வாங்கியதும் அடையும் சந்தோசம் மிகப்பெரியது. கிறுக்கல் எழுத்துக்களில், சில எழுத்துப்பிழைகளோடு அப்பா எழுதியிருக்கும் வார்த்தைகளில், நலவிசாரிப்பும், படிப்பின் அவசியம் பற்றியுமான வாசனை இழையோடும். மடல் வர தாமதமாகி , தொலைபேசியில் அழைக்க முடியாத சூழலில் இருக்கும் நாட்கள் வலியானவை. தொலைவில் இருந்தாலும், வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் அருகில் வைத்திருந்தது அப்பாவிடம் இருந்து வந்த அம்மடல்கள்.


ஆனால் இப்பொழுது கடிதங்களுக்கு பதிலாக சிலநிமிட பேச்சுக்களிலே நலவிசாரிப்புகள் முடிந்துவிடுகின்றன. அன்று அப்பா அனுப்பிய கடிதங்களை இன்று நுகர்ந்துபார்க்கிறேன். அவருடைய எழுத்துக்களில் ஊறியிருக்கும் அன்புச்சிதறல்களை உணரமுடிந்த என்னால், இன்று பேசி வைத்த தொலைபேசியின் வயர்களில் உணரமுடியவில்லை.

சிறு வயதில்,பொரிகடலை வாங்கித்தருவார் என்பதற்காகவே , எனது தந்தையின் கால்களை அமுக்கி விட்டிருக்கிறேன்.அன்று அவருடைய கால்வலியை நான் உணர்ந்துகொண்டதில்லை.
ஆனால் இப்பொழுது உணர்கிறேன், ஒருவித வலி கலந்த அன்புடன்.

பல குடும்பங்களில் ,உறவுகளில் விரிசல் ஏற்பட்டு,பல வருடங்கள் பேசாமல் இருந்து , பிறகு ஒன்று சேர்ந்த கதை கண்டிப்பாக இருக்கும். அக்கதையின் களம் பெரும்பாலும் திருமணவீடோ அல்லது இறந்த வீடோவாகத்தான் இருக்கும். அச்சூழலில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.எனது தந்தையும், அவரது அக்காவும்(எனது அத்தை),கிட்டதட்ட 12 வருடங்களாக பேசாமல் இருந்தார்கள். பிறகு சில வருடங்களுக்குப் பிறகு, இரு குடும்பமும் எனது அண்ணனின் திருமணத்தில் ஒன்று சேர்ந்தனர். அன்று கொண்டாடிய மகிழ்ச்சியை மறக்கவே முடியாது.

உறவுகள் என்றுமே அற்புதமானவை. நம்மை மகிழ்ச்சிப்படுத்துபவை (கையாளும்முறை பொறுத்து). விரும்பிய உறவுகள் அருகில் இருக்கும்போது யானைபலம் நம்முள்.உடுக்க,உண்ண, உறைய நேரம் ஒதுக்குவதுபோல உறவுகளுக்கும் நாம் நேரம் ஒதுக்கவேண்டும். அரையாண்டு மற்றும் முழுஆண்டு விடுமுறை நாட்களில்,சில நாட்களிலாவது குழந்தைகளை உறவுகளின் ஊடே வளரவிட வேண்டும். நமக்கு பிறகு அச்சங்கிலியை பிடிக்க போவது அவர்கள்தானே....

Thursday, April 30, 2009

பருத்திப்பாலும் பணியாரமும்...

மாற்றமே உலக தத்துவம் - கண்ணதாசனின் வைர வரிகள்,நம் காலத்தின் கொடை.

அடுக்குமாடிகளின் ஆவேச வளர்ச்சியால்,அமைதியாக,சவப்பெட்டிக்குள் செல்வதற்கான நாட்களை தினந்தோறும் எண்ணிக்கொண்டிருக்கின்றன ,விளைநிலங்களும்,எழில் கொஞ்சும் பூஞ்சோலைகளும் ...

வீட்டை சுற்றிலும் வேம்பும் புன்னையும் படர்ந்திருக்க,அவற்றில் கொச்சை கயிற்றை கட்டி,மரப்பலகையை வாகாக வைத்து,காற்றிலே ஊஞ்சலாடிய காலம் போய்,கருவறைக்குள்ளே குழந்தை அசைவதைப் போல,வீட்டிற்க்குள்ளே கம்பியால் ஆன ஊஞ்சல் இன்று.. ஊஞ்சலுக்கு கூட கடிவாளம் கட்டியது காலத்தின் மாற்றம்.

புதிதாய் கறந்த பாலில்,சுக்கு, மல்லி, வெல்லம் தட்டி போட்டு,காலையில் பருகும் காபியில் கூட உடல் நலத்தை பேணிய காலம் எங்கே...கானல் நீராய் போனதுதான் மிச்சம்.

பெண்களுக்கு தாலி கட்டாத கணவனாகவும்,ஆண்களுக்கு முழுநேர காதலியாகவும்,விளங்கிக்கொண்டிருக்கும் கணிணியில்,நம் பாரம்பரிய வாழ்வு அடகு வைக்கப்பட்டு விட்டது.மீட்டெடுக்கும் நாளும் அடுத்த தலைமுறையை சாராது.நம்மாலானது,பழமையை மறக்காமல் ,அந்நினைவுகளை அசைபோடுவதுதான் என்றாகிவிட்டது.அதில் நானும் விதிவிலக்கல்ல.

நான் எப்பொழுது மதுரை சென்றாலும்,ஒரு விசயத்தை மறக்காமல் செய்துவிடுவேன்.அது, முருகனை தரிசிக்க என்று கூறி திருப்பரங்குன்றம் செல்வதுதான்.ஆனால் உண்மையான காரணம் பருத்திப்பாலும் பணியாரமும் தான்.

மாலை 5 மணிக்கு மேல்,அக்கோவில் வீதியில்,  அங்கொன்றும் இங்கொன்றுமாய்,பருத்திப்பால் கடையும் ,பணியாரகடையும் களைகட்டும்.சென்னையில் பீசாவும் கெண்டக்கி சிக்கனும்(ஒரு பில்டப்புதான்),உண்டு பழுப்பேறி போன நாவிற்கு,இதமாய் அமையும் பருத்திப்பாலை ,இரண்டு தம்ளர் வாங்கி பருகினால்தான் என் மதுரை பயணம் பூர்த்தியடையும்.

சரவணபவனில் ,28 ரூபாய்க்கு ஆசையாய் வாங்கிய பணியாரத்தட்டில் இருக்கும்,
மூன்று பணியாரங்களை பார்த்துவிட்டு ,ஏற்படும் கோபம்,அவ்வீதியில்,வேலாயி பாட்டிகடையில் ரூபாய்க்கு இரண்டு வாங்கும்போது தணிந்துவிடும்.

நான் சிறுவயதாய் இருந்தபொழுது,எங்கள் வீட்டின் அருகே,ஒரு பெரிய தோப்பு இருந்தது.அந்நாட்களில்,என் அப்பாவுடன் அந்த தோப்பிற்கு சென்று குளிப்பது வழக்கம்.என் அப்பா மோட்டர் போட்டுவிட்டு குளித்துவிட்டு வரும்வரை,தோப்பு முழுதும் எனது ராஜாங்கம்தான்.வேப்பங்குச்சியில் பல்துலக்கிகொண்டே,சறுக்கலில் ஏறி விளையாடுவதும்,ஊஞ்சல் அந்து விழும் அளவிற்கு ஆடுவதும்,தட்டானையும் பட்டாம்பூச்சியையும் தேடி அலைந்ததுமாய்,இதமானதொரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது அந்த தோப்பு.கிணற்றிலே,நான் நீச்சல் பழகுவதற்கான அடிநாதமாய் விளங்கியதும் அவ்விடம்தான்.

ஆனால் ,இன்று அந்த இடத்தில் அக்குளிர்சோலை இருந்ததிற்கான சுவடே இல்லை.இளநீரும்,மாங்காயும்,அவரையும், கத்தரியும் கொடுக்கும் அவ்வட்சய பாத்திரம்,ரியல் எஸ்டேட்காரர்களால் சூறையாடப்பட்டுவிட்டது.என் விளையாட்டு திடலும்,பட்டாம்பூச்சியும் களவாடப்பட்டது.

நாள்முழுதும் ஏசி குளிரில் விறைத்துக்கொண்டிருக்கும் எத்தனைபேருக்கு,தோப்பு மூலிகை நிழல் புரியும்.காசு கொடுத்து நோயை வாங்கிகொண்டிருக்கும் எத்தனை பேருக்கு இயறகை உணவுகள் தெரியும்.

இதெற்க்கெல்லாம் காரணம் யார்? நாம் ..நாம் மட்டும்தான்.சிறுகுடலை வெட்டி எறிந்துவிட்டு,எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்பது போலல்லவா இருக்கின்றோம்.மரங்களின் புனிதமும்,இயற்கையின் முக்கியத்துவமும்,பணத்தின் முன் அடிபட்டுக்கொண்டிருக்கிறதே..

இந்நிலை தொடர்ந்தால்,பருத்திபால் குடிக்க மதுரை செல்லும் என்னைப்போல,ஆக்ஸிசன் நுகர எங்கேயாவது செல்ல வேண்டியிருக்கும் அடுத்த தலைமுறை.
 






Sunday, April 19, 2009

வாய்மொழிதலெனும் சக்தி..


ஆத்திகர்களின் ஆதாம் ஏவால் ஆகட்டும்,நாத்திகர்களின் மனித குரங்காகட்டும்,இருநிலை உயிர்களுமே தத்தம் உணர்வுகளை பறைசாற்றிக் கொள்ள,உபயோகித்த பல்வேறு உபகரணங்களில் இன்று வரை,குறைவிலா குன்றொளியாய் திகழ்ந்து வரும் “ஒலி” எனும் ஆற்றல், “பேச்சு”,”உரையாடல்” என்ற மூலப்பூச்சுக்களை அணிந்து,பரிணாமம் அடைந்திருக்கிறது.

மனிதன் கூட்டமாய் வாழத்தொடங்கிய கால கட்டத்தில்,”சைகை” மொழிபாஷைகள்,அவனுடையதேவைகளையும்,உள்ளக்கிடக்கைகளையும்,
வெளிக்கொணரும் வடிகாலாய் அமைந்திருந்தன.

சிந்து சமவெளி நாகரிகத்தின் உச்சகட்டத்தில், ஒலியின் வடிவம் உருப்பெறத்தொடங்கியது.தங்களது வாழ்வு முறைகளை பறைசாற்றும் வண்ணம்,குகைகளிலும்,கற்பாறைகளிலும் வரிவடிவங்கள்,சித்திரவடிவங்கள் போன்றவற்றை செதுக்கினான்.

படர்ந்து கிளைபிரித்து,பல்வேறு இடங்களில்,தனித்தனி குழுக்களாய் வாழத்தொடங்கினான்.அச்சமயமே,தமக்கான,தத்தம் குழுக்களுக்கான ஒலி பாஷைகள் உருவாக்கப்பட்டது.அவ்வாறான குழு பாஷைகள்,பின்னாட்களில்,
அவரவருக்கான மொழியாய் மாறியது.

இன்று ,அன்றாட நடைமுறைச்செய்தியாகிக் கொண்டிருக்கும் மொழியுணர்வின் பின்புலம் அன்று விதைக்கப்பட்டதுதான்.

பிறப்பின் நோக்கமான பிறப்புவித்தல் முறையே அரங்கேறிகொண்டிருந்த காரணத்தினாலும்,ஆதலால் குழுக்களுக்குள் ஏற்பட்ட இட நெருக்கடியாலும்,தனது தேவைகளை விசாலப்படுத்திக் கொண்ட காரணத்தினாலும்,நாகரிக வளர்ச்சியாக மற்ற இடங்களுக்கும், மற்ற குழுக்களுக்கும் இடம் பெறத்துவங்கினான்.

இவ்வாறாக, பல பாஷைகள் கலக்க தொடங்கின.ஆனபோதும்,தனது பாஷை பேசுபவரிடம் மட்டும் அவனுக்கு அதிக பிடிப்பு ஏற்பட்டது.காரணம் ஒன்றுதான் - அது ”வசதி”(Comfortableness).நம் உணர்வுகளை அப்படியே புரிந்து கொள்ளும் ஆற்றல் ,90% அதே மொழி பேசுபவரால் மட்டுமே உணரமுடியும்.

உதாரணத்திற்கு ஒரு நிகழ்வை கூறுகிறேன்.”யாரடி நீ மோகினி” திரைப்படத்தை முதலில் தெலுங்கில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.தமிழில் ரகுவரன் செய்த பாத்திரத்தை,அங்கே மற்றொருவர் செய்திருந்தார்.பெயர் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் அவர் பல தமிழ்படங்களில் சிறந்த வில்லனாய் நடித்திருந்தவர்(”சாமி” பட வில்லன்). அவரை வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட என்னால்,அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை முழுதாய் புரிந்து கொள்ள இயலவில்லை.தமிழில் பார்த்த பிறகே அதை நான் உணர்ந்தேன்.

ஆக உணர்வுகளை முறையாக புரியவைக்கவும்,புரிந்துகொள்ளவும் உருவாக்கப்பட்ட,வார்த்தைகளின்கலவையானமொழிஎனும்ஒலியின்சக்தி,
இன்று,பெரும்பாலும் பிறரைவசைபாடுவதற்கும்,புறங்கூறுதலுக்கும்,
ஏமாற்றுவதற்கும் அளப்பரிய உதவி செய்து கொண்டிருக்கிறது.

படைக்கப்பட்டதற்கான பயனை மறந்து ,நாவினால் சுட்ட வடுவாகி பாழுங்கிணற்றடியில் நின்று கொண்டிருக்கிறது அவரவர் பாஷை.

மாறுவோம் நாம்.நம்முடைய மொழி வன்னொலி எழுப்ப அல்ல..இன்னொலியை அலைவரிசையாக்க..நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..அன்பு நெறியை வலியுறுத்த..சமூகத்திற்கும்,வரும் சந்ததியருக்கும் நம்மால் முடிந்த உதவி இதுவாகட்டும்.

”அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்”.