Saturday, January 30, 2010

உறவுகளாலான உணர்வுகள்..

உறவுகள் என்றென்றும் நம்மை உணர்வுகளோடு உலாவரச்செய்பவை. அவ்வுணர்வுகளின் சாயமோ உறவுகளின் நிலை பொருட்டு மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. சில உறவுகள் நமக்கு மகிழ்ச்சியை தரும்.சில உறவுகள் வேதனையை தரும். சில உறவுகள் நம்மை தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும். சில உறவுகளை தேடிச்சென்றாலும், நம் கை வசப்படாமல் நழுவிச்செல்லும்.


பதினொன்றாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில், ”முதியோர் இல்லத்தின் மனநிலை” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். ஆறு பேர் அடங்கிய குழு எங்களுடையது, ஒரு ஆசிரியர் உள்பட. மதுரையில் உள்ள பல்வேறு முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு சென்று , அவர்களிடம் தனித்தனியாக பேசி , அவர்களுடைய நிலையையும் அதற்கான காரணங்களையும் அறிந்து கொண்டு, அவற்றிற்கான தீர்வை, நம்முடைய பார்வையில் கொடுத்து, அவ்வறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். பல பாட்டிகளிடமும், தாத்தாக்களிடமும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளிலும், உறவுகளைப்பற்றிய ஏக்கங்களும், சூழ்நிலையை நினைத்த நொந்த வலிகளுமே விரவிக்கிடந்தன. உறவுகள் கைவிடப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு பல காரணங்களால் அவர்கள் வந்திருந்தாலும், அடிப்படை காரணங்கள் அன்பை பெறுதலில் உள்ள சிக்கல்களும், புரிந்துகொள்ளலில் உள்ள தவறுகளுமே.. அன்பிற்கு ஏங்காதவர் யாரும் உண்டோ?

கல்லூரியில் தங்கி படிக்கும் காலகட்டத்தில் , வாரம் ஒருமுறை வீட்டிலிருந்து கடிதம் வந்துவிடும். வார்டன் அவர்கள் தான் அதை தருவார். அதையும் பிரித்துதான் தருவார். அவர் கையிலிருந்து வாங்கியதும் அடையும் சந்தோசம் மிகப்பெரியது. கிறுக்கல் எழுத்துக்களில், சில எழுத்துப்பிழைகளோடு அப்பா எழுதியிருக்கும் வார்த்தைகளில், நலவிசாரிப்பும், படிப்பின் அவசியம் பற்றியுமான வாசனை இழையோடும். மடல் வர தாமதமாகி , தொலைபேசியில் அழைக்க முடியாத சூழலில் இருக்கும் நாட்கள் வலியானவை. தொலைவில் இருந்தாலும், வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் அருகில் வைத்திருந்தது அப்பாவிடம் இருந்து வந்த அம்மடல்கள்.


ஆனால் இப்பொழுது கடிதங்களுக்கு பதிலாக சிலநிமிட பேச்சுக்களிலே நலவிசாரிப்புகள் முடிந்துவிடுகின்றன. அன்று அப்பா அனுப்பிய கடிதங்களை இன்று நுகர்ந்துபார்க்கிறேன். அவருடைய எழுத்துக்களில் ஊறியிருக்கும் அன்புச்சிதறல்களை உணரமுடிந்த என்னால், இன்று பேசி வைத்த தொலைபேசியின் வயர்களில் உணரமுடியவில்லை.

சிறு வயதில்,பொரிகடலை வாங்கித்தருவார் என்பதற்காகவே , எனது தந்தையின் கால்களை அமுக்கி விட்டிருக்கிறேன்.அன்று அவருடைய கால்வலியை நான் உணர்ந்துகொண்டதில்லை.
ஆனால் இப்பொழுது உணர்கிறேன், ஒருவித வலி கலந்த அன்புடன்.

பல குடும்பங்களில் ,உறவுகளில் விரிசல் ஏற்பட்டு,பல வருடங்கள் பேசாமல் இருந்து , பிறகு ஒன்று சேர்ந்த கதை கண்டிப்பாக இருக்கும். அக்கதையின் களம் பெரும்பாலும் திருமணவீடோ அல்லது இறந்த வீடோவாகத்தான் இருக்கும். அச்சூழலில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.எனது தந்தையும், அவரது அக்காவும்(எனது அத்தை),கிட்டதட்ட 12 வருடங்களாக பேசாமல் இருந்தார்கள். பிறகு சில வருடங்களுக்குப் பிறகு, இரு குடும்பமும் எனது அண்ணனின் திருமணத்தில் ஒன்று சேர்ந்தனர். அன்று கொண்டாடிய மகிழ்ச்சியை மறக்கவே முடியாது.

உறவுகள் என்றுமே அற்புதமானவை. நம்மை மகிழ்ச்சிப்படுத்துபவை (கையாளும்முறை பொறுத்து). விரும்பிய உறவுகள் அருகில் இருக்கும்போது யானைபலம் நம்முள்.உடுக்க,உண்ண, உறைய நேரம் ஒதுக்குவதுபோல உறவுகளுக்கும் நாம் நேரம் ஒதுக்கவேண்டும். அரையாண்டு மற்றும் முழுஆண்டு விடுமுறை நாட்களில்,சில நாட்களிலாவது குழந்தைகளை உறவுகளின் ஊடே வளரவிட வேண்டும். நமக்கு பிறகு அச்சங்கிலியை பிடிக்க போவது அவர்கள்தானே....

26 comments:

நட்புடன் ஜமால் said...

துவக்க பத்தியே அருமை இருங்க உள்ளே போய்ட்டு வாறேன் ...

நட்புடன் ஜமால் said...

வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் அருகில் வைத்திருந்தது அப்பாவிடம் இருந்து வந்த அம்மடல்கள்.]]


உணர்ந்து சொல்லியிருக்கீங்க

உணரச்செய்கிறது.

--------------

நமக்கு பிறகு அச்சங்கிலியை பிடிக்க போவது அவர்கள்தானே....

நல்ல தெளிவுங்க.

அன்புடன் அருணா said...

அருமையான உணர்வுப் பகிரல்!பூங்கொத்து!

பலா பட்டறை said...

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை..:))

அருமை..:))

பிரியமுடன்...வசந்த் said...

அருமையான பகிர்தல் என்னதான் சண்டையோ சச்சரவோ வந்தாலும் நமக்கு ஒண்ணுன்னா வரிஞ்சுகட்டுறது உறவுகள்தான்...

VISA said...

Well said!!!

Sangkavi said...

அருமையான பகிர்வு..

R.Gopi said...

உறவுகளின் உணர்வுகள் அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது...

வாழ்த்துக்கள் ஈஸ்வரி...

நர்சிம் said...

நன்று

அபுஅஃப்ஸர் said...

//சில நாட்களிலாவது குழந்தைகளை உறவுகளின் ஊடே வளரவிட வேண்டும். நமக்கு பிறகு அச்சங்கிலியை பிடிக்க போவது அவர்கள்தானே....
//

இது நிச்ச்யம நடக்கவேண்டும், நாமும் அதற்கான வழிமுறைகளைதான் தேடிக்கொண்டிருக்கோம்...

அபுஅஃப்ஸர் said...

//பல குடும்பங்களில் ,உறவுகளில் விரிசல் ஏற்பட்டு,பல வருடங்கள் பேசாமல் இருந்து , பிறகு ஒன்று சேர்ந்த கதை கண்டிப்பாக இருக்கும்//

இருக்குலே.. இணைந்தபிறகு வரும் சந்தோஷம் சொல்லி மாளாது

ஜீவன் said...

///அன்று அப்பா அனுப்பிய கடிதங்களை இன்று நுகர்ந்துபார்க்கிறேன். அவருடைய எழுத்துக்களில் ஊறியிருக்கும் அன்புச்சிதறல்களை உணரமுடிந்த என்னால், இன்று பேசி வைத்த தொலைபேசியின் வயர்களில் உணரமுடியவில்லை.///

அருமை...!

அருமையான பகிர்வு..!!

Dr.Rudhran said...

well written

malarvizhi said...

நமக்கு பிறகு அச்சங்கிலியை பிடிக்க போவது அவர்கள்தானே....
அருமையான பகிர்வு.

அன்பரசன் said...

உறவுகளை பற்றிய உங்களது இந்த பதிவு அருமை

Anbu Thozhan said...

உணர்வு பூர்வமான பதிவு... இன்றைய சூழலில் மிக அவசியமானதும் கூட... அனைவரும் சொந்தங்கள் சேர சுகமாய் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்...

தேவன் மாயம் said...

தொலைபேசியில் அழைக்க முடியாத சூழலில் இருக்கும் நாட்கள் வலியானவை. தொலைவில் இருந்தாலும், வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் அருகில் வைத்திருந்தது அப்பாவிடம் இருந்து வந்த அம்மடல்கள்.///

உண்மைதான்!! இன்று கடிதங்கள் அரிதாகி விட்டன!!

sury said...

//பல குடும்பங்களில் ,உறவுகளில் விரிசல் ஏற்பட்டு,பல வருடங்கள் பேசாமல் இருந்து , பிறகு ஒன்று சேர்ந்த கதை கண்டிப்பாக இருக்கும். // முற்றிலும் உண்மை.
எனக்கும் என் தங்கைக்கும் 1987ல் எனது தம்பி திருமண நாளன்று ஒரு உப்பு பெறாத விசயத்துக்கு தேவையில்லாத மனஸ்தாபம், முற்றிப்போய் விறிசல் கண்டு எங்கள் அம்மா நோய் வாய்ப்பட்டுப் பின் இறந்து போன சமயம் தான் முடிவுக்கு வந்தது.

இறக்குமுன் கூட என் அன்னை " நீரை அடித்தால் நீர் விலகுமோ ? " என்றார்கள்.

உறவுகள் சில நேரங்களில் உலர்ந்து விடுகின்றன. அவ்வளவே.

சுப்பு ரத்தினம்.

sury said...

சொல்ல ( எழுத ) மறந்துபோனேன்.

எனது தங்கை பெயரும் ராஜேஸ்வரி.

சுப்பு ரத்தினம்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான இடுகை.

நான் சொல்ல வந்ததை சுப்பு ரத்தினம் சார் சொல்லி விட்டிருக்கிறார். என் தங்கை பெயரும் ராஜேஸ்வரி:)!

//அரையாண்டு மற்றும் முழுஆண்டு விடுமுறை நாட்களில்,சில நாட்களிலாவது குழந்தைகளை உறவுகளின் ஊடே வளரவிட வேண்டும். நமக்கு பிறகு அச்சங்கிலியை பிடிக்க போவது அவர்கள்தானே....//

சகோதரிகள் மற்ற இருவரும் இதில் அசட்டையாக இருந்தாலும் உங்களைப் போலவே அவளும் இதை வலியுறுத்துவாள்!

பாலராஜன்கீதா said...

உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

நினைவுகளுடன் -நிகே- said...

பதிவு அருமை
உறவுக்கு நிகர் உறவுதாங்க

Malathy said...

அடே அப்பா, எத்தனை சுகமான தமிழ். ஹ்ம்ம்... மிக்க ரசித்து எழுதி இருக்கிறீர்கள். ரசனக்காரி அல்லவா?

சி. கருணாகரசு said...

பதிவு.... உணர்வுடனும்... உயிர்ப்புடனும் .... பாராட்டுக்கள்.

தாராபுரத்தான் said...

இந்த காலத்திற்கு அவசியமான பதிவு.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in