Wednesday, October 28, 2009

பிறந்தநாள்- வாழ்த்துக்களும்,முக்கியத்துவமும்


இன்றைய சூழலில் ,பிறந்த நாள் கொண்டாடுவதென்பது ஒரு தவிர்க்க முடியாத சிறு நிகழ்வாகி போய்விடுகிறது. சிறு குழந்தை முதல் முதியவர் வரை, தன்னுடைய பிறந்த நாளை விரும்பாதவர் யாரும் இலர். இதில் சில விதி விலக்குகளும் உண்டு.

பள்ளி பிராயத்திலே, பிறந்த நாள் என்பது புது படம் ரிலீஸ் ஆவது போல.சீருடைக்கு விடுமுறை கொடுத்து ,வண்ண ஆடையை அணிந்து , கையில் ஒரு பெரிய டப்பாவில் அப்பா வாங்கி கொடுத்த நுயுட்ரின் சாக்லேட்டை கொண்டு போய் வகுப்பு ஆசிரியருக்கு கொடுத்து விட்டு , முதல் பீரியடில் பிறந்த நாள் வாழ்த்து பாடலை கேட்டு விட்டு , கோயிலில் பூசாரி பிரசாதம் கொடுப்பது போல் டப்பாவை ஏந்தி கொண்டு அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தால்தான் , ஒரு தேவதை போன்ற எண்ணம் மனசுக்குள் தோன்றும்.இதில் மற்றொரு சுகம் என்னவென்றால் ,முடிந்த மட்டும் அன்று முழுவதும் எந்த ஆசிரியரும் அடிக்க மாட்டார்கள்.அதற்காகவே இரண்டு தடவை பிறந்த நாள் கொண்டாடுபவர்களும் உண்டு . என்ன வென்று கேட்டால் "அன்று சர்டிபிகேட் படி, இன்று ஜாதகப்படி " என்பர். இதிலும் அன்றைக்கு அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கி வந்த காசில் தன்னுடைய நெருங்கிய நண்பனுக்கு( எதுக்கு வம்பு நண்பிக்கும்) பை ஸ்டார் சாக்லேட்டோ ,டேய்ரீ மில்க் சாக்லேட்டோ கண்டிப்பாக உண்டு.

கல்லூரி பிறந்த நாள் விழாக்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாக்லெட் எல்லாம் ஓல்ட் டைப். குரூப் ட்ரீட் என்று, பேக்கரியிலோ, காபி ஷாப்பிலோ , அப்பாவின் பணம் திவால் ஆகும் .பரீட்சை நேரம் பிறந்த நாள் வந்து விட்டால், ஒன்று எக்சாமை போஸ்ட்போண்டு பண்ணுவார்கள் அல்லது பிறந்த நாளையே போஸ்ட்போண்டு பண்ணி விடுவார்கள். ஆக மொத்தம் அன்று மட்டும் ஒரு குட்டி கதாநாயகன் கதாநாயகி ஆகிவிடுவார்கள்.

வேலைக்கு செல்பவர்களை எடுத்துகொண்டோமானால் , பாதி பேர் பிறந்த நாளை மறைத்து விடுவர். "எதுக்கு தேவை இல்லாமல் வெட்டி செலவு" என்று. "ஆனாலும் விடமாட்டோம்" என்று நண்பர்கள் ஊரெல்லாம் தமாரம் அடித்து விடுவதும் உண்டு. ஆனபோதும் ,திருமணத்திற்கு முன்னால் , வேலைக்கு செல்லும் பலருக்கு தத்தம் பிறந்த நாள்களின் போது, சிறு வலி இருக்கும்.குடும்பத்தினருடன் இல்லாமல் இருப்பது, கல்வி கடன், உயர் பதவி மற்றும் வேலைக்களுக்கான அலைச்சல் என்று பல. பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்ட மகிழ்ச்சி சிறிதாக ,சிலருக்கு பெரிதாக குறைந்திருக்கும்.


இவ்வாறு வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் வரும் (சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட) பிறந்த நாளின் மகிழ்ச்சி என்பது எப்பொழுதும் நிரந்தரமான ஒரே அளவாய் இருப்பதில்லை.ஆழ்ந்து கவனித்தோம் என்றால் பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்டாடப்படும் பிறந்த நாள் ,தன்னை முன்னிருத்தியே இருக்கும். அதன் பிறகு வருபவை 80 சதவிகிதம் நண்பருகளுக்காகவோ, குடும்பதினர்களுக்காகவோ இருக்கும்.


பக்குவப்பட்ட சிலர் தான்,தன்னுடைய பிறந்த நாளை,மற்றவர்களுக்காக உபயோகப்படுத்தி கொள்வார்கள்.கண்தானம் செய்வது, அநாதை இல்லம் சென்று உணவு கொடுப்பது , வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஏதாவது ஒரு ஆசையை நிறைவேற்றுவது என்று பல.அதிலே தனி சுகமும் ஆத்மா திருப்தியும் உண்டு.

நண்பர்களே!! நாமும் நம்முடைய பிறந்த நாளை பயனுள்ள முறையில் கொண்டாடுவோம் ..நம்மை சுற்றி உள்ளவர்களுக்காக.!!!


நாளை பிறந்த நாள் காணும் என் அன்பு கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!. எண்ணிய எண்ணம் யாவும் இனிதே துலங்க ,இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன் !!.


Saturday, October 24, 2009

புதிதாய் ஓர் ஆரம்பம்...

கடந்த ஒரு மாத காலமாய் , காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற முடிவும் முயற்சியும் ,பல தடங்கலுக்கு பிறகு ,ஒருவழியாய் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்துவிட்டது. மாசற்ற, காலை காற்றை சுவாசிப்பதென்பதே ஒரு சுகம்தான்.அதிலும் அமைதியான வேளையில் என்கின்றபோது, உடம்போடு சேர்ந்து மனதும் வலுப்படுவது போன்றதொரு எண்ணம்.

தமிழக அரசு ஆங்காங்கே நிறுவி இருக்கும் பூங்காக்கள்,உடற்பயிற்சி, யோகா போன்ற, நல்ல விசயங்களை வலியுறுத்தும் விதமாக விளங்கி வருகிறது என்றே கூறலாம்.அதன் மூலம் பலர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.

வீட்டின் அருகில் இருக்கும் சிவன் பூங்கா ( ஞானி மன்னிப்பாராக!! ஜீவா பூங்கா) எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நல்ல அகலமாய், காற்றோட்ட வசதியுடையதாய்,தியான மண்டபத்தோடு கூடிய இடம் அது.அங்கே வளரும் செடிகளுக்கான நாற்று பண்ணையும், அதனோடு இணைந்துள்ளது. எனக்கு தெரிந்து ,சென்னையில் கழிப்பிட வசதியோடு அமைந்த ஒரே பூங்கா இதுவாய் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.(பராமரிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி தெரியவில்லை).

காலை 5 மணிக்கு தொடங்கும் மக்களின் உடல் மற்றும் நடை பயிற்சி கிட்ட தட்ட 8.30 மணி வரை தொடர்கிறது . உடல் வளமே முக்கியம் என்பதை இது போன்ற இடங்களில் தெரிந்து கொள்ளலாம். 65 வயது வரையிலும் பயிற்சி செய்கிறார்கள்.இறகுப்பந்து விளையாடுவதற்கும் கூட தனி இடம் உள்ளது.சமீப நாட்களாய் இலவச முறையான யோகாசன பயிற்சியும் அங்கே நடந்து வருகிறது.மக்களும் சரியாக அதை உபயோகப்படுத்தி கொள்கிறார்கள்.இதைதவிர மாலை நேரங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற சறுக்கு மைதான வசதியும் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திறந்ததாதலால் ஒட்டு மொத்த பராமரிப்பு நன்றாகவே உள்ளது. தொடர்ந்தும் இதே நிலையில் இருந்தால் மகிழ்ச்சிதான்.

பொதுவாக நடை பயிற்சி செய்யும் போது அனைவரும் ஒரே திசையில்தால் நடந்து செல்வோம்.நேற்று நான் நடந்து சென்று கொண்டிருந்த போது ,எதிர் திசையில் இருவர் சென்று கொண்டிருந்தனர்.என்னவென்று பார்த்தால் தீபாரதனையோடு கூடிய பூஜை செய்து சாமி கும்பிட்டு வலம் வந்து கொண்டிருந்தனர்.பக்கத்தில் "இங்கே வழிபாடு கூடாது " என்ற பலகையும் இருக்கிறது.பூங்காவிற்கு எதிரிலேயே காவல் நிலையமும் இருக்கிறது. பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை என்னவோ போங்க ..பூங்கா பூங்காவாய் இருந்தால் சரி. .

Saturday, October 3, 2009

நன்றிகளுடன் மீண்டும் நான்...

வாழ்வின் இனிய தருணங்கள் சிலவற்றில் திருமணமும் ஒன்று. அதிலும் பல வருடங்கள் கடந்து நண்பர்களை அத்தருனங்களிலே சந்திப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான ஒன்று. என் அழைப்பிதழை ஏற்று ,எனது திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும், தொலைபேசி வழியாய் வாழ்த்திய நண்பர்களுக்கும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்திய நண்பர்களுக்கும், சாட்டிங்கில் (தமிழ்ல என்னாப்பா?) வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றிகள் பல .

என்றும் அன்புடனும் நட்புடனும்
ரசனைக்காரி