Tuesday, December 9, 2014

எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம்

ஒரு தனிமனிதனின் வாழ்வியலை உற்று நோக்கும் ஆர்வம் நம்மில்  என்றுமே குறைந்ததில்லை. அவ்வகையில் எஸ்.ராமகிருஷ்ணன்  அவர்களின் நிமித்தம் நாவல் தேவராஜ் என்பவனுடைய வாழ்க்கைப்பயணத்தை நம் கண்முன்னே விரியச்செய்கிறது.


மிகவும் பிரயத்தனப்பட்டு தன்னுடைய நாற்பத்தியேழாவது வயதில் கல்யாணம் செய்து கொள்கிறான். கல்யாணத்திற்கு முதல்நாள் இரவு, நண்பர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில்,அவன் கடந்து வந்த பாதையாக நிமித்தம் விரிகிறது.

சிறு வயதிலேயே காது கேளாமல் போய்விட்டதால், பிள்ளை பிராயத்து நிராகரிப்புகளும், இளமைக்கால இன்னல்களும் ஏமாற்றங்களும்  தேவராஜின் வாழ்வில் ஆறா  வடுக்கள் ஆகின்றன. காற்றிலே சிக்குண்ட மேகங்கள் சிதறி போவதைப்போல , அவனது வாழ்க்கை பல்வேறு திசைகளில் பயணப்பட்டு கொண்டே இருக்கிறது.

அப்பாவின் வெறுப்பும் கண்டிப்பும், அம்மாவின்  அக்கறையும் அன்பும் என இரு வேறு தோணிகளின் மூலம் அவன் பயணம் தொடர்கிறது. அவனது  மனப்பிரழ்வு  நிலையின் கனவுகள் , நமக்கு வேறு உலகத்தின் கண்ணாடி கதவுகள்.

அவன் கடந்து வரும் பாதைகளில், பல உண்மைச்  சமூக நிகழ்வுகளை ஆசிரியர் கோர்த்திருப்பது, யதார்த்தமான கதாபாத்திரத்திற்கு வழிகோலிடுகிறது . உதாரணமாக இந்திராவின் எமர்சென்ஸி  காலமும் , இலங்கைத்  தமிழ் மக்கள்  பிரச்சனையும் .

தேவராஜின் தோழனான ராமசுப்பு, நட்பின் இலக்கணம். நிர்க்கதியின் விளிம்புகளில் தேவராஜ்  நிற்கும் போதெல்லாம், தன் நண்பனுக்காக அவன் காட்டும் கரிசனம் அளப்பரியது. அதே போல தொழில் பயிற்சி நிறுவனத்தில் உருவாகும்  ஜோசப்பின்  நட்பு,  வாழ்வை கொண்டாடுவது மட்டும்தான் மனிதப்பிறவியின் நோக்கம் என்பதை வானவில்லாய் சொல்லிப்போகிறது . ஒரு மழை நாள்  மதியத்தின், ஜோசெப்பின் உற்சாக ஆட்டம், மழைக்காலங்களில் எல்லாம் அவனை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் .

 ஓவிய ஆசிரியராக வரும் சுதர்சனம் மற்றும் அவரது மனைவியின்  வாழ்க்கைமுறை  தெளிந்த நீரோடையாய், நாமும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சிறு எதிர்பார்ப்பை நம்முள் விதைக்கிறது.  திம்மலாபுரத்து தாத்தா  வீட்டு நாட்களும், அவர் எவருக்கும் வெண் கலயம் செய்து கொடுக்காததன்  பின்னால் இருக்கும் பேய்க் கதையும் , வண்டிபேட்டை வணிகமும் அசல் கிராமத்து மண்வாசனை.

காதலின் கல்லறை கவிதைகளை தேவராஜ் உணருமிடம், இளமை வயதிற்கே உண்டான யதார்த்தம் .காத்திருத்தலையும், தேடுதலையும் பற்றி  புலந்திரன் தரும் விளக்கும் நெகிழ்ச்சியான தருணம். மனிதனுக்குள் இருக்கும் மனசாட்சி இன்னும் சாகவில்லை என்பதற்கு புலந்திரன் கூறும் 'விஸ்வம் தங்கை'யின் கதையே சான்று.

 மனநிலை சரியில்லாதவனை  கவனித்துக்  கொள்ளும் வேளைகளில்  தேவராஜிற்குள் ஏற்படும் தாக்கங்கள் , வேதனை கலந்த ஒருவித  புரிதலற்ற உணர்வை நம்முள்  ஏற்படுத்துகிறது.

தேவராஜின் காசி பயணமும், அங்கு சொல்லப்படும் 'சிலம்பரா ஹேமாவதி'யின்  பட்டு நெய்யும் கதையும், ஒருவித அமானுஷ்யத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லமால்   காசியை மேலும் நேசிக்க வைக்கிறது. காசிக்கு ஒரு தடவையாவது செல்ல வேண்டும் என்ற ஆவலையும் நம்முள் உருவாக்குகிறது.

உண்மையில் நாவலாசிரியர் கூறுவதைப்போல தேவராஜ் போன்ற பலரது வாழ்க்கை இன்றளவும்  துன்பங்களின் சிற்றோடையாகத்தான் உள்ளது. அதில் எப்போதும் கசப்பு தண்ணீரே ஓடிக்கொண்டு இருக்கும் .

Wednesday, January 15, 2014

புத்தக கண்காட்சி- 2014

இந்த வருடம் பொங்கலன்றுதான் புத்தக கண்காட்சிக்கு செல்ல நேர்ந்தது என்பது சிறு வருத்தம் என்றாலும், என்னவரின் பர்சை பலமாக பதம் பார்த்ததை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மொத்தம் இருபது புத்தகங்கள் வாங்கி உள்ளேன். புத்தக கண்காட்சி முடிவதற்குள் எத்தனை புத்தகங்கள் படித்து முடிக்கிறேனோ , அத்தனை புத்தகங்கள் (வேறு) வாங்கி தருவதாக தங்கராசு  கூறியிருக்கிறார். பார்க்கலாம் 22ம் தேதி வரை.

மற்றபடி, அடுத்த  வருடத்திற்குள்ளாவது அத்தனை புத்தகங்களையும் படித்துவிடவேண்டும் என்று உறுதி மொழி எடுத்துள்ளேன் என்னுள். நான் வாங்கிய புத்தகங்களில் இரண்டு புத்தகங்கள் இணையத்தில் இருந்த விமர்சனம் பார்த்து வாங்கியது. ஒன்று, வம்சியின் வெளியீடான 6174.  டான் ப்ரௌனின் புத்தகங்கள் அனைத்தையும் படித்துள்ளேன். அதே மாதிரியான புத்தகங்கள் தமிழில் படிக்க கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். ஆனால் தேடியது இல்லை.

 சில மாதங்களுக்கு முன் அதிஷா அவர்களின் ப்ளாக்கில், 6174இன் விமர்சனம் படித்தேன். நன்றாக இருந்தது. உடனே முடிவு செய்தேன் வாங்கி விடவேண்டும் என்று. இதோ வாங்கியும் விட்டேன் .ஆனால் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை . இரண்டாவது புத்தகம் விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை. முகநூலை புரட்டும்போது அடிக்கடி கண்ணில் பட்ட புத்தகம் அது.ஆதலால் வாங்கிவிட்டேன்.


மற்றபடி எப்பொழுதும் போல் எஸ்.ராவின் புத்தகங்கள் சிலவும் வாங்கி உள்ளேன்.வாங்கிய புத்தகங்கள் அனைத்திற்கும் விரைவில்(ரசனைக்காரியின்) விமர்சனங்களை
எதிர்பார்க்கலாம்.

வாங்கியுள்ள புத்தகங்களின் வரிசை இங்கே:
  1. நிமித்தம் - எஸ்.ரா 
  2. மறைக்கப்பட்ட இந்தியா  - எஸ்.ரா 
  3. மழைமான்  - எஸ்.ரா 
  4. காந்தியோடு பேசுவேன் - எஸ்.ரா 
  5. இலக்கற்ற பயணி - எஸ்.ரா 
  6. நகுலன் வீட்டில் யாரும் இல்லை - எஸ்.ரா 
  7. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - மனுஷ்ய புத்திரன் 
  8. தலைமுறைகள்- நீல.பத்மநாபன் 
  9. சாயாவனம் - சா.கந்தசாமி 
  10. கொற்கை - ஜே.டி. குருஸ் 
  11. கொங்குதேர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன் 
  12. டாலர் நகரம்- ஜோதிஜி 
  13. வெண்கடல் - ஜெயமோகன் 
  14. வெள்ளை யானை - ஜெயமோகன் 
  15. 6174 - க.சுதாகர் 
  16. லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின் 
  17. தன்னாட்சி-  அர்விந்த் கெஜ்ரிவால் ( தமிழில்:கே.ஜி.ஜவர்லால்)
  18. இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன - ராஜ் சிவா 
  19. ராஜிவ்காந்தி சாலை - விநாயக முருகன் 
  20. பொன்னியின் செல்வன்- கல்கி (ஏற்கனவே இணையத்தின் மூலம் படித்தது என்றாலும் புத்தகத்தில்  படிக்கும் ஆசையில் வாங்கினேன்)

உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் இங்கே பகிருங்கள். நானும் படிக்க விளைகிறேன்.