Tuesday, May 12, 2009

மறுபடியும் மழைவரும்...


மழைத்தூரல்கள் பூமியை நனைத்துக்கொண்டிருந்தன.ஆதவன் தன் ஆடையை பறிகொடுத்துவிட்டு,மலைமுகடுக்குள் ஒழிந்துகொண்டிருந்தான்.அவனுடன் போர்தொடுத்து ஓய்ந்ததுபோல்,கார் மேகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் சலனமற்று பயணித்துக்கொண்டிருந்தாள் ஜானகி.ஜன்னலில் பட்டு தெறித்த நீர்த்துளிகள் அவளது ஆடையை மட்டும் பதப்படுத்தியிருந்தது.துர்கா,அவளது மூன்றரைவயதுச் செல்வம்,நித்திரைக்கு தன்னையிழந்து,தாயின் மடியில் சுருண்டு படுத்திருந்தாள்.

மேலூரைத்தாண்டி பேருந்து சென்றுகொண்டிருந்தது.”இதோ இன்னும் ஒரு மணி நேரத்தில் வீடு வந்துவிடும்.அப்பாவிடம் என்ன சொல்வேன்? எல்லாம் முடிந்துவிட்டதென்றா? இல்லை...இவை எல்லாம் உங்களால்தானப்பா என்றா?” ஜானகியின் எண்ணங்கள் உருபோட்டுக்கொண்டிருந்தன.மீளாத்துயரத்தில் இருப்பதாய் அவளது கண்கள் அர்த்தம் புகுத்திக்கொண்டிருந்தன.

துர்காவின் தலையை கோதிவிட்டபடியே வெளியே பார்த்தாள்.மழை இன்னும் சிறு நூலாக கோடுபோட்டுக்கொண்டிருந்தது.

அப்பா பஸ்ஸ்டாண்டிற்கு வந்திருப்பார்..அங்கேயே சொல்லிவிடுவதா?இல்லை வீட்டிற்கு போய்விட்டு மெதுவாக சொல்வதா?” முடிவு எடுக்கமுடியாமல் கணகளை மூடி ,தலையை பின்னே சாய்த்து,பெருமூச்சு விட்டாள் ஜானகி.அவளுடைய அசைவில் துர்கா விழித்துக்கொண்டாள்.

அம்மா..தாத்தா வீடு வந்துடுச்சா?”

இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடும்.நீ தூங்காத முழிச்சுக்கோ..”

ம் ம்.மா நான் ஜன்னல் கிட்ட உட்காரட்டா?”

சரி வா” -இருக்கையில் அமர்ந்தபடியே,அவளை தூக்கி மடியில் அமர்த்தி,சற்று நகர்ந்து அமர்ந்து துர்காவை சன்னலோரமாய் உட்காரவைத்தாள் ஜானகி.

ஜன்னல் கம்பிகளில் பட்டுத்தெறித்த நீர் துர்காவை குதுகலப்படுத்திக்கொண்டிருந்தது.

மாட்டுத்தாவணி வந்துருச்சு.இறங்குரவங்க இறங்கிக்கங்க..”-கண்டக்டரின் குரல் ஜானகியையும் சென்றடைந்தது.மேலிருந்த சூட்கேசையும்,பேக்கையும் எடுத்து கீழே வைத்தாள்.தன் கைப்பையையும் பேக்கையும் ஒருகையில் மாட்டிக்கொண்டு,ஒரு கையில் சூட்கேசையும் மறுகையில் துர்காவையும் பிடித்தபடியே கடைசியாக இறங்கினாள்.


சென்றமுறை மதுரை வந்த ஞாபகம் மனதினுள் சுழன்றது.துர்காவை P.K.G சேர்க்க வேண்டும் என்று கூறி ,அப்பாவிடம் 5000 ரூபாய் வாங்கிச்சென்று,அந்த மாத்தில் மளிகை சாமான்,பால்,கேஸ் என்று சமாளித்தது ,அவளது மனத்தில் மறுபடியும் ரணத்தை பதித்தது.

இந்த தடவை என்ன சொல்ல போகிறேன்? கடவுளே.ஏன் என்னை சோதிக்கிற?”மனதிற்குள் முணுமுணுத்தபடியே பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தாள் ஜானகி.

எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தயாராக நின்றுகொண்டிருந்தார் பரசுராம்.

வாம்மா ஜானு..நல்லாயிருக்கியா?”

ம்.இருகேன்பா..”-தன் குரலில் சுருதி குறைந்துவிட்டதோ என்று அவளுக்கே சந்தேகமாயிருந்த்து.

ஏய் ..துர்காகுட்டி ..இங்க வாங்க..தாத்தாகிட்ட வாங்க
ஓடிசென்று தாத்தாவின் கைகளை பற்றிகொண்டாள் துர்கா.

ஜானு.ஏம்மா ஒருமாதிரி இருக்க?”

வீட்டுல போயி சொல்றேன்ப்பா

மூவரையும் ஏற்றிக்கொண்ட ஆட்டோ மங்களம் இல்லத்தை நோக்கி விரைந்தது.

வாடி ஜானு..இன்னைக்கு வரேன்னு நேத்துதான் போன் பண்ணி சொல்லுர..என்னடி ஆச்சு?”-ஜானகியின் தாய் மங்களம்.

மங்களம்,முதல்ல அவ குளிச்சிட்டு சாப்பிடட்டும்.பிறகு பேசிக்கலாம்என்று அதட்டியபடி ஜானுவை நோக்கிபோம்மா.போயி குளிச்சிட்டு வா!” என்றார் பரசு.

துர்காவிற்கு இட்லி ஊட்டிவிட்டு,சுட்டி டிவி சேனலை அவளுக்கு வைத்துவிட்டு,ஜானுவை நோக்கி,”இப்ப சொல்லுடி ..என்ன பிரச்சனை?”-என்றாள் மங்களம்.

அம்மா..நான் அவரை டைவர்ஸ் பண்ண போறேன்”-இதயத்திலிருந்த மவுனத்தை,தலை குனிந்தபடியே சிறிதாய் கலைத்தாள் ஜானகி.

அடி பாதகத்தி..இப்படி ஒரு விசயத்த சொல்லவா அங்க இருந்து ,நீயும் ஒன் மகளும் கிளம்பி வந்தீங்க

ஆமாமா..நான் அப்பப்ப உங்ககிட்ட பணம் கேட்டு தொந்தரவு பண்றதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.எனக்கு பிடிக்கல

அதுக்காக..இதுதான் முடிவா?போ.ஒரு வேலைக்கு போ..நீ சம்பாதிச்சு,உம் பிள்ளையையும் உன் புருசனையும் காப்பாத்து..அது பொம்பளை.அதவிட்டுட்டு டைவர்ஸ் அப்படி இப்படின்னு பேசாத

அம்மாவின் குதர்க்கமான பேச்சில் கூட தன்னுடைய நன்மை இழையோடுவதை கவனிக்க தவறவில்லை ஜானகி.

இல்லம்மா..இனி அவரோட சேர்ந்துவாழ முடியாதுஎன்று தன் புருசனுடைய குடிப்பழக்கத்திலிருந்து,வாடிக்கையாகிவிட்டிருந்தஅந்தமாதிரியான தொடர்புகள் வரைக்கும் கொட்டி தீர்த்த ஜானகியின் கண்களில் தீயின்றி நீரில்லை.

பரசுராம் எதுவும் பேச திராணியற்று அமர்ந்திருந்தார்.”சிறிது குடிப்பழக்கம்தான் .போகப்போக சரியாகி விடும்,எப்படியும் தன் மகள் சரி படுத்திவிடுவாள்என்ற நம்பிக்கையில்,விருப்பமே இல்லாத ஜானுவை கட்டாயப்படுத்தி,தன் பால்ய சினேகிதனின் மகனுக்கு,விவாகம் செய்துவைத்தார்.அது இப்படி முடியும் என்று அவர் சிறிதும் நினைக்கவில்லை.

இதுவரை அதட்டி பேசிக்கொண்டிருந்த மங்களம்,சற்று அருகில் வந்து,”ஜானு..பொம்பளைங்க,ஆம்பிள துணை இல்லாம வாழ்றது கஷ்டம்மா..வாழ்வோ தாழ்வோ அவரோட நீ இருந்தா உனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும்மாஎன்றாள்

அம்மா..நான் அதெல்லாம் யோசிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா?நிலைமை ரொம்ப மோசம்மா..அவரோட செயலகள் ஒண்ணொண்ணும் கீழ்த்தரமா இருக்கு.எனக்கு துர்காவோட வாழ்க்கைய நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.இதைவிட்டா எனக்கு வேறு வழி தெரியலம்மா

நாட்கள் உருண்டன.ஞாயிறும் திங்களும் ஜானகியையும் தீண்டின.
அம்மா..நான் ஸ்கூலுக்கு போயிட்டு வர்ரேன்..துர்காவை பார்த்துக்கோங்க..” என்றபடி வெளியே வந்து,செருப்பை மாட்டிக்கொண்டு வாசலைக்கடந்தாள் ஜானகி.

சரிம்மாஎன்று அவளின் நிலையை நினைத்து யாரும் அறியா வண்ணம் கண்களில் நீரை வார்த்தாள் மங்களம்.

தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராய் வேலை செய்யப்போவதை நினைத்து,பெருமிதம் கலந்த சந்தோசம் ஒருபுறம், மறுபுறம்..ம்ஹீம். அதை எப்பவுமே வெளியே சொல்லமாட்டாள் ஜானகி.

பள்ளி அருகில் வந்ததும்,அந்த வீட்டை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.கண்கள் யாரையோ தேடின.ஏக்கத்தின் சுவடுகளை உள்ளே மறைத்து
பள்ளியினுள் சென்றாள்.கடிகார முட்கள் செவ்வனே தன் வேலையை செய்தன.

மாலை இருட்டிக்கொண்டு வந்தது.வானவெளியில் முகில்கள் படையெடுத்துச் சென்று கொண்டிருந்தன.சிறு சாரல்துளிகள் மண்வாசனையை ஏற்படுத்த தயாராயின.மாணவர்களோடு கலந்து வெளியே வந்து கொண்டிருந்த ஜானகி,பள்ளிகூட வாசலில் நின்று மறுபடியும் அந்த வீட்டை நோக்கினாள்.இப்பொழுது நிழலாடியது அவ்வீட்டில்.

காலம் யாருக்கும் வஞ்சகமில்லாது மாற்றத்தை கொடுத்திருக்கிறதே?நீ கூட எப்படி மாறி விட்டாய்!..மழையை வேடிக்கை காண்பிக்க கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு..அட  அது உன் மனைவியா.. அழகாயிருக்காளே!”

அந்நிழல்களை பார்த்து,தானே மனதுக்குள் பேசிக்கொண்டாள்.சாரலின் வேகம் இப்பொழுது அதிகரித்திருந்தது.நீர்த்துளிகள் இப்பொழுது அவளது ஆடையை மட்டுமல்ல,மனதையும் நனைத்தது.வாசனை மண்ணிலிருந்தும்,அவளது நினைவிலிருந்தும் கசியத்தொடங்கின.

15 comments:

Anonymous said...

ethukunga ivalavu sogam

கார்த்திகைப் பாண்டியன் said...

பழக்கப்பட்ட கதைதான்.. ஆனால் கதை சொல்லிய விதம் அருமை.. காலத்தின் மாற்றத்தை சொல்லும் கடைசி முடிவு.. நல்லா இருந்தது தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

தப்பா எடுத்துக்காதீங்க.. ஈரோடு டூ மதுரை போற வழில எங்க இருந்துங்க மேலூர் வந்தது? அவ்வவ்....

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க!!!
அன்புடன் அருணா

Rajeswari said...

கார்த்திகைப் பாண்டியன் said...
தப்பா எடுத்துக்காதீங்க.. ஈரோடு டூ மதுரை போற வழில எங்க இருந்துங்க மேலூர் வந்தது? அவ்வவ்..../

அய்யய்யோ..சரி ரூட்ட மாத்திக்குங்க..ஈரோடு டூ திருச்சி டூ மதுர..வெயில்ல கொஞ்ஜம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க பாண்டியன்..

" உழவன் " " Uzhavan " said...

நண்பர் கா.பாண்டியன் சொன்னதுபோல், காலத்தின் மாற்றத்தை சொல்லும் கடைசி முடிவு நன்று

thevanmayam said...

அந்நிழல்களை பார்த்து,தானே மனதுக்குள் பேசிக்கொண்டாள்.சாரலின் வேகம் இப்பொழுது அதிகரித்திருந்தது.நீர்த்துளிகள் இப்பொழுது அவளது ஆடையை மட்டுமல்ல,மனதையும் நனைத்தது.வாசனை மண்ணிலிருந்தும்,அவளது நினைவிலிருந்தும் கசியத்தொடங்கின.
///

ஃபினிஷிங் டச்சிங்க்!!

thevanmayam said...

கார்த்திகைப் பாண்டியன் said...
தப்பா எடுத்துக்காதீங்க.. ஈரோடு டூ மதுரை போற வழில எங்க இருந்துங்க மேலூர் வந்தது? அவ்வவ்..../

அய்யய்யோ..சரி ரூட்ட மாத்திக்குங்க..ஈரோடு டூ திருச்சி டூ மதுர..வெயில்ல கொஞ்ஜம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க பாண்டியன்.///

என்னப்பா இது? திருச்சி-- மதுரை இல்ல போட்டுருக்கு? குழப்புறியளே!!

Rajeswari said...

//// thevanmayam said...
கார்த்திகைப் பாண்டியன் said...
தப்பா எடுத்துக்காதீங்க.. ஈரோடு டூ மதுரை போற வழில எங்க இருந்துங்க மேலூர் வந்தது? அவ்வவ்..../

அய்யய்யோ..சரி ரூட்ட மாத்திக்குங்க..ஈரோடு டூ திருச்சி டூ மதுர..வெயில்ல கொஞ்ஜம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க பாண்டியன்.///

என்னப்பா இது? திருச்சி-- மதுரை இல்ல போட்டுருக்கு? குழப்புறியளே!////

முதலில் ஈரோடு என்றுதான் எழுதியிருந்தேன்.பிறகு மாற்றிவிட்டேன்

வண்ணத்துபூச்சியார் said...

அருமை.. எழுத்தும் நடையும் சூப்பர்.

வாழ்த்துகள்.

சொல்லரசன் said...

//நீர்த்துளிகள் இப்பொழுது அவளது ஆடையை மட்டுமல்ல,மனதையும் நனைத்தது.//

கதை எங்கள் மனதையும் நனைத்தது,வாழ்த்துகள்

தேனீ - சுந்தர் said...

/" உழவன் " " Uzhavan " said...
நண்பர் கா.பாண்டியன் சொன்னதுபோல், காலத்தின் மாற்றத்தை சொல்லும் கடைசி முடிவு நன்று//. என்ன அழகான பெயர் , கார்த்திகை பாண்டியன், அத சுருக்கி கா.பாண்டியன் , ஆக்கிட்டாங்களே, தா. பாண்டியன் மாதிரி இருக்கு.

தேனீ - சுந்தர் said...

அக்கா, சோகமா எழுதாதீங்க, சந்தோசமா எழுதுங்க,

Vani said...

koncham neram yosichen epdi ezhuthrathunnu... ethuvum puripadalai... piragu thaan purinchathu ungal kathaiyai vida nadaiyai rasithennu. yathaartha virumbiya..oru rasanaiyana nadaiyudan irukra ungal ezhuthu romba nalla iruku.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கதை போக்கு,... கொஞம் சோகம்.. நன்றாக இருக்கு சகோதரி