Saturday, July 11, 2009

எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி

சமீபத்திய எனது வாசிப்புகளில் , வெம்மையின் உக்கிரத்தை, என்னுள் , எழுத்துக்கள் மூலம் பாய்ச்சிய உணர்வை உண்டாகியது எஸ்.ரா அவர்களின் "நெடுங்குருதி" நாவல். விவசாயம் மறந்த, அனல் விழுங்கும் ஓர் கிராமத்தை "வேம்பலை" எனும் ஊர் மூலம் , பல படிமங்களில் நம் கண் முன்னே விரிய விட்டிருக்கிறார் ஆசிரியர்.

பால்ய நினைவுகளையும் , பாழ்பட்டு போன பல மனித வாழ்க்கைகளையும் , சிதிலடைந்து போன வீடுகளின் வரலாறுகளையும் , பன்முக நுணுக்கமாய் கையாளப்படிருக்கிறது இந்நாவலில். களவே தொழிலாக கொண்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த , ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வே , இந்நாவலின் கதை மாந்தராய் விளங்குவது ,ஓர் சிறப்பான அம்சமாகும் .இரு தலைமுறைகளின் வாழ்வை , கோடைகாலம் , காற்றடி காலம், மழை காலம், பனிக் காலம் என நான்கு நிலைகளில் கோர்க்கப்பட்டிருக்கிறது . வாசிப்பின் இடையே , பல இடங்களில் நிறுத்தி , நாவலின் அப்போதைய நிகழ்வை , கற்பனை செய்து ரசிக்கும்படியாய் உள்ளது. ஒரு சிறு விடயத்தை கூட , அருகே நடக்கும் பிம்பமாய் உரு படுத்தி இருப்பது பிரம்மிப்புக்குரியது.பல உதாரணங்களை மேற்கோள் காட்டலாம். அவற்றில் ஒன்று சென்னம்மா. பொதுவாக கதைகளில், முக்கிய கதை மாந்தர்கள் பொருட்டு தரும் வருணனை , ஏனோ சுற்றியிருப்பவர்களுக்கு இல்லா சாபமாகிவிடும். ஆனால் நெடுங்குருதியில் சென்னமாவின் பாத்திரம் உலாவும் மணித்துளிகள் சிறிதே ஆனாலும் , அவரைப்பற்றி ஆசிரியர் மூலம் , நம்மில் எழும் பிம்பங்கள் ..அடேயப்பா! வார்த்தைகளில் வரையறுக்க முடியாதவை. தலைமுறை தாண்டியும் அவளை வேம்பலையில் இணைத்திருப்பது ,கதையின் யதார்த்தத்தையும் , ஆசிரியரின் திறனையும் காட்டுகிறது.நாகுவின் சகோதரிகளாக வரும் நீலாவும் ,வேணியும் வேம்பலையை அழகு படுத்துகிறார்கள். நாகுவின் அய்யா, அம்மா, தாத்தா இவர்களுடைய வாழ்வியல் முறைகள் , இயல்பான கிராமிய மனிதர்களின் நிலைப்பாடு. அதுவும், அய்யா களவிற்கு சென்று விட்டு திரும்பும் போது, கொண்டுவரும் அரிக்கேன் விளக்கும் , அதைப்பற்றிய நிகழ்வுகளும் ,நாமும் அவர்களுடன் வாழ்வதை போன்றதொரு நிலையை ஏற்படுத்துகிறது.


ரத்னாவதியின் வாழ்வு, ஏனோ மனதை நெகிழவைத்து, இறுதியில் நிசப்தத்தை சுவாசிக்க செய்வது போல் இருந்தது. திருமாலின் வாழ்பனுவங்கள் வித்தியாசமான ,ஏக்கத்திற்குரிய குறிப்புகள். வசந்தாவின் நட்பும், திருமண வாழ்வும் கிராமத்து பெண்களுக்கே உரிய ஓடங்கள். இந்நாவலின் ஒவ்வொரு எழுத்துக்களும், உயிர் பெற்று எழுந்து வந்து ,நம் குருதியில் கலந்துவிட்டதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது.


நாவலைப் படித்த பின்பும், சருகாகிப்போன வேம்பலையை பற்றிய பசுமையான நினைவலைகளும், நாமும் அங்கே வாழ்ந்தோம் என்ற எண்ணமும் ஓங்குகிறது. கோடையின் வெப்பத்தை கூட ரசிக்க வைத்த நாவல் நெடுங்குருதி. தார்ச்சாலைகளில் நடக்கும்போது ஏற்படும் வியர்வைத்துளிகள் கூட வேம்பலையை ஞாபகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


“கோணங்கி எனும் மாயக்கதையாளன்” எனும் கட்டுரையில் (ஜீன் 2009, உயிர்மை) , கோணங்கி கூறியிருப்பதாய் சில விசயங்களை எஸ்.ரா கூறியிருப்பார். அஃதாவது, “எழுத்தாளன் மண்புழுவைப்போல கிராமத்து மண்ணை தின்று ஊர்ந்து திரிய வேண்டும். இருட்டுக்குள் கால் பின்னப்பட்டு நிற்கும் கழுதையின் மெளனம் புரிய வேண்டும்” என்று. இவையனைத்தும் எஸ்.ராவிற்கு பொருந்துமாகையால், அவருடைய “நெடுங்குருதி” தவிர்க்க முடியாத முக்கியமான நாவலாய் ஆகிவிட்டது.35 comments:

தேவன் மாயம் said...

நாவலைப் படித்த பின்பும், சருகாகிப்போன வேம்பலையை பற்றிய பசுமையான நினைவலைகளும், நாமும் அங்கே வாழ்ந்தோம் என்ற எண்ணமும் ஓங்குகிறது///
நல்லா விவரித்துள்ளீர்கள்!!!

தேவன் மாயம் said...

“கோணங்கி எனும் மாயக்கதையாளன்” எனும் கட்டுரையில் (ஜீன் 2009, உயிர்மை) , கோணங்கி கூறியிருப்பதாய் சில விசயங்களை எஸ்.ரா கூறியிருப்பார்./

கோணங்கி படித்துள்ளீரா?

செந்தழல் ரவி said...

நன்றி.........!!!!!

இய‌ற்கை said...

padikka thoondukirathu:-)

அபுஅஃப்ஸர் said...

நாவலைப்பற்றி விளக்கிய விதம் அருமை

இப்போவே படிக்கனும்போல தோனுது.. இந்த பாலைவனத்துலே எங்கேனு போய் தேடுறது

லின்க் இருந்தா கொடுங்கோ

Rajeswari said...

அபுஅஃப்ஸர் said...
நாவலைப்பற்றி விளக்கிய விதம் அருமை

இப்போவே படிக்கனும்போல தோனுது.. இந்த பாலைவனத்துலே எங்கேனு போய் தேடுறது

லின்க் இருந்தா கொடுங்கோ

//

இந்த பதிவிலேயே லின்க் கொடுத்து இருந்தேன் ஆன்லைனில் வாங்க.. ஆதலால் தான் என்னவோ தமிழிஷில் தொடரும் இடுக்கையில் இருந்த எனது பதிவு சில நிமிடங்களிலே காணாமல் போய்விட்டது.

இப்போ நீங்க கேட்டதால் இங்கே தருகிறேன். இதோ அந்த சுட்டி

http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=14

நாமக்கல் சிபி said...

நூல் விமர்சனம் அருமை
உடனே படிக்கத் தூண்டும்படியாக இருக்கிறது

குடந்தை அன்புமணி said...

புத்தக விமர்சனம் நன்றாக எழுதியுள்ளீர்கள்.வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் எண்ணிக்கை கூடியிருக்கிறது. விரைவில் வாசிக்க வேண்டும். மிக்க நன்றி.

ஜீவன் said...

நல்ல நேர்த்தியான நூல் விமர்சனம்! புத்தகங்கள் படிக்கும் பழக்கம் விட்டு பல காலங்கள்
ஆகி விட்டது! இது போன்ற விமர்சனங்களை படிக்கும்போது மீண்டும் படிக்கவேண்டும்
என்ற ஆவல் பிறக்கின்றது!!

R.Gopi said...

எஸ்.ரா.நாவலை நீங்கள் விவரித்த விதம், அந்த நாவலை இப்போதே படிக்க தூண்டுகிறது..

//அபுஅஃப்ஸர் said...
நாவலைப்பற்றி விளக்கிய விதம் அருமை

இப்போவே படிக்கணும்னு தோணுது.... இந்த பாலைவனத்துலே எங்கேனு போய் தேடுறது//

இவர் சொல்றது போல, நானும் கேக்கனும்னு நெனைச்சேன்.... ஆனா, அதுக்கு வேலையே இல்லாம, லிங்க் கொடுத்து விட்டீர்கள். தங்களுக்கு நன்றி......

நீங்கள் நிறைய படிப்பீர்களோ??

"அகநாழிகை" said...

ராஜி,
உங்கள் வாசிப்பார்வத்தை வரவேற்கிறேன். நெடுங்குருதி வெளியான உடன் வாசித்தேன். உங்கள் பகிர்வின் வழியே மறுமுறை வாசிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. முடிந்தால் எஸ்.ராவின் உறுபசியும் வாசியுங்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

VISA said...

வண்ணதாசன் படித்துக்கொண்டிருக்கிறேன். கோணங்கி படிக்க ஆசை. நீங்கள் படித்திருக்கிறீர்களா? புத்தகம் எங்கு கிடைக்கும். எஸ்.ரா. இன்னும் நான் தொடாத தூரத்தில் இருக்கிறார். விரைவில். உங்கள் கட்டுரை பார்த்த பிறகு படித்தாக வேண்டும் என்ற ஆவல் நீள்கிறது.

Rajeswari said...

தேவன் மாயம் said...
“கோணங்கி எனும் மாயக்கதையாளன்” எனும் கட்டுரையில் (ஜீன் 2009, உயிர்மை) , கோணங்கி கூறியிருப்பதாய் சில விசயங்களை எஸ்.ரா கூறியிருப்பார்./

கோணங்கி படித்துள்ளீரா?
//
நன்றி தேவா சார்.. இல்லை நான் கோணங்கியை இன்னும் படித்ததில்லை. இனிமேல்தான்!

Rajeswari said...

நன்றி இயற்கை

நன்றி செந்தழல்ரவி

Rajeswari said...

நன்றி அபுஅப்சர்

நன்றி நாமக்கல்சிபி,

நன்றி குடந்தைமணி,

நன்றி ஜீவன்,

நன்றி கோபி

Rajeswari said...

"அகநாழிகை" said...
ராஜி,
உங்கள் வாசிப்பார்வத்தை வரவேற்கிறேன். நெடுங்குருதி வெளியான உடன் வாசித்தேன். உங்கள் பகிர்வின் வழியே மறுமுறை வாசிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. முடிந்தால் எஸ்.ராவின் உறுபசியும் வாசியுங்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
///

உறுபசியை கண்டிப்பாக வாசிக்கிறேன்.

Rajeswari said...

VISA said...
வண்ணதாசன் படித்துக்கொண்டிருக்கிறேன். கோணங்கி படிக்க ஆசை. நீங்கள் படித்திருக்கிறீர்களா? புத்தகம் எங்கு கிடைக்கும். எஸ்.ரா. இன்னும் நான் தொடாத தூரத்தில் இருக்கிறார். விரைவில். உங்கள் கட்டுரை பார்த்த பிறகு படித்தாக வேண்டும் என்ற ஆவல் நீள்கிறது.
//

கோணங்கியின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்பது விருபாவில் (viruba.com)பார்த்தால் தெரியும் என்று நினைக்கிறேன்.மற்றபடி எஸ்.ராவின் புத்தகங்கள் உயிர்மையிலே(uyirmmai.com) கிடைக்கும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நிறைய படிக்கிறீர்கள்,
நன்று!
வாழ்த்துகள்...

sakthi said...

தலைமுறை தாண்டியும் அவளை வேம்பலையில் இணைத்திருப்பது ,கதையின் யதார்த்தத்தையும் , ஆசிரியரின் திறனையும் காட்டுகிறது.

உங்கள் விமர்சனம் படிக்க தூண்டுகிறது

அ.மு.செய்யது said...

கலக்கலா ரிவியூவ் பண்ணியிருக்கீங்கக்கா..

நானும் நெடுங்குருதியும்,உறுபசியும் வாங்கணும்னு எவ்வளவோ இங்க ட்ரை பண்ணிட்டேன்.

அலுவலகத்தில் உயிர்மையும் ப்ளாக்ட்.

Anonymous said...

//உறுபசியை கண்டிப்பாக வாசிக்கிறேன்//
ஆகா...வேண்டாங்க...உலர்ந்த வார்த்தைகளால் 140 பக்கம் தோரணம் கட்டியிருப்பார்...

coolzkarthi said...

அக்கா நல்ல விமர்சனம்.....

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க ராஜேஸ்வரி!

Rajeswari said...

நன்றி ஜோதிபாரதி,

நன்றி சக்தி,

நன்றி அ.மு.செய்யது

Rajeswari said...

// mrcritic said...
//உறுபசியை கண்டிப்பாக வாசிக்கிறேன்//
ஆகா...வேண்டாங்க...உலர்ந்த வார்த்தைகளால் 140 பக்கம் தோரணம் கட்டியிருப்பார்...
//

அப்படியா..படிச்சுதான் பார்க்கிறேனே..

Rajeswari said...

நன்றி கார்த்தி,

நன்றி அருணா

Rajeswari said...

இப்பதிவு ,நானும் இந்நாவலை படித்தேன் என்ற பகிர்வும், என் எண்ணங்களும் மட்டுமேயன்றி ,பல பேர் சொல்லியிருப்பது போல நாவலின் விமர்சனம் அல்ல.

நட்புடன் ஜமால் said...

நல்ல விமர்சணம்.

அவசியம் இந்த புக் கிடைக்குதான்னு பார்க்கனும்.

இன்னும் எஸ்.ராவை பழகவில்லை.

நன்றிங்க ...

Joe said...

நல்ல விமர்சனம்.
விரைவில் புத்தகம் வாங்கிப் படிக்க முயல்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி.

ரொம்ப நாளா வாங்கி படிக்கனும்னு நெனச்ச நாவல் இது.

அழகான விமர்சனம்

Vani said...

எஸ்.ரா அவர்களின் படைப்புகள் அதிகம் வாசித்தது இல்லை...
' தேசாந்திரி ' தவிர... ஆனா உங்க விமர்சனம் படித்த பிறகு ஊர் வரும் போது கண்டிப்பா வாங்க வேண்டுமென்று முடிவு செய்துள்ளேன்.
சம்பவங்களை மட்டும் சொல்லாமல் கதாபாத்திரங்களை ஆழ்ந்து சிந்தித்திருப்பது ரொம்ப நல்ல போக்கு...
நிறைய சொல்ல நினைத்தேன்...ஆனா தமிழில் type செய்ய ரொம்ப நேரம் ஆகுதுங்க.... :(
இந்த மாதிரி இன்னும் பல நல்ல படைப்புகள் படியுங்கள்...பகிர்ந்து கொள்ளுங்கள்...

தமிழன்-கறுப்பி... said...

படிக்கணும்னு நினைச்சிட்டிருக்கிற புத்தகம் பகிர்வுக்கு நன்றி.

ஆதவா said...

இன்னும் முழுதாய் படிக்கவில்லை!! மேல்நோக்கியதில்.... சிறப்பான எழுத்தாக்கம் தெரிந்தது!!! நாளை வந்து படிக்கிறேன்!!

முரளிகுமார் பத்மநாபன் said...

எஸ்.ராவின் எழுத்துக்களில் ஈர்க்கப்பட்ட வாசகர்களில் நானும் ஒருவன். நெடுங்குருதி வாசித்திருக்கிறேன். நினைவெழுப்பியதற்கு நன்றி

J.S.ஞானசேகர் said...

எனது விருப்பப் புதினங்களில் ஒன்று.

சில பக்கங்களில் வெயிலின் வெக்கையையும், எறும்பூறும் உணர்வையும் படிப்பவருக்குத் தரும் அருமையான புத்தகம்.

பாம்பு கடித்து ஒருவர் இறக்கும் காட்சியையும், லாட்ஜ் பற்றியும் அருமையாக எழுதியிருப்பார்.